நடிகை நயன்தாரா சற்று முன் தனது எக்ஸ் பக்கத்தில், “இனி எனக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் வேண்டாம்” என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று ரசிகர்களும் திரையுலகினரும் நயன்தாராவை அழைத்து வருகின்றனர். இதனால், அவருடைய படங்களிலும் இந்த பெயர் டைட்டிலிலும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் வாழ்க்கை எப்போதும் ஒரு சிறந்த புத்தகமாகவே உள்ளது. உங்கள் அன்பும் ஆதரவுதான் அதற்கு அழகு சேர்த்துள்ளது. என் வெற்றியின் போது என் தோளில் சாய்ந்து பாராட்டிய நீங்கள், கடினமான நேரங்களில் என்னை தூக்கி நிறுத்தவும் தயங்கவில்லை.
உங்களில் பலர் என்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைத்து வருகிறீர்கள். உங்கள் ஆதரவால் உருவான இந்த பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். ஆனால், அதே நேரத்தில் இனிமேல் என்னை ‘நயன்தாரா’ என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில், என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது. ஒரு நடிகையாக மட்டுமின்றி, ஒரு தனி நபராகவும்! பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவையே. ஆனால் சில சமயங்களில், அவை நம்மை வேலையிலிருந்தும், தொழிலிலிருந்தும், உங்கள் அன்பான தொடர்பிலிருந்தும் பிரிக்கக்கூடும்” என்று கூறியுள்ளார்.
நயன்தாராவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.