சிவாஜிக்கு முதல் படமான பராசக்தி இவருக்கும் முதல் படமாம்… வசனத்தில் இவர அடிச்சுக்க ஆளே இல்ல!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பராசக்தி எப்படி ஒரு திருப்புமுனையாக அமைந்ததோ அதே படத்தில் அறிமுகமாகிய எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கும் அதற்குப் பின் லட்சிய நடிகர் என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்தது. வசன உச்சரிப்பில் ஜாம்பவானாகத் திகழும் எஸ்.எஸ்.ஆர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகிய மூவருக்கும் மிக நெருக்கமானவர்.

பராசக்தி படத்தில் தெள்ளிய தமிழில் கணீர் குரலோடு குணசேகரன் என்ற பாத்திரத்தில் இவரின் நடிப்பு சிவாஜிக்கு அடுத்தபடியாக யார் இந்த நடிகன் என்று ரசிகர்களால் பேசப்பட்டது. அடுத்தடுத்து பல படங்களில் வாய்ப்பு கிடைக்கப்பெற்று முன்னணி நடிகராக வலம் வரத் தொடங்கினார் எஸ்.எஸ். ஆர். ‘முதலாளி’, ‘தலைகொடுத்தான் தம்பி’, ‘எதையும் தாங்கும் இதயம்’, ‘குமுதம்’, ‘ரத்தக்கண்ணீர்’, ‘கை கொடுத்த தெய்வம்’, ‘பச்சை விளக்கு’, ‘குலதெய்வம்’, ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’, ‘தெய்வப்பிறவி’, ராஜாராணி’, ‘காஞ்சித்தலைவன்’, ‘ராஜா தேசிங்கு’, ‘ரங்கூன் ராதா’ என பல படங்கள் அவருக்கு புகழைத் தந்தன.

வீரம், சோகம், அழுகை, நகைச்சுவை என எந்த பாத்திரமானாலும் தன் தனித்த நடிப்பால் மற்றவர்களிலிருந்து வேறுபட்டு வரவேற்பை பெற்றவர் ராஜேந்திரன். அவரைப்போன்று தமிழை தெளிவாக உச்சரித்தவர்கள் அன்றைய திரையுலகில் சொர்ப்பமே.

மீண்டும் ஒன்று கூடப் போகும் தமிழ்த் திரையுலகம் : இது போராட்டத்துக்கு அல்ல போற்றுவதற்கு..!

பேரறிஞர் அண்ணாவின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த எஸ்.எஸ். ராஜேந்திரன் அவரையே தன் அரசியல் குருவாக ஏற்று அவரது தலைமையிலான தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். தான் கட்டிய இல்லத்திற்கு அண்ணாதுரை பெயரை சூட்டி மகிழ்ந்தார். அண்ணாவின் மீதும், பகுத்தறிவு கொள்கையில் தீவிர பற்றின் காரணமாக புராண இதிகாச படங்களில் இனி நடிப்பதில்லையென ஒருநாள் அறிவித்தார். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்திய அறிவிப்பு. காரணம், அப்போது புகழின் உச்சத்தில் அவர் இருந்தார் என்பதே.

1957-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேனி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் எஸ்.எஸ்.ஆர். போட்டியிட்டார். ஆனால் உதய சூரியன் சின்னம் கிடைக்காததால், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

1962ல் தேனி தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட்டார். இவருக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தார். எஸ்.எஸ்.ஆர். பிரசாரம் செய்த போது, அவர் மீது திராவகம் வீசப்பட்டது. அப்போது அவர் ஒதுங்கிக் கொண்டதால் மயிரிழையில் தப்பினார். 1962 ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். இந்தியாவில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த முதல் நடிகன் என்ற புகழும் அவருக்கு கிடைத்தது.

1952ல் பட உலகில் அடியெடுத்து வைத்த எஸ்.எஸ்.ஆர்., அனைத்து முன்னணி நடிகைகளுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். திரையுலகில் தன்னோடு இணைந்து பல படங்களில் நடித்த பிரபல நடிகை விஜயகுமாரியுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் என்ன காரணத்தாலோ இந்த திருமணம் நிலைக்கவில்லை. சில வருடங்களில் இருவரும் மனமொத்து பிரிந்தனர்.

முதல் மனைவி பங்கஜம் மறைவுக்குப் பிறகு 1974ம் ஆண்டு தாமரைச் செல்வியை எஸ்.எஸ்.ஆர். திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லட்சுமி என்ற மகளும், கண்ணன் என்ற மகனும் உள்ளனர். தமிழக அரசின் பாகவதர் விருது, கலைமாமணி விருது, சிறந்த நடிகருக்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை எஸ்.எஸ்.ஆர். பெற்று இருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...