உறவுகளின் ஆழத்தைச் சொல்லி தமிழ் சினிமாவில் எத்தனையோ பாடல்கள் வந்திருக்கின்றன. அவற்றில் சில குறிப்பிட்ட பாடல்கள் மட்டுமே காலத்திற்கும் நீங்காமல் நிலைத்திருக்கின்றன. உதாரணமாக தாய்க்கு அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை.., தாயிற்சிறந்த கோவிலுமில்லை.., அம்மா என்றழைக்காத.. கள்ளிக்காட்டில் பிறந்த தாயே.. ஆராரிராரோ நான் இங்கு பாட.. போன்ற பாடல்கள் தாயின் அருமையை உணர்த்தும்.
அதேபோல் அண்ணன்-தம்பி பாசத்தை தென்மதுரை வைகை நதி.. போன்ற சில பாடல்களும், மகள் பாசத்தை உணர்த்தும் வகையில் ஆனந்த யாழை மீட்டுகிறாள்.. கண்ணாண கண்ணே போன்ற பாடல்களும், மகன் பாசத்தை உணர்த்த குறும்பா.. குறும்பா.. பாடல்.. அண்ணன்-தங்கை பாசதிற்கு பாசமலர் முதல் இப்போது வரை பல பாடல்களும் வெளிவந்துள்ளது.
ஏன் தாய்மாமன் உறவுக்குக் கூட சில பாடல்கள் வந்துள்ளது. ஆனால் அக்கா-தம்பி பாசத்தை வைத்து வெளிவந்த பாடல்கள் மிக சொற்பம் எனலாம். நமக்குத் தெரிந்தவரை கருப்பு நிலா நீதான் கலங்குவதேன் என்ற பாடல் மட்டுமே தெரியும். ஆனால் ஒரு தம்பி அக்காவுக்காக இயற்றப்பட்ட ஒரு பாடல்தான் நா.முத்துக்குமாரின் வரிகளில் வெளிவந்த ‘கண்ணில் அன்பை சொல்வாளே..’ என்ற பாடல். தாய் இல்லாமல் வளரும் அக்கா, தம்பி உறவுக்கு இரண்டாவது தாயாக இருந்து தம்பியை வளர்ப்பது ஒரு அக்காவின் கடமை.
தனக்கு இன்னொரு தாயாக விளங்கும் அக்காவின் பாசத்தை உணர்த்தும் வகையில் சசிக்குமார் இயக்கிய ஈசன் படத்தில் நா.முத்துக்குமார் அழகான வரிகளில் அக்கா-தம்பியின் பாசத்தை உணர்த்தியிருப்பார்.
இவள் போலே இவளைப் போலே
வாழ்வில் நண்பர்கள் இல்லை
மறு ஜென்மம் வந்தால் கூட
நான் தான் இவளின் பிள்ளை
என்றும் என்றென்றும்
இவள் சொந்தம் வேண்டும்
போன்ற வரிகள் அக்கா-தம்பியின் உறவின் ஆழத்தை உணர்த்தும். இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் ஜேமஸ்வசந்தன். இந்தப் பாடலுக்கான கம்போஸிங்கின் போது இயக்குநர் சசிக்குமார் சுப்ரமணியபுரம் கண்கள் இரண்டால் பாடல் போல் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று ஆருடம் சொன்னாராம். ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்குப் போகாததால் பாடலும் சில நாட்கள் மட்டுமே நிலைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.
