கையில் காசில்லாமல் தவித்த எம்.ஜி.ஆர்… அப்படியும் வாரி வழங்கிய வள்ளல்… எப்படி தெரியுமா?

கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்கள், கலியுகக் கர்ணன், வள்ளல், பொன்மனச் செம்மல், கொடை வள்ளல் என்று இன்றும் மக்களால் போற்றப்படும் ஒரு மாபெரும் தலைவர் எம்.ஜி.ஆர். தான் சம்பாதித்த சொத்துக்களை ஏழை மக்களுக்காகவே செலவிட்டவர். அதனால் தான் இன்றும் பல வீடுகளில் தெய்வமாக வாழ்கிறார் எம்.ஜி.ஆர். ஆனால் அப்படிப்பட்ட கொடை வள்ளலுக்கே ஒருசமயம் பணம் இல்லாமல் இருக்க, இருந்த போதிலும் வாரி வழங்கியுள்ளார். எப்படி தெரியுமா?

அப்போது ஒரு சில மாதங்களில் பொங்கல் வர இருந்தது. எம்ஜிஆர் தன் நாடக நடிகர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருடன் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவார். அன்று தன்னைச் சந்திக்க வரும் அனைவருக்கும் அவர் பொங்கல் பரிசாக பணம் கொடுப்பது உண்டு. இந்த பொங்கல் செலவுக்கு அவருக்கு நிறைய பணம் தேவைப்பட்டது.

வாரி வழங்கும் வள்ளல் எப்போதும் செலவைக் குறைத்தது கிடையாது. உதயமானது ஒரு யோசனை. உடனே சாண்டோ சின்னப்பா தேவரை அழைத்து “ஒரே மாதத்தில் ஒரு படம் எடுக்க வேண்டும்; எனக்கு பொங்கல் செலவுக்கு எட்டு லட்ச ரூபாய் தேவைப்படுகிறது’‘ என்றார். அப்படி உருவானது தான் ‘விவசாயி‘ படம்.

தேவர் படம் எடுக்கும்போது ஒரு பழக்கம் உண்டு.  அதாவது முதல் தவணையில் சம்பளப் பணம் மொத்தமாக நடிகர்களிடம் கொடுத்துவிடுவார். அதே பழக்கத்திற்கு ஏற்ப எம்ஜிஆருக்கும் பணத்தை ரொக்கமாகக் கொடுத்துவிட்டு சத்யா ஸ்டுடியோவிலும் கோயமுத்தூர் விவசாயப் பண்ணையிலும் வைத்து படத்தை விரைவாக எடுத்து முடித்தார். பொங்கல் விழாவுக்கு மற்றவர்களுக்குச் செலவழிக்க வேண்டுமே என்பதற்காக எம்ஜிஆர் உழைத்துச் சம்பாதித்தார்.

மீண்டும் ஒன்று கூடப் போகும் தமிழ்த் திரையுலகம் : இது போராட்டத்துக்கு அல்ல போற்றுவதற்கு..!

விவசாயி படத்துக்கு பாட்டு எழுதுவது கண்ணதாசன், வாலி தவிர விவசாயத்தில் நன்கு அனுபவம் உடைய வேறு கவிஞர்கள் தேவைப்பட்டனர். எனவே எம்.ஜி.ஆர் மருதகாசியை அழைத்து பாடல்களை அவரைக் கொண்டு எழுதும்படி செய்தார். அவ்வாறு உருவான பாடல் தான் மருதகாசி எழுதிய “நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்“ என்ற பாடலும், “விவசாயி விவசாயி கடவுள் எனும் முதலாளி“ என்ற பாடலும்.

இவ்வாறு பொங்கல் தினத்தில் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு வாரி வழங்கியவர் மக்கள் திலகம்.