பழங்காலத்து சினிமாக்களில் நாகேஷுக்கு முன்பு முதன் முதலாக காமெடி அரிதாரம் பூசியவர் சந்திரபாபு. தூத்துகுடியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர். இளமைக் காலங்களை இலங்கையில் கழித்த இவர் பின்னாளில் சென்னையில் குடியேறினார். பின்னர் சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்து 1947-ம் ஆண்டு அமராவதி என்ற படத்தில் முதன்முதலாகத் தலைகாட்டினார். தொடர்ந்து முன்னணி காமெடி நடிகராகி அப்போதுள்ள எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து நடித்துப் புகழ் பெற்றார்.
அருமையான காமெடி நடிகரான சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை மிகவும் சோகம் நிறைந்தது. திருமணம் ஆன அன்று முதல் இரவில் அவர் மனைவி வேறு ஒருவரை விரும்புவதாக கூற அன்று இரவே அவள் காதலனுடன் அனுப்பி வைத்தார். அந்த சம்பவம் இவரை பாதிக்க குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதற்கிடையில் அவர் நடித்த சபாஷ் மீனா நன்றாக ஓடியது, இனி கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று அறிவித்தார்.
இன்று சென்னை பாஷையில் பேசி நடிக்கும் நடிகர்களுக்கெல்லாம் முன்னோடி அவர்தான். கண்ணதாசன் எடுத்த கவலை இல்லா மனிதன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். பாடல்களில் தத்துவ மழை பொழிந்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
சிவாஜிக்கு முதல் படமான பராசக்தி இவருக்கும் முதல் படமாம் : வசனத்தில் இவர அடிச்சுக்க ஆளே இல்ல
பின்னர் எம்.ஜி.ஆரை வைத்து மாடி வீட்டு ஏழை என்ற படத்தை சொந்தமாக தயாரித்து இயக்கினார், ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது, ஒரு சில நாட்கள் பட பிடிப்பு நடந்தது, பின்பு எம்.ஜி.ஆர். படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்து விட்டார். காரணம் எம்.ஜி.ஆர் படத்தின் இசை, பாடல் வரிகள், உடன் நடிக்கும் நடிகர்கள் வரை அனைத்து விடயங்களிலும் தலையிட்டு தன் பாணியில் தனக்கு முக்கியத்துவம் இருக்கும் படி பார்த்துக் கொள்வார்.
சந்திரபாபு இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தான் கூறியபடி நடிக்க சொன்னார், மேலும் எம்.ஜி.ஆரை Mr.ராமசந்திரன் என்று பெயர் சொல்லியே அழைப்பார், யாரும் அவரை பெயர் சொல்லி அழைக்க தயங்கும் போது இவர் இப்படி கூப்பிட்டதால் எம்.ஜி.ஆர் வேறு ஒன்றும் பேசாமல் மறு நாளில் இருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் படம் நின்று போனது, சந்திரபாபுக்கு மிகுந்த நட்டம், மாடி வீட்டு ஏழை படம் எடுத்து உண்மையில் ஏழை ஆகி போனார்.
அவரின் சொந்த மாடி வீட்டையே விற்றார். அவரின் வீடு எப்படி என்றால் இவர் கார் நேரே முதல் தளத்துக்கு போகும்படி கட்டி இருந்தார். படம் நின்று சொத்துக்கள் விற்று கடனாளி ஆனார். இதுவும் அவரை மிகவும் பாதிக்க முழு நேர குடிகாரர் ஆனார். பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சிவாஜி கணேசன் தனது படங்களில் வாய்ப்பு கொடுத்தார். ஆயினும் கடன், குறைந்த வருவாய் என பல காரணங்களினால் தன் உடல் நலனை கவனிக்காமல் மதுவால் உடல் நலம் பாதிக்கப்பட்டு 1974 ல் இறந்தார் சந்திரபாபு.