கண்ணனை உங்கள் வீட்டிற்கே வரவழைக்கும் மனது மறக்காத பாடல்கள் எந்தெந்தப் படங்களில் வருகிறது…. தெரியுமா?

Published:

தமிழ்த்திரைப் படப்பாடல்களில் ஒவ்வொரு விழாக்களுக்கும் என தனித்தனியாக எண்ணற்றப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றைப் பட்டியலிட்டால் ரசனையைத் தூண்டும், கருத்தாழமிக்கப் பாடல்கள் ஏராளமாக உள்ளன. அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்திக்கும் பல பாடல்கள் உள்ளன. அவற்றில் இருந்து சிலவற்றைப் பார்க்கலாமா…

ஸ்ரீகிருஷ்ணா முகுந்தா முராரி

Haridoss
Haridoss

ஹரிதாஸ் படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடல் இது. எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய மனதை மயக்கும் பாடல். பாபநாசம் சிவன் எழுதிய பாடல். 1944ல் சுந்தர ராவ் நுட்கார்னியின் இயக்கத்தில் உருவான படம்.

இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் ஜி.ராமநாதன். தியாகராஜபாகவதர், டி.ஆர்.விஜயகுமாரி, என்.எஸ்.கிருஷ்ணன், பண்டரிபாய் உள்பட பலர் நடித்துள்ளனர்.

கண்ணா கருமை நிறம் கண்ணா

இந்தப் பாடல் இடம்பெற்ற படம் நானும் ஒரு பெண். பி.சுசீலாவின் குரலில் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் இது. கண்ணா கருமை நிறம் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே… உன்னை மறப்பாரில்லை. கண்டு வெறுப்பாரில்லை… என்னை கண்டாலும் பொறுப்பாரில்லை.

கவியரசர் கண்ணதாசனின் வைர வரிகளில் உருவான மெலடி பாடல் இது. எஸ்எஸ்ஆர், சிஆர்.விஜயகுமாரி, ஏவிஎம் ராஜன், புஷ்பலதா உள்பட பலர் நடித்துள்ளனர். படம் வெளியான ஆண்டு 1963.

கண்ணோடு கண்ணான என் கண்ணா

Sippikkul muthu
Sippikkul muthu

1986ல் கே.விஸ்வநாத் இயக்கத்தில் கமல், ராதிகா நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படம் சிப்பிக்குள் முத்து. இளையராஜாவின் இசை வண்ணத்தில் தெவிட்டாத பாடல்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் இந்தப் பாடல். கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடிச்சார் கண்ணா… என்ற ரம்மியமான பாடல்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.பி.சைலஜா இணைந்து பாடிய இந்தப் பாடல் இப்போது கேட்டாலும் நம்மை மெய்மறக்கச் செய்து விடும். வைரமுத்துவின் வரிகள் நம்மை லயிக்க வைக்கும்.

முகுந்தா முகுந்தா

2008ல் வெளியான தசாவதாரம் படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடல். ஹிமேஷ் ரேஷ்மியாவின் இன்னிசையில் உலகநாயகன் கமல், அசின் நடிப்பில் உருவான படம். படத்தை இயக்கியவர் கே.எஸ்.ரவிகுமார்.

முகுந்தா முகுந்தா என்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. பாடியவர்கள் ஹரிஹரன், சாதனா சர்கம். தற்போது கிருஷ்ண ஜெயந்தி விழாக்களில் தவறாமல் இடம்பெறும் பக்தி பாடல் இதுதான்.

கண்ணன் பிறந்தான் எங்கள்

PTP 1
PTP

பெற்றால் தான் பிள்ளையா படத்தில் இடம்பெறும் மனது மறக்காத பாடல் இது. டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா இணைந்து பாடியுள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், சரோஜாதேவி நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்படம்.

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புது கவிதைகள் பிறந்ததம்மா…. மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்… மனக் கவலைகள் மறந்ததம்மா… என்ன ஒரு அருமையான வரிகள் என்று பாருங்கள். இந்தப் பாடலை எழுதியவர் வாலிபக் கவிஞர் வாலி. படம் வெளியான ஆண்டு 1966.

மேலும் உங்களுக்காக...