பாட்ஷா, ஜெயிலர் படத்தின் இன்டெர்வலில் இருந்த வியப்பான ஒற்றுமை.. நெல்சன் செஞ்ச ட்ரிக்..

Published:

நடிகர் ரஜினிகாந்திற்கு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு ஃபுல் மீல்ஸாக அமைந்த திரைப்படம் என்றால் அது நிச்சயம் ஜெயிலர் திரைப்படம் தான். சிவாஜி வரைக்கும் ரஜினியின் கமர்சியல் ஃபார்முலா சிறப்பாக வொர்க் அவுட்டாக, அதன் பின்னர் வெளியான பெரும்பாலான படங்கள் சற்று எதிர்மாறாக இருந்தன. எந்திரன், 2.0 உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் அவை ரஜினியின் மீட்டரில் இல்லாமல் இருந்தது.

இதன் பின்னர் வந்த தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்கள், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வி அடைய ரஜினி ரசிகர்களும் கலங்கி போயினர். அண்ணாத்த வெளியான சமயத்தில் ரஜினிகாந்த் இனிமேல் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொள்ளலாம் என்றும் கூட பேச்சுகள் உருவானது.

ஆனால், ஏறக்குறைய 50 ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் அரியணையில் அசராமல் அமர்ந்திருக்கும் ரஜினிகாந்த் துவண்டு போகாமல், ஜெயிலர் படத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தார். நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம், கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமாகவும் மாறியிருந்தது.

பாட்ஷா படத்தின் டெம்ப்ளெட்டில் ஜெயிலர் திரைப்படம் இருக்க பல காட்சிகளில் ரஜினி திரையில் வரும் போது ரசிகர்கள் மத்தியில் சரவெடியை தான் ஏற்படுத்தி இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய ரஜினியை பார்த்ததாகவும் ரசிகர்கள் மிக உற்சாகமாக குறிப்பிட்டு வந்த நிலையில் ஏறக்குறைய 600 கோடிக்கு மேல் ஜெயிலர் திரைப்படம் வசூல் செய்திருந்தது.

யாரெல்லாம் இனிமேல் ரஜினி திரைப்படங்களில் நடிக்கக்கூடாது என விமர்சித்தார்களோ அவர்களின் வாயையும் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் அடைத்திருந்தார் சூப்பர்ஸ்டார். இந்த வயதிலும் அவரை சிறப்பாக சண்டைக் காட்சிகளில் பயன்படுத்தி வெற்றி படமாக மாற்றியதற்கு நெல்சனின் பங்கும் மிகப்பெரியது.

அதே போல அனிருத் இசையும் ஜெயிலர் படத்தின் முதுகெலும்பாக இருக்க சமீபத்தில் இந்த திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்தை கடந்திருந்தது. அப்படி ஒரு சூழலில் ஜெயிலர் படத்தின் இடைவேளை காட்சியை குறித்து அனிருத் மற்றும் நெல்சன் ஆகியோர் உரையாடிய சில விஷயங்கள் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆனது தொடர்பாக படம் குறித்து நிறைய தகவல்களை நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். அப்போது ஜெயிலர் படத்தின் இன்டெர்வல் காட்சியை குறித்தும் அவர்கள் பேசியிருந்தனர். இதில் ரஜினியின் வீட்டுக்குள் எதிரியாட்கள் வந்து தாக்குவது போன்ற காட்சி வரும்.

அப்போது ரஜினிகாந்த் தனியாளாக அனைவரையும் சமாளிப்பது போன்ற காட்சி இருக்கும் சூழலில், அதன் பின்னணியில் இடியும் மின்னலும் வந்தபடி இருக்கும். இது பற்றி பேசி இருந்த அனிருத், அண்ணாமலை மற்றும் பாட்ஷா ஆகிய திரைப்படங்களின் அதிரடி இடைவேளையிலும் மின்னல், இடி இருந்ததாகவும் அதே போல ஜெயிலர் படத்தில் உருவாகி இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

அதேபோல இடைவேளை முடியும் சமயத்தில் தனது மனைவி மற்றும் மருமகள் ஆகியோரை வீட்டிற்குள் சென்று தூங்கும்படி ரஜினி கூறுவதுடன் டிவி பார்த்துக் கொண்டே மெதுவாக முடிவது போலவும் வைத்திருந்தனர். ஆனால் பின்னர் அந்த காட்சி மாற்றப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...