யார் யாருக்கெல்லாம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை? முழு விபரம் இதோ!

தமிழ்நாட்டில் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியான பயனாளிகள் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்ற விபரங்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் 21 வயது நிரம்பிய அதாவது 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு முன்பு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகள் இருக்கும் நியாய விலை கடைகளில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு யார் யாரெல்லாம் குடும்பத் தலைவிகளாக கருதப்படுவார்கள் என்ற விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. ஒரு குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள பெண்கள் அனைவரும் ஒரு குடும்பமாக கருதப்படுபவர் என்பதால் குடும்ப தலைவியாக இருக்கும் ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஒரு வேளை ரேஷன் கார்டில் குடும்பத் தலைவராக ஆண்கள் பெயர் இருந்தால் அவர்களது மனைவி குடும்ப தலைவியாக கருதப்படுவார்கள்.

திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்படுவர். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்க செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இது தவிர பொருளாதாரத் தகுதிகளையும் அரசு வெளியிட்டுள்ளது. ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.

ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3 ஆயிரத்து 600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் உரிமைத்தொகை பெற தகுதியானவை என தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. பொருளாதாரத் தகுதிகளுக்காக தனியாக வருமான சான்று அல்லது நில ஆவணங்களை பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற தகுதி இல்லாதவர்களையும் வரையறுத்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டி அதற்காக வருமான வரி செலுத்துபவர்கள், தொழில்வரி செலுத்துபவர்கள் உள்ள குடும்பங்களைச் சார்ந்தோருக்கு உரிமை தொகை வழங்கப்பட மாட்டாது.

மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இவர்கள் எல்லாம் உரிமைத்தொகை பெற இயலாது.

மேலும் பயன்பாட்டிற்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்களை வைத்துள்ளவர்கள், ஆண்டுக்கு 50 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள், ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற ஓய்வூதியம் பெரும் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற தகுதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் மாற்று திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினர்கள் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்க தகுதியானவை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவத்தையும் வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இந்த விண்ணப்பத்தில் ஆதார் எண், பெயர், குடும்ப அட்டை எண், தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதை தவிர மேலும் சொத்து விவரம் மற்றும் வாகன விவரங்களு​ம்​ இதற்கான விண்ணப்பத்தில் இடம்பெற்றுள்ளது.

kalaignar magalir urimai thogai thittam application form

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews