பசிக் கொடுமையால் தவித்த எம்.ஜி.ஆர்.. பின்னாளில் ஐ.நா.சபையே புகழ்ந்த சத்துணவுத்திட்டத்திற்கு வழிவகுத்த வறுமை

By John A

Published:

மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்., இலங்கையிலிருந்து கும்பகோணத்திற்குக் குடிபெயர்ந்த போது அங்குள்ள ஆனையடிப் பள்ளியில்தான் தொடக்கக் கல்வி பயின்றார். ஆனால் அந்தத் தொடக்கக் கல்வியே அவரது இறுதிக் கல்வியாகவும் முடிந்தது. காரணம் வறுமை. எம்.ஜி.ஆரின் அன்னை சத்யபாமா தனது இரு குழந்தைகளையும் வறுமையில் உழற்றாமல் மூன்று வேளை வயிராற சாப்பாடு கிடைக்கும் என்ற நோக்கில் நாடகக் கம்பெனியில் வேலைக்குச் சேர்த்து விட்டிருக்கிறார்.

இந்த நாடகக் கம்பெனியே எம்.ஜி.ஆர் மற்றும் அவரது சகோதரர் சக்ரபாணிக்கு பள்ளி, குடும்பம், வீடு என அனைத்துமாய் ஆனது.

ஆனால் நாடகக் கம்பெனியிலும் மூன்றுவேளை சாப்பாடு கிடைப்பது அபூர்வம் தான். நாடகக் கம்பெனியில் கிடைக்கும் வருமானத்தை வைத்து அனைவருக்கும் சோறுபோட வேண்டிய நிலை. எனவே குறிப்பிட்ட நாளில் நாடகத்தில் நடிப்பவர்களுக்கு மட்டுமே சாப்பாடு என்ற விதிமுறை இருந்ததால் சுழற்சி முறையில் நடிகர்களுக்கு சாப்பாடு அளிக்கப்பட்டது.

இவ்வாறு ஒருநாள் எம்.ஜி.ஆர் அப்போது சிறுவனாக இருந்தபோது சாப்பாட்டிற்காக பசியுடன் மற்ற நடிகர்களுடன் பந்தியில் அமர்ந்தார். அப்போது எம்.ஜி.ஆரைக் கவனித்த நாடகக் கம்பெனி மேலாளர். இன்றைய நாடகத்தில் நீ கிடையாது. எனவே இன்று உனக்கு சாப்பாடு கிடையாது என்று பந்தியில் அமர்ந்த சிறுவன் எம்.ஜி.ஆரை எழுப்பி விட்டு சாப்பாட்டுக் கூடத்துக்கு வெளியே விட்டு வந்தார்.

இனிமேல் இப்படி நடிக்க மாட்டேன்.. சென்சார் போர்டு அதிகாரிக்கு சத்தியம் செய்து கொடுத்த நாகேஷ்

அன்று பசிக்கொடுமையை அனுபவித்த எம்.ஜி.ஆரின் மனதில் ஆறாத ரணமாய் விழுந்த காயங்கள் தான் பின்னாளில் அவர் முதல்வரான பின் காமராசர் செயல்படுத்திய மதிய உணவுத் திட்டத்தினை சத்துணவுத் திட்டமாக மாற்றி பள்ளிப் பிள்ளைகள் சத்தாக வயிறார சாப்பிட வழிவகுத்தார். இந்த சத்துணவுத்திட்டத்தினை ஐ.நா. சபையே அப்போது பாராட்டியது.

எம்.ஜி.ஆர் எப்பொழுதுமே நன்றாகச் சாப்பிடும் பழக்கம் உடையவர்.அதுபோலவே தான் என்ன உணவு சாப்பிடுகிறாரோ அந்த உணவு தன்னுடன் இருக்கும் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புவார். தனிமையில் சாப்பிடும் பழக்கம் கிடையாத எம்.ஜி.ஆர். எப்பொழுதும் 10 பேர் தன்னுடன் சேர்ந்து சாப்பிட்டால்தான் அவருக்குத் திருப்தி உண்டாகுமாம்.

இப்படி தனது இளம் வயதில் கிடைத்த வறுமை அனுபவங்கள் மூலம் பசியை உணர்ந்த எம்.ஜி.ஆர். சாப்பாடு விஷயத்தில் யாராவது பாரபட்சம் காட்டினால் கடுங்கோபம் கொள்வாராம். எனவே தான் நடிக்கும் படங்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு போடப்படுவதை உறுதி செய்து கொள்வாராம்.