மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கலியுகக் கர்ணன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இல்லையென்று வந்தவர்களுக்கு வாரி வழங்கி பலரது வாழ்வில் ஒளியேற்றியவர். மேலும் முதல்வராக இருந்த போது முதியோர் உதவித் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தி ஆதரவற்ற பல முதியோர்களின் கடைசி காலங்களை மகிழ்ச்சிகரமாக மாற்றிய பெரிய மனசுக்காரர். அவரைப் பற்றி எத்தனையோ விமர்சனங்கள் சினிமாவிலும், அரசியலிலும் வந்தாலும் அவர் செய்த தர்மத்தின் முன்னதாக அனைத்துமே தூசியாகப் பறந்து விட்டன.
இப்படி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் செய்த எத்தனையோ அற்புதங்களில் ஒன்று தான் 5 குடும்பங்களுக்கு வாழ்வில் ஒளியேற்றிய நிகழ்வு. அது சிவாஜி நடித்த மகாகவி காளிதாஸ் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் காளிதேவி சிலையின் முன் அமர்ந்து பாடுவது போன்ற காட்சிக்காக பிரம்மாண்ட செட் போடப்பட்டிருந்தது.
அப்போது மும்முரமாக ஷுட்டிங் நடந்து கொண்டிருந்த வேளையில், எதிர்பாராவிதமாக ஏற்பட்ட மின்கசிவினால் செட் தீப்பிடிக்க ஆரம்பித்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தீயை அணைக்க முற்பட்ட போது தீ விபத்தில் சிக்கி படக்குழுவினர் 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
இச்சம்பவம் அப்போது தமிழகத்தையே உலுக்கியது. மேலும் சினிமா கலைஞர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலையையும் இந்த விபத்து உணர்த்தியது. அப்போது தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்தும், நடிகர் நடிகைகள், உடன் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பிலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கணிசமான உதவித் தொகை வழங்கப்பட்டது.
இந்த கேள்வி கேட்கும் போது ரொம்ப வலிக்கும்… என்னோட கேரக்டர் இது தான்… பரத் எமோஷனல்…
இந்த விபத்து நடந்த சிறிது தூரத்தில்தான் எம்.ஜி.ஆரின் படம் ஒன்றின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இந்த விபத்து பற்றி கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் உடனே சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் அங்கிருந்தவர்கள் எம்.ஜி.ஆர். வந்துவிட்டார் ஏதாவது கணிசமான உதவித் தொகை கிடைக்கும் என மலைபோல் நம்பியிருந்தனர்.
ஆனால் எம்.ஜி.ஆர். துக்கம் மட்டும் விசாரித்து ஆறுதல் கூறிவிட்டுச் சென்று விட்டார். வந்தவர்களுக்கு அதிர்ச்சி. கேட்காமலேயே உதவி செய்த வள்ளல் இன்று ஒரு பைசா கூட தராமல் செல்கிறாரே என்று. ஆனால் மறுநாள் காலை நடந்ததுதான் ஆச்சர்யத்தின் உச்சம். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ராமாவரம் தோட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப்போது எம்.ஜி.ஆர். அவர்களை வரவேற்று சிறுதொழில் தொடங்குவதற்கான கருவிகளையும், அதற்கான இடத்தையும், மூல தனத்தையும் அளித்து உதவுகிறார்.
அப்போது நெகிழ்ச்சியுடன் எம்.ஜி.ஆரைப் பார்த்து கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்க.. எம்.ஜி.ஆர். வழக்கம் போல் தன் பொன்சிரிப்பையே பதிலாகத் தந்து அனுப்பி வைத்தார்.