இன்றும் முருங்கைக் காய் என்றாலே முந்தானை முடிச்சு படம் தான் ஞாபகத்திற்கு வரும். படத்தில் இடம்பெற்ற முருங்கைக் காய் காட்சி அவ்வளவு பிரபலமானது. 1983-ம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் முந்தானை முடிச்சு. இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நடித்து இயக்கிய இப்படம் வெள்ளி விழா கொண்டாடியது. இந்தப் படத்தில் தான் ஊர்வசி முதன்முதலாக அறிமுகமானார்.
விறுவிறு திரைக்கதையையும், சூப்பர் ஹிட் பாடல்களையும் கொண்ட முந்தானை முடிச்சு திரைப்படத்திற்கு முதன் முதலில் இசையமைக்க ஒப்பந்தமானவர் கங்கை அமரன் தான்.
கே.பாக்யராஜின் படங்களில் தொடர்ந்து பணியாற்றி கங்கை அமரன் அதன்பின் சில படங்களில் எம்.எஸ்.வி, இளையராஜாவுடன் இணைந்தார். இந்நிலையில் மீண்டும் கங்கை அமரன் முந்தானை முடிச்சு படத்தில் கே. பாக்யராஜுடன் இணையவிருந்தார். படத்தின் கதையை ஏவிஎம் சரவணன், கங்கை அமரன் ஆகியோரிடம் பாக்யராஜ் சொல்லும் போது இருவருக்குமே படத்தின் கதை மிகவும் பிடித்துப் போய் விட்டது.
அப்போது ஏவிஎம் சரவணன் பாக்யராஜிடம் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் படம் இன்னும் ஹிட் ஆகும் என தெரிவிக்க பாக்யராஜோ கங்கை அமரனுக்கு வாக்குக் கொடுத்திருந்தார். என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டிருக்க அப்போது கங்கை அமரன் வந்து இந்தப் படத்தில் அண்ணன் இசையமைக்கட்டும் என்று பாக்யராஜிடம் கூறியிருக்கிறார்.
ஒரு பைசா கூட தராத எம்.ஜி.ஆர்.. துக்கத்திலும் மறுநாள் நிகழ்ந்த அற்புதம்..
ஏன் என்று கேட்க, ஏவிஎம் சரவணன் அடுத்த இரு படங்களுக்கு நீங்கள் இசையமையுங்கள். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கட்டும் என்று கேட்டுக் கொண்டதால் அதனை தவிர்க்க முடியாமல் முந்தானை முடிச்சு படத்திலிருந்து இறுதியாக விலகியிருக்கிறார் கங்கை அமரன்.
இருப்பினும் இந்தப் படத்தில் அந்தி வரும் நேரம்.. கண்ண தொறக்கனும் சாமி.. வா வா வாத்தியாரே.. போன்ற பாடல்களையும் அவர் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் ஆகி பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா அப்போது எம்.ஜி.ஆர் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. பல இடங்களில் 100 நாட்கள் தாண்டி ஓடியது.