ரஜினி ஹீரோவாக நடித்த படம்.. ஆனால் டைட்டிலில் வில்லன் பெயர் தான் முதலில்.. எப்படி ஒப்புக்கொண்டார்?

Published:

ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தின் டைட்டிலில் வில்லன் பெயர் முதலில் போட்டுவிட்டு இரண்டாவதாக ரஜினிகாந்தின் பெயர் டைட்டில் போட்டார்கள் என்றால் யாராவது நம்புவார்களா? ஆனால் இது உண்மையில் நடந்தது. அதுதான் ‘பைரவி’ திரைப்படம்.

ரஜினிகாந்த் ஆரம்ப காலகட்டத்தில் வில்லன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில்தான் ‘பைரவி’ திரைப்படத்தை ரஜினியை ஹீரோவாக வைத்து எடுக்க கலைஞானம் முடிவு செய்தார். இந்த படத்தை முதலில் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ரஜினிகாந்த் ஹீரோ என்பதால் தேவர் பிலிம்ஸ் பின்வாங்கி விட்டது. வில்லனாக நடிக்கும் ரஜினியை ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுதான் தேவர் பிலிம்ஸ் எண்ணமாக இருந்தது.

ஒரே நாளில் வெளியான ரஜினி – கமல் இணைந்து நடித்த 2 படங்கள்.. அதன்பிறகு இருவரும் இணைந்து நடித்தார்களா?

ஆனால் கலைஞானம் முடிவில் உறுதியாக இருந்தார். இந்த படத்தில் ரஜினி தான் ஹீரோ, அதில் மாற்றமில்லை என்று கூறி, அதன் பிறகு அவரே இந்த படத்தை தயாரித்தார். இந்த படத்தை பாஸ்கர் என்பவர் இயக்கினார்.

bairavi 1

இந்த படத்தின் கதைப்படி ஸ்ரீகாந்த் அந்த ஊரின் பெரிய புள்ளி. அவரிடம் வேலைக்காரராக ரஜினிகாந்த் இருப்பார். ஸ்ரீகாந்த் செய்யும் பல அட்டூழியங்களுக்கு அவர் துணை செய்வார். அவர் செய்த சில அக்கிரமங்களுக்கு தானே பொறுப்பு ஏற்றுக்கொள்வார்.

இந்த நிலையில்தான் ஸ்ரீப்ரியாவின் வீட்டை அபகரிக்க ஸ்ரீகாந்த் நினைப்பார். ஸ்ரீப்ரியாவின் தந்தை வாங்கிய கடனுக்காக அந்த வீட்டை ஸ்ரீகாந்த் அபகரிக்க ரஜினியை வைத்தே மிரட்டுவார். அப்போது ரஜினி உண்மையில் நல்லவர் என்றும் வேலைக்கார விசுவாசம் காரணமாக இந்த பணிகளை செய்து வருகிறார் என்றும் ஸ்ரீப்ரியா புரிந்து கொள்வார். அவரை காதலிப்பதோடு அவரை ஸ்ரீகாந்த் இடமிருந்து பிரித்து நல்லவராக்குவார்.

ஒரு கட்டத்தில் சிறுவயதில் பிரிந்த ரஜினியின் தங்கையிடம் ஸ்ரீகாந்த் தவறாக நடந்து கொண்ட பிறகுதான் ரஜினி மற்றும் ஸ்ரீகாந்த் இடையே மோதல் ஏற்படும். ஸ்ரீப்ரியா உதவியுடன் ஸ்ரீகாந்த்தை ரஜினி எப்படி அடக்கினார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

தியாகராஜனை ஹீரோவாக்கிய படம்.. கமல், ரஜினி உச்சத்தில் இருந்தபோதே வெற்றி பெற்ற படம்..!

இந்த படம் 1978ஆம் ஆண்டு ஜூன் எட்டாம் தேதி வெளியானது. ரஜினிகாந்த் முதலில் ஹீரோவாக நடித்த படம் என்பதால் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தார். மேலும் அவர் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் கொடுத்தார்.

bairavi1

இந்த பட்டம் தனக்கு தேவை இல்லை என்று ரஜினி கூறினார். ஏனென்றால் அந்த காலகட்டத்தில் சிவாஜி கணேசன் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதேபோல் கமல்ஹாசன் பிரபலமான நடிகராக இருந்தார். இவர்கள் இருவரும் இருக்கும்போது தனக்கு ஏன் சூப்பர் ஸ்டார் பட்டம் என்று மறுத்தார். ஆனால் தாணு இந்த விஷயத்தில் ரஜினி பேச்சை கேட்கவில்லை. அனைத்து விளம்பரங்களிலும் சூப்பர் ஸ்டார் என்று பதிவு செய்தார்.

சென்னையில் உள்ள பிளாசா தியேட்டரில் ரஜினிக்கு 35அடி உயரத்தில் கட்அவுட் வைக்கப்பட்டது. சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இந்த படத்திற்கு மிகச் சிறப்பாக எஸ்.தாணு விளம்பரம் செய்ததன் காரணமாக இந்த படம் வெற்றி பெற்றது. ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த முதல் படமே வெற்றி பெற்றதால் அவருக்கு அதன் பிறகு ஹீரோ வாய்ப்புகள் குவிந்தது.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். நான்கு பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தன. அதில் நண்டூருது நரியூருது என்றபாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தாலும் இந்த படம் வந்த காலகட்டத்தில் ஸ்ரீகாந்த் ஹீரோவாக ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்றால் தனது பெயர்தான் டைட்டிலில் முதலில் போட வேண்டும் என்று நிபந்தனை விதித்து தான் இந்த படத்தில் ஸ்ரீகாந்த் நடித்ததாக கூறப்பட்டது. அதனால்தான் இந்த படத்தின் டைட்டில் ஸ்ரீகாந்த் பெயர் முதலிலும் அதன் பிறகு ரஜினி பெயரும் போடப்பட்டிருக்கும்.

ஒரே தீபாவளியில் ரிலீஸ் ஆன சிவாஜி, கமல், ரஜினி படங்கள்.. ஆனால் ஜெயித்தது பாக்யராஜ் தான்..!

ரஜினி ஹீரோவாக நடித்த படத்தில் ரஜினியின் பெயர் இரண்டாவதாக வருவது இந்த ஒரு படத்தில் மட்டும் தான். முன்னதாக இந்த படத்தில் வில்லனாக நடிக்க முத்துராமன் உள்பட பல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் ரஜினிக்கு வில்லனாக யாரும் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டார்கள். கடைசியில் அதிக சம்பளம், டைட்டிலில் முதலில் பெயர் உள்பட சில நிபந்தனைகளை விதித்து ஸ்ரீகாந்த் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...