விசுவால் அடையாளம் காட்டப்பட்டு விஸ்ரூப வளர்ச்சி கண்ட நடிகர்.. எம்.எஸ்.பாஸ்கர் திரை வாழ்க்கை

பார்க்கிங் படத்தில் வில்லன்களைக் காட்டிலும் கொடூர ஈகோ பிடித்த மனிதராக நடித்து இப்படியும் ஒரு ஆள் இருப்பானா என்று எரிச்சலடையும் வண்ணம் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவர்தான் எம்.எஸ்.பாஸ்கர். அதற்கு முன் அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பார்க்கிங் படம் அவரின் வேறொரு நடிப்புத் திறனைக் காட்டியது. நாகப்பட்டினம் மாவட்டதைச் சேர்ந்த எம்.எஸ். பாஸ்கரின் உறவினர் தான் நடிகர் செந்தாமரை.

ஒருமுறை இவரது சகோதரிக்கு பின்னனிக் குரல் கொடுக்கும் வாய்ப்பு வரவே அவருடன் சேர்ந்து பயணித்த எம்.எஸ்.பாஸ்கர் பின்னனி குரல் கொடுக்கும் கலைஞராக பணியாற்றத் தொடங்கினார்.

பல நடிகர்களுக்கு பின்னனிக் குரல் கொடுத்த எம்.எஸ்.பாஸ்கரை முதன் முதலில் சினிமாவில் நடிக்க வைத்தவர் இயக்குநர் துரை. புனித மலர் என்ற படத்தில் இவர் நடித்தார். ஒருதலைராகம் சங்கர் உள்ளிட்ட ஹீரோக்கள் நடித்த இப்படம் வெளிவரவில்லை. அதன்பின் நடிகரும், இயக்குநருமான விசு தனது திருமதி ஒரு வெகுமதி படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

இதுவே எம்.எஸ்.பாஸ்கருக்கு முதல் படமாக அமைந்தது. எனினும் டப்பிங் பணிகளே அதிகம் இருந்ததால் நடிப்பு வாய்ப்புகள் குறைவாகவே வந்தன. டப்பிங் பணிகளிலேயே தனது முழுகவனத்தையும் செலுத்தியவரை சீரியல் பக்கம் திருப்பியது மாயாவி மாரீசன் என்ற தொலைக்காட்சித் தொடர். இந்த சீரியலின் இயக்குநர் எம்.எஸ்.பாஸ்கரின் நண்பர் என்பதால் அவரை நடிக்க அழைத்திருக்கிறார். வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்த்துக் கொண்டிருந்தவருக்கு சீரியல் என்றாலும் பரவாயில்லை என நடிக்கத் தொடங்கினார்.

ஸ்டார் படத்தால் மீண்டும் ஸ்டாரான காதல் சுகுமார்.. 10 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் கொடுத்து அசத்தல்

இதில் வில்லனுக்கு உதவியாளர் வேடம். அடிக்கடி தனது மேனரிஸங்களால் அடிவாங்கிக் கொண்டே இருப்பார். இப்படி மாயாவி மாரீசன் தொடர் இவருக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுக்க, தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா.. பெரிய பாப்பா தொடர் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. இந்த சீரியலில் இவர் ஏற்று நடித்த பட்டாபி கதாபாத்திரம் உடன் ஆடிஷனுக்கு வந்த ஒருவரின் மேனரிஸத்தைப் பார்த்துக் கற்றுக் கொண்டாராம் எம்.எஸ்.பாஸ்கர்.

அதனைத் தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் மீண்டும் வர ஆரம்பித்தது மொழி, சிவகாசி, அட்டகாசம், எங்கள் அண்ணா போன்ற படங்களில் காமெடியனாக நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் எம்.எஸ்.பாஸ்கர். இப்படி தனது கடின உழைப்பின் மூலம் டப்பிங் கலைஞராக இருந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னனி குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார் எம்.எஸ்.பாஸ்கர். இவரது மகன் 96 படத்தில் இளம்வயது விஜய் சேதுபதியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews