ஜப்பானில் எம்.ஜி.ஆர் செய்த அட்டகாசம்.. புலம்பி ஓடி திரிந்த நாகேஷ்!.. இப்படியல்லாம் நடந்திருக்கா..?

Published:

எம்.ஜி.ஆர் அவரே தயாரித்து இயக்கிய நடித்து வெளிவந்த திரைப்படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. இதில் சந்திரகலா, மஞ்சுளா, லதா, நாகேஷ், நம்பியார் என நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பர். மேலும் படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருப்பார். அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் மாபெரும் ஹிட்டடித்து வரவேற்பு பெற்றது. மேலும் பல தடைகளை தாண்டி வெளிவந்து எம்.ஜி.ஆரின் திரைப்பட வரலாற்றில் அதிக வசூலை குவித்த சாதனை படமாகவும் விளங்கியது. இப்படத்தில் நாகேஷை நடிக்க வைக்க முடிவு செய்து அவரை தன் வீட்டிற்கு வரவழைத்தார் எம்ஜிஆர்.

அப்போது, ‘என்னுடைய ஒரு படத்திற்காக ஜப்பான் செல்ல இருக்கிறோம் தயாராக இரு’ என்று சொல்லி உள்ளார். எம்.ஜி.ஆர் படம் என்ற உடனே ஆர்வத்தில் நாகேஷ் கதை எதுவும் கேட்காமல் ஓகே சொல்லிவிட்டார். எம்.ஜி.ஆரும் நாகேஷிற்கு கதை எதுவும் சொல்லாமல் ஜப்பானிற்கு அழைத்து சென்று விட்டார்.

கதையை போகும்போது சொல்வார் என நாகேஷ் எதிர்பார்த்து கொண்டிருக்கையில் கடைசி வரை அவருக்கு கதை எதுவும் சொல்லவில்லை. ஜப்பானில் உள்ள உலகப் பொருட்காட்சியில் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு தயார் செய்யப்பட்டது. அப்போதும் நாகேஷ் எம்.ஜி.ஆரிடம், “அண்ணே என்ன சீன் எடுக்குறீங்க” என்று கேட்டுள்ளார்.

உடனே எம்.ஜி.ஆர், “ஹீரோவை தேடுவது போல் காட்சி எடுக்கப்பட உள்ளது நீ போய் அதில் நடி” என்று சொல்லிவிட்டு போய்விட்டார். உடனே நாகேஷும் உலகப் பொருட்காட்சியில் அங்கே இங்கே என்று ஓடோடி கொண்டிருந்தார். கதை தெரியாமல் சீன் நடித்ததால் எம்.ஜி.ஆர் மீது அதிருப்தி அடைந்தார். கதை ஏதும் இல்லாமல் இப்படி நடிக்க சொல்றாரே இந்த படம் எங்க போய் முடிய போகுதோ என்று புலம்பி கொண்டே வந்துள்ளார். பின்னர் படபிடிப்பை முடித்துவிட்டு படக்குழு அனைவரும் சென்னை வந்தடைந்தனர்.

படப்பிடிப்பு காட்சிகளை எடிட் செய்து நாகேஷிற்கு எம்.ஜி.ஆர் போட்டுக் காட்டியுள்ளார். படத்தைப் பார்த்துவிட்டு அசந்து வாய் அடைத்து போய்விட்டாராம் நாகேஷ். “படம் எப்படி இருக்க போகுதோ, கதை ஏதும் இருக்கா, இவர் மட்டும் எடுத்துக்கிட்டே இருக்காரே என்று புலம்புனீர்களே.? இப்பொழுது உங்கள் சந்தேகத்திற்கு விடை கிடைத்ததா” என்று எம்ஜிஆர் கேட்டார். “அண்ணா நான் நினைத்ததெல்லாம் பொய்யாகி விட்டது” என்றாராம் நாகேஷ். இவ்வாறு உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை சித்ரா லட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் உங்களுக்காக...