ஆர் சுந்தர்ராஜன் இத்தனை படங்கள் இயக்கியுள்ளாரா? அதில் ஒன்று ரஜினி படம்..!

By Bala Siva

Published:

இன்றைய சினிமா ரசிகர்களுக்கு ஆர்.சுந்தர்ராஜன் ஒரு காமெடி மற்றும் குணசித்திர நடிகர் என்று மட்டுமே தெரியும். ஆனால் கடந்த 80கள் மற்றும் 90களில் அவர் ஒரு பிரபலமான இயக்குனர் என்பது பலரும் அறியாத உண்மை. அதுவும் ரஜினிகாந்த் உச்சத்தில் இருந்த போதே அவருடைய படத்தை இயக்கி அந்த படத்தை சூப்பர் ஹிட் ஆக்கியுள்ளார்.

இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் கோவையை சேர்ந்தவர். சிறு வயதிலேயே சினிமா மீது ஆர்வம் கொண்ட இவர் முதல் முதலாக கடந்த 1982ஆம் ஆண்டு ‘பயணங்கள் முடிவதில்லை’ என்ற திரைப்படத்தை இயக்கினார். தயாரிப்பாளர் கோவைத்தம்பியின் முதல் படத்தில்தான் சுந்தர்ராஜன் இயக்குனராக அறிமுகமானார். மோகன், பூர்ணிமா ஜெயராமன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஒரே தீபாவளியில் ரிலீஸ் ஆன சிவாஜி, கமல், ரஜினி படங்கள்.. ஆனால் ஜெயித்தது பாக்யராஜ் தான்..!

payanangal mudivathillai

இந்த படத்தின் வெற்றியை அடுத்து யார் இந்த சுந்தரராஜன்? என்று திரை உலகமே திரும்பி பார்த்தது. இதனையடுத்து அவரது சில படங்கள் சுமாரான வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் கோவைத்தம்பியுடன் இணைந்த ‘நான் பாடும் பாடல்’ நல்ல வரவேற்பு பெற்றது.

ஆனாலும் ஆர்.சுந்தரராஜனுக்கு ஒரு சிறந்த இயக்குனர் என்ற பெயர் வாங்கி கொடுத்த திரைப்படம் என்றால் அது ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற படம் தான். விஜயகாந்த், ரேவதி நடித்த இந்த படம் தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து திரையரங்களிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படமாகும்.

இதன் பிறகு அவர் ‘சுகமான ராகங்கள்’, ‘குங்குமச்சிமிழ்’ ஆகிய படங்களை இயக்கிய நிலையில் மீண்டும் விஜயகாந்துடன் இணைந்து ‘அம்மன் கோவில் கிழக்காலே’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் சில்வர் ஜூப்ளி படமாக அமைந்தது. இதன் பிறகு ‘மெல்ல திறந்தது கதவு’, ‘தழுவாத கைகள்’, ‘காலையும் நீயே மாலையும் நீயே’, ‘என் ஜீவன் பாடுது’ ஆகிய படங்களை இயக்கினார்.

ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

இந்த நிலையில்தான் முதல் முதலாக ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு ஆர்.சுந்தரராஜன் அவர்களுக்கு கிடைத்தது. அந்தப் படம்தான் ராஜாதி ராஜா. கடந்த 1989ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ராதா, நதியா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தை பாவலர் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் மிகப்பெரிய வசூல் செய்து சாதனை செய்தது. இந்த படம் தான் நதியா திருமணத்திற்கு முன் நடித்த கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Rajathi raja
Rajathi raja

‘ராஜாதி ராஜா’ வெற்றிக்குப் பிறகு அவருடைய சில படங்கள் சுமாரான வெற்றியை பெற்றது. குறிப்பாக ‘தாலாட்டு பாடவா’, ‘என்கிட்ட மோதாதே’, ‘சாமி போட்ட முடிச்சு’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் கடந்த 1992ஆம் ஆண்டு சத்யராஜ், சுகன்யா நடித்த திருமதி பழனிச்சாமி என்ற படம் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த காலகட்டத்தில் தான் ஆர்.சுந்தரராஜனுக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. 90களில் அவர் பிஸியான நடிகராக மாறியதால் அதன் பிறகு ஒரு சில படங்களை மட்டுமே இயக்கினார். 1997ஆம் ஆண்டு ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ என்ற படத்தை இயக்கிய ஆர்.சுந்தரராஜன், அதன் பிறகு ‘சுயம்வரம்’ படத்தின் ஒரு சில காட்சிகளை மட்டும் இயக்கினார். இதன் பிறகு அவர் 10 வருடங்களுக்கு மேல் திரைப்படமே இயக்கவில்லை. 2013ஆம் ஆண்டு ‘நிலாச்சோறு’ என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு அவர் படங்களை இயக்கவில்லை.

இருப்பினும் இன்று வரை நடிப்பில் பிஸியாக இருக்கிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். அதில் அவரது நடிப்பு சிறப்பாக உள்ளதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் இத்தனை படங்கள் இயக்கி உள்ளாரா? அதில் ஒன்று கமல் படம்..!

தமிழ் திரை உலகில் சுமார் 25 படங்களுக்கு மேல் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கி உள்ளார் என்பது 90ஸ் கிட்ஸ்களுக்கு தெரியும் என்றாலும் இன்றைய இளைய தலைமுறை சினிமா ரசிகர்களுக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கும்.