ஏவிஎம் மெய்யப்பச் செட்டியார் குடும்பத்துடன் பெங்களூரு சென்ற போது ‘தி பேரன்ட் டிராப்’ என்ற ஆங்கிலப்படத்தைப் பார்த்தார். அவருக்கும், அவரது மகன் குமரனுக்கும் அந்தப் படம் ரொம்பப் பிடித்திருந்தது. இதைத் தமிழில் எடுத்தால் நிச்சயமாக வெற்றி பெறும் என்று நினைத்தனர். அந்தப் படத்தை ஏசி.திருலோகசந்தரைப் பார்க்கச் சொன்னபோது என்ன காரணத்தாலோ அவருக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை.
உடனே ஏவிஎம்மின் ஆஸ்தான திரைக்கதை ஆசிரியரான ஜாவர் சீத்தாராமனை அழைத்து அந்தப் படத்தைப் பார்க்கச் சொன்னார்கள். அவருக்கு நிச்சயமாக பிடிக்கும் என எண்ணினார் ஏவிஎம்.குமரன். ஆனால் ஜாவர் சீத்தாராமன் அவர் இந்தப் படத்துல கதை தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்ற மாதிரி இல்லை. நான் சென்னைக்குப் போய் யோசித்து விட்டு சொல்கிறேன்னாரு. அந்த விஷயத்தில் ஏவிஎம்.குமரனுக்கு ஏமாற்றம்தான்.
ஜி.வரலட்சுமி விமானப்பயணத்தில் ஜாவர் சீத்தாராமனைப் பார்த்ததும் எனக்கு ஒரு கதாபாத்திரம் கொடுங்கன்னாரு. உடனே ஜாவருக்கு ஒரு ஐடியா தோன்றியது. ஆங்கிலப்படத்தில் உள்ள ஒரு வேடம் இவருக்குக் கச்சிதமாகப் பொருந்தியது. அவரை இந்த கேரக்டரில் நடிக்க வைத்தால் ரொம்ப நல்லா வருமேன்னு நினைத்தார். உடனடியாக அந்த அம்மாவை ஒரு வில்லி கதாபாத்திரத்தில் இணைத்து படத்திற்கான கதையை யோசிக்க ஆரம்பித்தார். மளமளவென கதை பிறந்தது.
ஏவிஎம்.குமரனுக்குப் போன் செய்து நடந்தவற்றைக் கூறினார். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றுத் தோன்றுகிறது என்றார். அதுதான் குழந்தையும், தெய்வமும் என்ற படம். ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்றது. ஜெய்சங்கர், ஜி.வரலட்சுமி நடித்த படம் தான் அது.
ஆங்கிலப்படத்தைப் பார்த்த போது அதே சாயலில் ஒரு படத்தை உருவாக்கலாம் என்று நினைக்காத சீத்தாராமனுக்கு அந்த அம்மாவைப் பார்த்த உடனே இந்தப் படத்தை தமிழில் உருவாக்கலாம் என்ற எண்ணம் வந்தது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.
1965ல் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான படம் குழந்தையும் தெய்வமும். ஜெய்சங்கர், ஜமுனா உள்பட பலர் நடித்துள்ளனர். எம்எஸ்.வி. இசை அமைத்துள்ளார். பாடல்கள் எல்லாமே சூப்பர்.