பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.
கிபி 2898 ஆம் ஆண்டு பல அழிவுகளுக்கு பிறகு கடைசியாக இருக்கும் நகரம் காசி. இந்த நகரத்தில் இருக்கும் இயற்கையை சுரண்டி அந்நகரில் வாழும் மக்களை வறுமையில் வைத்திருக்கும் கமல்ஹாசன் கேரக்டருக்கு எதிராக புரட்சி செய்யும் கதை தான் இந்த ‘கல்கி 2898 ஏடி படத்தின் கதை .
இந்த நிலையில் கர்ப்பிணியாக இருக்கும் தீபிகா படுகோன் கேரக்டரை சில ஆட்கள் குறிவைக்கிறார்கள். மறுபுறம் குருசேத்திரப் போர் நடந்த காலத்தில் இருந்து உயிருடன் இருக்கும் அமிதாப்பச்சன் மற்றும் ஷாம்பலா நகர தலைவி ஷோபனா ஆகியோர் தீபிகாவை காப்பாற்ற போராடுகிறார்கள். தீபிகாவுக்கும் இவர்கள் இருவருக்கும் என்ன தொடர்பு? தீபிகாவுக்கு குழந்தை பிறந்ததா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் செல்லும் திரைப்படம் தான் ‘கல்கி 2898 ஏடி
சண்டை காட்சிகள், பறக்கும் ஆக்சன் காட்சிகள் மற்றும் ஆங்காங்கே காமெடி என பிரபாஸ் தனது நடிப்பால் ஓரளவு கவர்ந்தாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது ஏமாற்றமே. அமிதாப்பச்சனுக்கு கதாநாயகனுக்கு இணையான கேரக்டர் இருக்கும் நிலையில் அவர் தனது அனுபவபூர்வ நடிப்பால் தனது கேரக்டரை மெருகேற்றி உள்ளார்.
தீபிகா படுகோனுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் அவர் வந்த சில காட்சிகள் திருப்தியாக உள்ளது. அதேபோல் கமல்ஹாசன் இரண்டே காட்சிகளில் வந்தாலும் அதிரடியாக நடித்துள்ளார். பசுபதி, அன்னாபென், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா உள்பட பல கேரக்டர்கள் இந்த படத்தில் இருந்தாலும் யாருக்குமே அழுத்தம் இல்லாத கேரக்டர் என்பதால் மனதில் நிற்க மறுக்கிறது. கௌரவ வேடத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டத்தையே இந்த படத்தில் காட்டி இருந்தாலும் எந்த கேரக்டரும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது துரதிஷ்டமே.
சேஸிங் காட்சிகள், கற்பனை உலகம், அதிரடி ஆக்சன் காட்சிகள் ஆகியவற்றை ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் ஒளிப்பதிவாளர் மற்றும் ஸ்டண்ட் இயக்குனர் வெற்றி பெற்று இருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் நீண்ட சண்டை காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துவதையும் தவிர்க்க முடியவில்லை.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்தின் வலு சேர்க்கிறது, கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் ஏஐ தொழில்நுட்ப காட்சிகளும் ரசிகர்களை கவர்கிறது. மொத்தத்தில் ஏஐ டெக்னாலஜி, மாயாஜாலம், புராணம், அறிவியல் என அனைத்தையும் ஒரே படத்தில் சேர்த்து ஒரு மாயாஜால சம்பவமே செய்திருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின். ஆனால் அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான லாஜிக் ஓட்டைகள் உள்ளன என்பதும் அவற்றை எல்லாம் சரி செய்து இருந்தால் இந்த படம் திருப்திகரமான படமாக அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.