ரூ.1000 உரிமைத்தொகை வந்துவிட்டதா..? வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்..?

Published:

தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 என்ற தொகையை இன்று முதல் அனைத்து தகுதி வாய்ந்த பெண்களுக்கும் அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பி வருகிறது.

ஒரு கோடியெ 6 லட்சம் பெண்களுக்கு இந்த திட்டத்தில் பணம் அனுப்பப்பட்டு வருகிறது.  செப்டம்பர் 15 முதல் 5 நாட்களில் இந்த பணம் அனைவருக்கும் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிடும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இதற்காக பிரத்யேக ஏடிஎம் கார்டுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் படி மொத்தம் ஒரு கோடியே 7 லட்சம் பேர் விண்ணப்பம் செய்த நிலையில் அதில் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு பணம் அனுப்பப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் தேர்வாகியும் பணம் வரவில்லை என்றால் என்ன செய்வது என்ற தகவல்களை தற்போது பார்ப்போம். முதல் கட்டமாக பணம் கிடைக்காத பெண்கள் முகாம்களில் மீண்டும் மேல்முறையீடு செய்ய வேண்டும். வங்கிக்கணக்கு தவறாக குறிப்பிடப்பட்டு இருந்தால் பணம் பெற்றிருக்க முடியாது. எனவே மேல்முறையீடு மூலம் வங்கி கணக்குகளை மாற்ற வேண்டும் என்றாலோ, அல்லது தவறான வங்கி கணக்கின் விவரங்களை மாற்ற வேண்டும் என்றாலோ முகாம் மூலம் மட்டுமே மாற்ற முடியும்.

யார் யாருக்கெல்லாம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை? முழு விபரம் இதோ!

இந்த முகாம்கள் நடக்கும் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேல்முறையீடு செய்தால் உங்களது தகவல்களை மீண்டும் ஆய்வு செய்து ரூபாய் 1000 திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்த திட்டம் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கும். இந்த குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் இ சேவை வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தேர்வு செய்யப்படும். மேல்முறையீடு செய்த பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு தகுதியானவர்களாக இருந்தால் அவர்களது தகவல்கள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் பயனாளியாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்.

இந்த மேல்முறையீட்டு விண்ணப்பங்களை தேர்வு செய்ய சம்பந்தப்பட்ட சமூக பாதுகாப்பு வட்டாட்சியர்கள் கள ஆய்வு நடத்தி விசாரணை செய்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் வழியாக பெறப்படும் புகார்கள் மேல்முறையீடு மனுக்களுடன் சேர்த்து ஆய்வு செய்யப்படும் என்றும் நடைமுறைகளை பின்பற்றி விசாரணை செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் உங்களுக்காக...