இந்தியாவில் முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன நடிகர்.. எம்ஜிஆர், சிவாஜியை தூக்கி சாப்பிட்ட எஸ்.எஸ்.ஆர்..!

By Bala Siva

Published:

இந்தியாவிலேயே முதல் முதலாக ஒரு நடிகர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார் என்றால் அது இலட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன் என்ற எஸ்.எஸ்.ஆர் அவர்கள் தான். அதன் பிறகு தான் எம்ஜிஆர் உள்பட பல நடிகர்கள் எம்எல்ஏ ஆனார்கள்.

உசிலம்பட்டியைச் சேர்ந்த எஸ்எஸ் ராஜேந்திரன் சிறு வயதில் நாடகங்களில் நடித்த நிலையில் அதன் பிறகு அவரே ஒரு நாடக கம்பெனி நடத்தினார். அவரது நாடகங்கள் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றது.

ssr3

பெரியாரின் சீடராக இருந்த அவர் திராவிட கொள்கைகளில் ஊறியவர். கடைசிவரை சாமி படத்தில் அவர் நடிக்கவில்லை என்பதும் புராண படங்களில் நடிக்க முடியாது என்று பல வாய்ப்புகள் வந்த போது அதை தட்டி கழித்தவர்.

நாடகத்தின் மூலம் பிரபலமான எஸ்.எஸ்.ஆர், சிவாஜி கணேசன் அறிமுகமான ’பராசக்தி’ என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் பிச்சைக்காரன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.

அதன் பிறகு சிவாஜி கணேசன் உடன் ’பணம்’, ’மனோகரா’ உள்பட பல படங்களில் நடித்தார். எஸ்.எஸ்.ஆர் அவர்களுக்கு  மிகப் பெரிய புகழை பெற்று தந்த படங்களில் ஒன்று ’ரத்த கண்ணீர். அவர்  எம் ஆர் ராதாவுக்கு இணையாக இந்த படத்தில்  நடித்திருந்தார்.

ssr2

அதன் பிறகு ’குலமகள் ராதா’, ’குலதெய்வம்’, ’முதலாளி’, ’தை பிறந்தால் வழி பிறக்கும்’ போன்ற படங்களில் நடித்தார். இந்த நிலையில் தான் சாரதா என்ற புரட்சிகரமான கதை அம்சம் கொண்ட திரைப்படத்தில் எஸ்.எஸ்.ஆர்  நடித்த நிலையில் அந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்த விஜயகுமாரி உடன் காதல் ஏற்பட்டது.

ஏற்கனவே கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்ததால் எஸ்.எஸ்.ஆர் , விஜயகுமாரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அதன் பின் எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரியுடன் இணைந்து பல படங்களில் நடித்தார்.

எஸ்.எஸ்.ஆர் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ‘பூம்புகார். எஸ்.எஸ்.ஆர் மற்றும் விஜயகுமாரி ஆகிய இருவரும் கோவலன் – கண்ணகி கேரக்டர்களில் நடித்திருப்பார்கள். இந்த படத்திற்கு கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதியிருந்தார்.

இவர்களது திருமணம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. இருவரும் விவாகரத்து பெற்றனர். பின்னர் மூன்றாவதாக செல்வி என்ற பெண்ணை எஸ்.எஸ்.ஆர் திருமணம் செய்து கொண்டார். எஸ்.எஸ்.ஆர் அவர்களுக்கு மூன்று மனைவிகள் மூலம் மொத்தம் 8 குழந்தைகள். அவருடைய மகன்களில் கண்ணன் என்பவர் சிவாஜி கணேசன் நடித்த ‘கல்தூண்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ssr1

1952ல் தனது நடிப்புத் துறையில் பயணத்தை  தொடங்கிய எஸ்.எஸ்.ஆர்  1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவில் நடிக்கவில்லை. அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்து தான் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். 2008 ஆம் ஆண்டு ’தீக்குச்சி’ என்ற திரைப்படம் தான் அவரது கடைசி திரைப்படமாகும்.

இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு உடல் நல குறைவு காரணமாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 24ஆம் தேதி சிகிச்சையின் பலனின்றி காலமானார். இலட்சிய நடிகர் என்று இயல்பான நடிப்புக்கு பெயர் பெற்ற எஸ்.எஸ்.ஆர் படங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.