பாடல் வரிகளே புரியாமல் ஆங்கிலம் கலந்த தமிழில் எழுதும் பாடலாசிரியர்களுக்கு மத்தியில் பாவேந்தர் பாரதிதாசனின் சிஷ்யனாக விளங்கி தமிழ் இலக்கியத்திலும், சினிமா துறையிலும் தனி சாம்ராஜ்யம் நடத்தியவர் கவியரசர் கண்ணதாசன். இவரது பாடல்களில் காதல் ரசம் சொட்டும். தமிழருவி பாயும். வரிகளில் உணர்ச்சிகள் மேலோங்கும். மெட்டுக்காக பாட்டு என்றிருந்த நிலையில் பாடல்களுக்காக மெட்டு என்ற வழக்கத்தைக் கொண்டிருந்தவர்.
இரண்டு தலைமுறை ஹீரோக்களை தன் பேனா முனையால் உச்சத்தில் வைத்திருந்தவர் கவியரசர் கண்ணதாசன். அப்பேற்பட்ட கவிஞானிக்கு நேர்ந்த சம்பவம் கொஞ்சம் விசித்திரமானது.
கவிஞர் அவர்கள் ஒருமுறை ஈ வி கே சம்பத் அவர்களுடன் தமிழ் தேசிய கட்சி கூட்டத்திற்கு சென்றார். அங்கு எதிர்பாரா விதமாக திடீரென கலாட்டா நடக்க கவிஞரை ஒருவன் கல்லால் தாக்கினான். உடனே இரத்தம் பீறிட்டு வர கவிஞரின் உதவியாளர் கண்ணதாசனை பத்திரமாக காருக்கு அழைத்து வந்தார்.
அந்த இடத்தில் இருந்து கார் கிளம்பிய பின்னர், காரில் இருந்த உதவியாளர்,“ ஐயா பேசாம இன்னைக்கு பரிசு படத்திற்கு பாட்டாவது எழுதி இருந்தால் இந்த கல்லடியில் இருந்து தப்பி இருக்கலாம், பணமாவது கிடைத்திருக்கும் என்று சொல்ல,அதற்கு உடனே கவிஞர், உதவியாளரை பார்த்து பாட்டு தானே இந்தா எழுதி கொள் என்று பாடல் வரிகளை சொல்ல ஆரம்பித்தார்.
“கல்லால் அடித்த அடி வலிக்க வில்லை
அந்த காயத்தில் உடல் துடிக்க வில்லை
என்று சொன்னார்
அதிர்ச்சி அடைந்த உதவியாளர், “ஐயா இது காதல் பாட்டு.. நீங்க என்னடா என்றால் கல், அடி என்று சொன்னால் எப்படி என்று சொல்ல, சரி இப்ப காதல் பாட்டிற்கான வரிகள் சொல்கிறேன் எழுதி கொள் என்று சொல்ல ஆரம்பித்தார்.
அந்த பாட்டு தான் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த பரிசு படத்தில் ஹிட் ஆன
நீ கண்ணால் அடித்த அடி வலிக்குதுடி அந்த காயத்தில் மனசு துடிக்குதுதடி..
என்ன என்ன நினைக்குது ஏதேதோ நினைக்குது
வண்ண வண்ண தோட்டங்கள் அஞ்சு ரூபாய்,
உன்னை வட்டமிட்டு போகுது அஞ்சு ரூபாய்..
என்ற பாடல். கல்லெறி வாங்கி இரத்தம் பீறிட்டு எழுந்த நிலையிலும் கவிஞர் இயற்றிய காதல் ரசம் சொட்ட சொட்ட பாடல் வரிகள் இயற்றியதைப் பார்த்து பிரமித்துப் போனார் உதவியாளர்.