மண்வாசம் வீசும் கிராமிய மணம் பரப்பும் எண்ணிலடங்கா பாடல்களை தமிழ் சினிமாவில் கொடுத்த இசைஞானி இளையராஜா மலையாள தேசத்திலும் மண் சார்ந்த பாடல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். சாதாரணமாக இளையராஜாவின் இசையைக் கேட்டாலே மனம் ஒருவித அமைதியைத் தேடும். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அந்த நேரத்தில் இளையராஜாவின் பாட்டைக் கேட்டால் சொந்த ஊரில் இருப்பது போன்ற ஒரு மாயை ஏற்படும். இதனால் தான் இசைஞானியை சினிமா உலகம் மட்டுமல்லாது இசையுலகமே கொண்டாடுகிறது.
இப்படித்தான் இசைஞானி இசையில் தமிழ் மணம் பரப்பியது மட்டுமின்றி மலையாள தேசத்திலும் மண்சார்ந்த சில பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அப்படி உருவாகிய ஒரு பாடல்தான் 2003-ல் வெளியான மனசினகாரே என்ற மலையாளத் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். ஜெயராம் நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தை இயக்கியவர் சத்யன் அத்திக்காடு. இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் நம் இசைஞானி. இயக்குநர் சத்யன் பாடலின் சச்சுவேஷனைச் சொல்லி மலையாள கிராமிய மணம் பரப்பும் வகையில் பாடலைக் கேட்டிருக்கிறார்.
அதெப்படி நீங்க என்ன அந்த கேள்வி கேட்கலாம்..? பிரபுவிடம் கோபித்த எம்.எஸ்.பாஸ்கர்
இளையராஜா அப்போது இயக்குநர் சத்யனிடம் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வில்லுப்பாட்டு இசை ஒன்றைக் கூறி தந்தான தானான தானான தந்தான தானானா.. என்று டியூன் போட்டு இதேபோல் இசையமைக்கட்டுமா என்று கேட்டிருக்கிறார். இயக்குநரும் சம்மதம் சொல்ல முதலில் பல்லவியைப் போட்டிருக்கிறார் இசைஞானி.
அதன்பின் பாடலாசிரியர் புத்தஞ்சேரியிடம் வரிகளைக் கேட்க, உடனே அவர் செண்டைக்கொரு கோழுண்டட.. மண்டைக் கொரு கொண்டுண்டட என்ற வரிகளை எழுதிக் கொடுத்திருக்கிறார்.
படம் வெளியான போது இந்தப்பாடலை மலையாள ரசிகர்கள் உச்சியில் வைத்துக் கொண்டாடினார்கள். யூடியூப்பில் இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். கலைவாணரின் வில்லுப்பாட்டு பரிணாமம் பெற்று இளையராஜா என்னும் இசைஞானியால் எப்படி பொலிவு பெற்று அருமையான பாடலாக உருவாகியிருக்கிறது எனத் தெரியும். தமிழ் மண்ணில் இசையால் தனது ராஜ்ஜியத்தியை நிறுவிய இளையராஜா கேரள தேசத்திலும் மண் சார்ந்த, கிராமிய மணம் பரப்பும் பாடலைக் கொடுத்து அங்குள்ள ரசிகர்களையும் தனது இசையால் கவர்ந்திழுக்கிறார். சும்மாவா மஞ்சும்மல் பாய்ஸ் படம் ஹிட்டாகியது…!