வறுமையால் உழன்று கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் குடும்பம் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தது. நாடகக் கம்பெனிகளில் சேர்ந்தால் மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும் என்ற நோக்கில் தன் பிள்ளைகளின் பசி ஆற்ற தாய் சத்யபாமா அவர்களை நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டார். இந்த நாடகக் கொட்டகை தான் பின்னாளில் எம்.ஜி.ஆரை நாடாள வைத்தது.
நாடகங்களில் சிறிய உதவி வேலைகளைச் செய்து கொண்டே அண்ணன் சக்ரபாணியும், எம்.ஜி.ஆரும் நடிப்புக் கலையைக் கற்றனர். ஒருகட்டத்தில் நாடகங்களில் புகழ்பெற்ற நடிகர்களாக வலம் வரத் துவங்கியவுடன் எம்.ஜி.ஆரின் திறமையை அறிந்த வெளிநாட்டு இயக்குநர் எல்லீஸ் டங்கன் தனது சதிலீலாவதி படத்தில் முதன் முதலாக எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு அளித்தார்.
அதன்பின் சிறிய வேடங்களில் படங்களில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரை தகப்பன் ஸ்தானத்தில் இருந்து கண்ணுங்கருத்துமாகப் பார்த்துக் கொண்டவர் அவரது அண்ணன் சக்ரபாணிதான். இதனால் தந்தை பாசம் அறியாத எம்.ஜி.ஆர். தனது தந்தை வடிவில் அண்ணணைப் பார்த்தார். அதன்பின் முதன்முதலாக ராஜகுமாரி என்ற படத்தில் ஹீரோ அரிதாரம் பூச அதனைப் பார்த்து மகிழ்ந்தவர்களில் மற்றொருவர் பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதா.
ஐம்பதாயிரம் வேண்டாம்.. ஐந்து லட்சம் போடுங்க.. ஒரே வார்த்தையில் தேவரை மடக்கிய ஆரூர்தாஸ்
ஏனெனில் இருவருக்குமான உறவு சகோதரப் பிணைப்பால் வேரூன்றியது. எம்.கே.ராதாவின் தந்தை கந்தசாமி முதலியார் நாடகங்களை எழுதுபவர். இவர் சென்னை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக்குழுவிற்காக கதைகளை எழுதியவர். இந்த நாடகக் கம்பெனியில்தான் எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்ரபாணியும் சேர்ந்தனர். அதே கம்பெனியில் எம்.கே.ராதாவும் நடித்துக் கொண்டிருந்தார். கந்தசாமி முதலியார் எம்.ஜி.ஆரையும், சக்ரபாணியையும் தனது பிள்ளைகளாகவே கருதினார். இவ்வாறு மூவருமே ஒன்றாக வளர்ந்தார்கள். இதில் எம்.கே.ராதா உடன்பிறவா சகோதரனாக இருவரின் மேலும் அதிக பாசம் வைத்திருந்தார்.
பின்னாளில் எம்.ஜி.ஆர் வளர்ந்து திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்ற போது தனது சகோதரர்களைப் பற்றிக் கூறும் போது, என்னைப் பெற்ற அன்னை பெரும் செல்வமாக ஓர் அண்ணனைக் கொடுத்தார். அதேபோல் கலைத்தாயும் எனக்கு இரண்டு அண்ணன்களைக் கொடுத்திருக்கிறார். கலைவாணரும், எம்.கே.ராதாவும்தான் அவர்கள். இவர்கள் மூவருமே இணைந்த கலவையாக என்னை உருவாக்கி, எனக்கு வழிகாட்டியாக, எனது ஈடு இணையற்ற தலைவராக எல்லாமுமாக விளங்கிய ஓர் அண்ணனை அறிஞர் அண்ணாவாக அரசியல் எனக்குத் தந்தது.” என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் எம்.ஜி.ஆர்.