தன்னை கடுமையாக விமர்சித்து எழுதிய பத்திரிகையாளருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ஷாக் : இறப்பின் போது நடந்த புல்லரிக்க வைக்கும் சம்பவம்

By John A

Published:

எம்.ஜி.ஆர் நடிகராக உச்சத்தில் இருக்கும் போதும், ஆட்சி அரியணையில் அமர்ந்த போதும் அவரை கண்டபடி தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்தார் பத்திரிக்கையாளர் ஒருவர். ஒருமுறை எம்.ஜி.ஆர். சத்யா ஸ்டுடியோ அருகில் செல்லும் போது மிதமிஞ்சிய குடியில் ரோட்டில் ஒருவர் கிடக்க அவ்வழியே சென்ற எம்.ஜி.ஆர் அவரை அடையாளம் கண்டு கொண்டார்.

தன்னை விமர்சித்து எழுதி வந்த பத்திரிக்கையாளர்தான் என்பதை தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர் உடனே தனது பாதுகாப்பு வாகனத்தில் அவரை ஏற்றி தி.நகரில் உள்ள பத்திரிக்கையாளர் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆரைக் கண்டதும் கும்பல் கூடிவிட்டது.

அந்த செய்தியாளரின் மனைவியிடம்ம், ‘ஏன் இப்படி இருக்கின்றார். இப்படியே ஏன் விட்டு வைத்துள்ளீர்கள்?’ என விசாரித்தார் எம்.ஜி.ஆர். அவர்களோ, ‘கல்லீரல் முழுதும் கெட்டுப்போய்விட்டது. இதற்குமேலும் அவரை காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள்” என்று கூறி, நாங்களும் முடிந்த அளவில் எச்சரிக்கையாக பார்த்துக் கொண்டாலும், இப்படி வெளியேறி விடுகின்றார்” எனக் கூறி வருந்தினார்கள்.

மனோரமாவை அழ வைத்த ரஜினிகாந்த்!.. இதற்குப் பின்னாடி இப்படி ஒரு சம்பவம் இருக்கா..?

பின் அக்குடும்ப நிலையை புரிந்துகொண்ட எம்ஜிஆர், தனது வாகனத்தை கல்யாணி மருத்துவமனைக்கு ஓட்டச் சொன்னார். அங்க அவரை அட்மிட் செய்து மூத்த மருத்துவர்களை அழைத்து, “எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இவருக்கு கொடுக்க வேண்டிய மருத்துவத்தைக் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டு, கோட்டைக்கு கிளம்பிச் சென்றார்.

அடுத்த சில மணி நேரத்தில், எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி மருத்துவமனைக்கு வந்து, வேண்டிய பணத்தைக் கட்டினார். சில நாட்களில் அவருக்கான அறுவைச் சிகிச்சையும் நடந்தேறியது. தினமும் மருத்துவமனைக்கு சென்றுவந்த எம்.ஜி.சக்ரபாணி, கடைசி நாளில் அவரை பொறுப்போடு வண்டியில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பியும் வைத்தார். எம்.ஜி.ஆரும் இடையில் ஓரிரு முறை நேரில் சென்று நலம் விசாரித்துவிட்டு போயிருக்கிறார்.

சில மாதங்களில் பத்திரிகையாளரின் உடல்நிலை நன்றாக தேறி, மீண்டும் நாளேட்டில் எழுதத் தொடங்கினார். மக்களின் நலனுக்காக வேண்டி, எம்ஜிஆரின் சில செயல்களை, திட்டங்களை எல்லாம் முன்பைவிட கடுமையாகவே விமர்சித்து எழுதி வந்தார்.

கோட்டையில் எப்போதாவது நேரெதிர் பார்த்துக்கொண்டால், அவரை சிரித்தபடி நலன் விசாரிப்பார் எம்ஜிஆர். பத்திரிகையாளரும் சிரித்தபடி பதிலளிப்பார். தொடக்கத்தில் முழுக்கைச் சட்டையை நன்றாக சுருட்டி மேலேற்றி விட்டுக்கொண்டிருந்த பழக்கத்தில் இருந்த பத்திரிகையாளர், மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு முழுக்கை சட்டையோடவே இருப்பார். மடித்து சுருட்டிக் கொள்வதுமில்லை. பேச்சிலும், செயலிலும் ஒரு நிதானம் மிக்கவராக இருந்தார்.

சில வருடங்களுக்குப் பின் அந்த பத்திரிகையாளர் இறந்து போகிறார். இறுதி சடங்கிற்காக அவரது சட்டையை கழட்டும்போதுதான் அவரது இடக்கையை பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி. ‘இது எம்ஜிஆர் கொடுத்த உயிர்’ என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. பார்த்தவர்களுக்கு வார்த்தைகள் எழவில்லை.

நூறு ரூபாய்க்கு உதவி செய்துவிட்டு, ஆயிரம் ரூபாய் கொடுத்து விளம்பரம் தேடிக்கொண்டிருந்த தலைவர்கள் மத்தியில்தான், தான் செய்த உதவிகளை சொல்லாமல் வாழ்ந்தவர் தான் இந்த கலியுகக் கர்ணன்.