இன்று நாம் கேட்கும் ஏதாவது ஒரு பாடலில் யாரையாவது குறிப்பிட்டு பாடியிருந்தால் உடனே கண்டனக்குரல்களும், எதிர்ப்புகளும் வந்து அந்தப் பாட்டை ஒன்று ஹிட் ஆக்குவார்கள். அல்லது முடக்கி விடுவார்கள். ஆனால் அன்றைய காலகட்டத்தில் கவிஞர் கண்ணதாசன், கலைஞர் கருணாநிதி, பட்டுகோட்டை கல்யாணசுந்தரம், வாலி போன்றோர் தங்கள் பாடல்களிலும், வசனங்களிலும் அரசியல் சாம்ராஜ்ஜியத்தையே நடத்தினார்கள். இன்றும் நாம் கேட்கும் அந்தப் பிரபலப் பாடல்கள் உருவான சுவாரஸ்ய கதை :
தூங்காதே தம்பி தூங்காதே
நாடோடி மன்னன் படத்தில் எம்.ஜி.ஆர். சிறைக்குள் இருக்கும் ஒரு காட்சிக்கு கவிஞர் கண்ணதாசன் பாட்டெழுத வேண்டும். ஆனால் குறித்த நேரத்தில் அவர் வராதததால் பட்டுக்கோட்டையாருக்கு அந்த வாய்ப்பு கிட்டியது. இவ்வாறு கவிஞர் கண்ணதாசனை கிண்டலடிக்கும் பொருட்டு எழுதப்பட்டதுதான் தூங்காதே தம்பி.. தூங்காதே தம்பி தூங்காதே.. என்ற பாடல். ஆனால் இதை கண்ணதாசன் கண்டுகொள்ளவில்லை.
கடுங்கோபம் கொண்ட கண்ணதாசன்
எம்.ஜி.ஆரை வைத்து கண்ணதாசன் இயக்கவிருந்த படம் தான் ஊமையன் கோட்டை. ஆனால் படம் ஊமையாகவே பூஜையுடன் அமைதியானது. இதனால் எம்.ஜி.ஆர் மீது கோபங்கொண்டு கவிஞர் எழுதிய புத்தகம் தான் எம்.ஜி.ஆர். உள்ளும், புறமும் என்ற நூல். இந்நூலில் எம்.ஜி.ஆரை கடுமையாகச் சாடியிருப்பார் கவிஞர்.
கவிஞர் அவமானப்படுத்தினாலும் எம்.ஜி.ஆர் அவரை தன்னோடு இணைத்து கொண்டதற்கு முக்கிய காரணம் கலைஞர். ஆரம்பத்தில் எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கை கலைஞரை சார்ந்திருந்தது. “என் வசனங்கள்தான் ராமசந்திரனை உயர்த்தியது” என்று சொல்லாமல் சொன்னார் கலைஞர். அதனால்தான் நாடோடி மன்னன் பட வசன பொறுப்பு கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது!
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
அண்ணாவை விட்டு ஈ.வி.கே சம்பத் கட்சியில் இணைந்த போது கலைஞர், எம்.ஜி.ஆர் உட்பட அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இந்நிலையில் எம்.ஜி.ஆருக்காக கவிஞர் எழுதிய பாடல். மேலும் உரிமைக் குரல் படத்தில் விழியே கதை எழுது என்ற ஹிட் பாடலும்.
பின் எம்.ஜி.ஆர். தனிக்கட்சி ஆரம்பித்து ஆட்சியை அமைத்த போது அவருக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர் கருணாநிதி. அவர் தொடர்ந்து தனது அரசியல் சாணக்கியத்தால் முரசொலியில் குடைச்சல் தர இலக்கிய ரீதியாக பதில் தர கவிஞர் கண்ணதாசன்தான் சரியான நபர் என்று கருதி அவரை அரசவைக் கவிஞராக நியமித்தார் எம்.ஜி.ஆர்.
ஆனால் பதவியேற்ற சில மாதங்களிலேயே கவிஞர் இறைவனடி சேர்ந்தார்.