சான்ஸ் கேட்டுப் போன இடத்தில் பழைய நடிகர் பார்த்த வேலை… ஹீரோவாக அள்ளிக்கொண்ட இயக்குநர்

Published:

தாவணிக் கனவுகள் படத்தில் ஒரு காட்சி வரும். பாரதிராஜா சினிமா இயக்குவது போலவும் ஹீரோவுக்கு நடிப்பு சொல்லித் தருவது போன்ற காட்சி அது. அந்தக் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று பாக்கியராஜ் ராதிகாவிடம் நடித்துக் காட்ட அதை பார்த்த பாரதிராஜா நீதான் இந்தப் படத்துக்கு ஹீரோ என சான்ஸ் கொடுத்து நடிக்க வைப்பார்.

நிஜத்திலும் இது போன்ற ஒரு சம்பவத்தால் வாட்டசாட்டமான இளைஞன் ஒருவன் ஹீரோவாகும் வாய்ப்புப் பெற்றார் நம்ப முடிகிறதா? அது வேறுயாருமல்ல பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் தான்.

பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதர் அதுவரை சீரியசான படங்களை எடுத்துக் கொண்டிருந்த வேளையில் முதன்முதலாக காமெடிப் படம் இயக்கத் திட்டமிட்டிருந்தார். அதன்படி புதுமுகம் ஒருவரை ஹீரோவாக்க முயற்சித்தார்.

ஓர் ஒளிப்பதிவாளரின் பரிந்துரையின் பேரில் அந்த இளைஞன் அவரின் அலுவலகத்தில் உள்ளே நுழைந்தான். அவனது முகம் ஹீரோவிற்கான களையுடன் இருந்தது. ஆனால் நடிப்புப் பயிற்சி கிடையாது, ஒல்லியான தேகமாதலால் ‘நமக்கு சான்ஸ் கிடைக்காது’ என்று அந்த இளைஞனுக்கு உள்ளுக்குள் நன்கு தெரிந்திருந்தது.

50 படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்த ரியல் கணவன்-மனைவி : 50 வருடங்களில் 1200 படங்களுக்கு மேல் நடித்த சாதனைக்காரர்

அப்போது அலுவலகத்தில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அலட்சியமாக சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான். அச்சமயம் இயக்குநர் அங்கே வர இளைஞனோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. “சிகரெட்?” என்றபடி பாக்கெட்டை நீட்டி இயக்குநரை உபசரித்தான். சுற்றியுள்ளவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. இளைஞன் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டு வெளியேறப் போகிறான் என்றுதான் பலரும் நினைத்தார்கள்.

அப்போது தான் அந்த மேஜிக் நிகழ்ந்தது. “நீதான் என் அடுத்த படத்தோட ஹீரோ” என்று சொன்ன இயக்குநர் ஸ்ரீதர், அமைதியாக உள்ளே சென்று விட்டார். அவர் இயக்கவிருக்கிற புதிய படத்தின் கதாபாத்திரத்தின்படி அந்த ஹீரோ ‘துணிச்சலானவனாகவும் சற்று திமிருடனும்’ இருக்க வேண்டும். எனவே இளைஞன் செய்ததை தன் மீதான அவமதிப்பாக எடுத்துக் கொள்ளாமல், தன்னுடைய ‘ஹீரோ’ கிடைத்து விட்ட அடையாளமாக இயக்குநர் பார்த்தார்.

அந்த இளைஞன் தான் நடிகர் ரவிச்சந்திரன். அவரது நடிப்பில் வெளிவந்த பிளாக் பஸ்டர் திரைப்படம் தான் ‘காதலிக்க நேரமில்லை’. நாடக அனுபவமும், நடிப்பு ஆர்வமும் உள்ள எத்தனையோ இளைஞர்கள் சினிமா வாய்ப்பிற்காக முட்டி மோதிக் கொண்டிருந்த சமயத்தில், தங்கத் தட்டில் வைக்கப்பட்ட அந்த வாய்ப்பு ரவிச்சந்திரனை தேடி அடைந்ததை அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் முதன் முதலில் எடுக்கப்பட்ட ‘ஈஸ்ட்மென்’ வண்ணப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு மிக எளிதாக அவருக்கு கிடைத்தது.

மேலும் உங்களுக்காக...