சில படங்கள் உருவாகுவதற்கு முன்னால் உள்ள கதையைக் கேட்கும்போது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது. அப்படி ஒரு தரமான சம்பவம் தான் இது.
1962 தேர்தல் சமயத்திலே கதாசிரியர் ரவீந்திரனுடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு எம்ஜிஆர் போய்க்கொண்டு இருந்தார். கும்மிடிப்பூண்டிக்குப் பக்கத்தில் ஒரு பிராதான சாலையில் ரயில்வே கேட் ஒன்று இருந்தது. அந்தக் கேட்டை மூடுனா அவ்வளவு எளிதில் திறக்க மாட்டாங்க. அந்தக் கேட்டை மூடும்போது எம்ஜிஆரோட காரும் அங்கு நின்றது. அவரது காரின் எண் பலருக்கும் தெரியும் என்பதால் ரசிகர்கள் அங்கு சூழ்ந்து விட்டனர்.
அப்போது தான் தனக்கு முன்னால் நிற்கும் காரை எம்ஜிஆர் பார்க்கிறார். அதைப் பார்த்ததும் அந்தக் கார் பெருந்தலைவர் காமராஜரின் காராக இருக்குமோ என சந்தேகப்படுகிறார். உடனே உதவியாளர் சபாபதியைக் கூப்பிட்டு ‘அது ஐயா காமராஜரின் கார் தானான்னு பாருங்க’ன்னு சொல்கிறார். ‘அது ஐயா காமராஜரோட கார் தான்’னு சொல்றார். உடனே அவசரம் அவசரமாக காரில் இருந்து இறங்கி அங்கு போய் காமராஜரைப் பார்த்து வணக்கம் செலுத்துகிறார் எம்ஜிஆர்.

உடனே அவருக்குப் பதில் மரியாதை செலுத்தணும்னு காரை விட்டு இறங்க முயற்சிக்கிறார் காமராஜர். அதற்கு வேண்டாம். ‘நீங்க அங்கேயே இருங்க என்கிறார். என்ன இப்படி தனியா வர்றீங்க? செக்யூரிட்டி கூட இல்லாம’ன்னு கேட்கிறார் எம்ஜிஆர்.
அதற்கு ‘எனக்கு எதுக்கு செக்யூரிட்டி? என்ன யார் என்ன செஞ்சிடப் போறாங்க’ன்னு கேட்டாராம் காமராஜர். உடனே திரும்ப காருக்கு வந்ததும் எம்ஜிஆர் பக்கத்தில் இருந்த கதாசிரியர் ரவீந்திரனைப் பார்த்து இப்படி சொன்னாராம். ‘நமது அடுத்த படத்திற்கான கதை கிடைத்து விட்டது. காமராஜர் ஐயா தான் கதாநாயகன்.

எந்த சவாலும் இல்லாமல், இடுப்பிலே வாளும் இல்லாமல் எந்த அரசன் நாட்டைச் சுற்றி வருகிறானோ அவன் தான் உண்மையான அரசன். இதை அடிப்படையா வைத்து ஒரு கதை எழுதுங்க’ன்னு சொன்னார். அதுதான் அரசகட்டளை படம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
1967ல் எம்.ஜி.சக்கரபாணி இயக்கிய படம் அரசகட்டளை. படத்திற்கு இசை அமைத்தவர் கே.வி.மகாதேவன். பாடல்கள் எல்லாம் சூப்பர்ஹிட். எம்ஜிஆர், ஜெயலலிதா, சரோஜாதேவி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் புத்தம் புதிய, வேட்டையாடு விளையாடு, என்னைப் பாட வைத்தவன், பண்பாடும் பறவையே, முகத்தை பார்த்ததில்லை, எத்தனை காலம், ஆடிவா ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றுள்ளன.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


