நடிகை ஷோபா மிக இளம் வயதில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரைப் போலவே அற்புதமான நடிக்கக்கூடிய நடிகையான படாபட் ஜெயலட்சுமி 22 வயதில் தற்கொலை செய்து கொண்டது திரை உலகை அதிர வைத்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது பேட்டி அளித்தாலும் அவரது ஃபேவரிட் ஹீரோயின் என்றால் முதலில் அவர் கூறும் பெயர் படாபட் ஜெயலட்சுமி தான். அந்த அளவுக்கு அவரது நடிப்பு அவரை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ப வரிசையில் பட்டையைக் கிளப்பிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள்
குறிப்பாக ’ஆறிலிருந்து அறுபது வரை’ என்ற திரைப்படத்தில் இருவரும் போட்டி போட்டு நடித்து இருப்பார்கள். ஜெயலட்சுமி 1974 ஆம் ஆண்டு ’அவள் ஒரு தொடர்கதை’ என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார்.
கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் தான் சுஜாதாவும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அவர் அவ்வப்போது படாபட் என்ற வசனத்தை கூறியதால் அவருடைய பெயருக்கு முன்னால் படாபட் என்ற பெயர் நிலைத்து விட்டது.
இதன் பிறகு அவர் அன்னக்கிளி உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தான் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் அண்ணன் சக்கரபாணியின் மகன் சுகுமார் என்பவரை இவர் காதலித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணத்திற்கு பின்னர் சுகுமாருக்கு ஏற்கனவே திருமணம் நடந்தது தெரிய வந்ததாகவும் அதனால் படாபட் ஜெயலட்சுமி மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுவது உண்டு.
அதுமட்டுமின்றி தான் சினிமாவில் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் சுகுமாருக்கு கொடுத்தார் என்றும் ஆனால் அவர் தனக்கு துரோகம் செய்துவிட்டதால் மனவேதனையில் இருந்த ஜெயலட்சுமி ஒரு கட்டத்தில் மனவிரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
படுக்கையில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைந்த எம்ஜிஆர்-சிவாஜி பட நடிகை..!
நடிகை படாபட் ஜெயலட்சுமி தமிழ் திரையுலகில் நீண்ட வருடங்கள் நடிப்பில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மிக இயல்பாக நடிக்க கூடிய நடிகைகளில் ஒருவர். குறிப்பாக முள்ளும் மலரும் என்ற திரைப்படத்தில் மங்கா என்ற கேரக்டரில் அவர் நடித்து அசத்திருப்பார். ஷோபா மற்றும் படாபட் ஜெயலட்சுமி ஆகிய இருவரும் இந்த படத்தில் நடித்திருந்தனர் என்பதும் இருவரும் வாழ்க்கையும் தற்கொலையில் தான் முடிந்தது என்பதும் ஒரு சோகமான ஒற்றுமையாகும்.