“பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்…”, “பருவமே புதிய பாடல் பாடு”, “மலர்ந்தும் மலராத”, “தொட்டுக்கொள்ள வா… என்னைத் தொடர்ந்து கொள்ள வா”, “பாடிப்பறந்த கிளி பாதை மறந்ததடி”, “கானக்கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா”, “இன்னிசை பாடிவரும் எந்தன் காற்றுக்கும் உருவமுண்டு”, “மொட்டு மொட்டு மலராத மொட்டு” என தமிழ்ப்பட பாடல்கள் அனைத்தும் நம் நெஞ்சில் பசுமரத்தாணி போல பதிந்து விட்டன.
ஒரு பாடப்புத்தகத்தில் கூட நாம் எந்த ஒரு பாடலையும் மனப்பாடம் செய்ய மாட்டோம். ரொம்ப கஷ்டப்படுவோம். ஆனால் இதுபோன்ற திரைப்படப்பாடல்களை படிக்காமல் ஒரு தடவைக்கு இருதடவை கேட்டவுடனேயே நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். இதற்கு என்ன காரணம்? பாடலின் ராகம், காட்சி அமைப்புகள், இசை என அனைத்தும் மெருகூட்டி நம் மனதை வசீகரிக்கின்றன.
அதனால் தான் நமக்குள் இத்தனை ஆனந்தக் களிப்பு. பாடலை ஒருமுறைக்குப் பல முறை கேட்டு ரசிக்கிறோம். இந்தப் பாடல்கள் முதலில் எங்கிருந்து பிறக்கின்றன என்று யோசித்துப் பார்த்தால் கவிதையை எழுதும் படைப்பாளி தான் முதலில் நினைவுக்கு வருவார்.
என்ன தான் பாடல்களுக்கு இசை உயிரோட்டமாக இருந்தாலும் பாடலின் வரிகள் தான் நம்மை எளிதில் ஈர்க்கும். அத்தகைய வரிகளுக்குச் சொந்தக்காரர்கள் தான் கவிஞர்கள், கவியரசர்கள். இவர்களில் ஒரு சிலரைப் பற்றிப் பார்ப்போமா…
கவியரசர் கண்ணதாசன்
முத்தையா என்ற இயற்பெயர் கொண்டவர். 1927ல் காரைக்குடி அருகில் உள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்தார். வணங்காமுடி இவரது புனைபெயர். வசனகர்த்தா, கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர்.
இவை தவிர சிற்றிலக்கியங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், புதினங்கள், உரைநூல்கள், நாடகங்கள் எழுதுவதிலும் வல்லவர். அதனால் தான் கவியரசர் ஆனார். தமிழ்த்திரையுலகில் காலத்தால் அழியாத பல காவியப்பாடல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய கடைசி பாடல் மூன்றாம்பிறை படத்தில் வரும் கண்ணே கலைமானே.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
1930ல் பட்டுக்கோட்டை அருகில் உள்ள செங்கப்படுத்தான்காடு என்ற ஊரில் பிறந்தார். சிறுவயதில் விவசாயம், வியாபாரி, மீனவர், நடிகர், பாடகர், கவிஞர் என பல திறமைகளுக்குச் சொந்தக்காரராக இருந்தார்.
இவரது பாடல்கள் எல்லாமே தேன் சிந்தும் ரகம் தான். தூங்காதே தம்பி தூங்காதே, உன்னைக்கண்டு நானாட, வாடிக்கை மறந்ததும் ஏனோ, மனிதன் பொறக்கும்போது என இவரது கைவண்ணத்தில் மிளிர்ந்த அனைத்துப் பாடல்களும் முத்து முத்தானவை.
கவிஞர் வாலி
டி.எஸ்.ரங்கராஜன் இவரது இயற்பெயர். திருச்சியை அடுத்த திருவரங்கம் இவரது சொந்த ஊர். 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் வயதானாலும் இளைஞர்களையும் கவரும் விதத்தில் இவர் பல கவிதைகளை எழுதியதால் வாலிபக் கவிஞர் வாலி என்றே அழைப்பர்.
ஹேராம் படத்தில் நடித்தும் உள்ளார். ஏன் என்ற கேள்வி, மல்லிகை என் மன்னன் மயங்கும், நான் ஆணையிட்டால், அந்த நாள் ஞாபகம், புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ஆகிய பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இவர் 2014ல் வெளியான காவியத்தலைவன் படத்திற்காக கடைசி பாடலை எழுதினார்.
புலமைப்பித்தன்
1935ல் கோவையில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராமசாமி. ராத்திரியில் பூத்திருக்கும், அம்மாடி இதுதான் காதலா, பாடும்போது நான் தென்றல் காற்று, ஆயிரம் நிலவே வா, பட்டுவண்ண ரோசாவாம், அதோ மேக ஊர்வலம், மானே மரகதமே, இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது உள்ளிட்ட சூப்பர்ஹிட் காதல் மெலடி பாடல்களை இயற்றியுள்ளார்.
நான் யார், நீ யார் என எம்ஜிஆரின் குடியிருந்த கோயில் படத்திற்கு பாடல் எழுதி தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார். எம்ஜிஆரால் அரசவைக்கவிஞராகவும் நியமிக்கப்பட்டார். இவர் கடைசியில் பாடல் எழுதிய படம் 2015ல் வெளியான எலி. 2021ல் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் காலமானார்.
கவிப்பேரரசு வைரமுத்து
1953ல் தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் பிறந்தார் கவிப்பேரரசு வைரமுத்து. இவரது மகன்கள் கபிலன், மதன்கார்க்கி. இவர்களும் கவிஞர்கள் தான். சிறந்த பாடல்களுக்காக பல முறை விருதுகளைப் பெற்றுள்ளார். 1990ல் கலைமாமணி விருதைப் பெற்றார். சின்ன சின்ன ஆசை, போறாளே பொணு;ணுத்தாயி, முதல் முறை கிள்ளிப் பார்த்தேன் ஆகிய பாடல்கள் இவருக்கு தேசிய விருதுகளைப் பெற்றுத் தந்தன. பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.
கமல், ரஜினியின் பல சூப்பர்ஹிட் பாடல்களுக்குச் சொந்தக்காரர் இவர் தான். காதல் சடுகுடு, அன்பே அன்பே கொல்லாதே, செங்காடே, வெள்ளி மலரே, காற்றே என் வாசல் வந்து, இது ஒரு பொன்மாலை பொழுது, வந்தேன்டா பால்காரன், காதல் கடிதம், கொண்டையில் தாழம்பூ ஆகிய சூப்பர்ஹிட் பாடல்களை எழுதியவர் இவர் தான்.
சிகரங்களை நோக்கி, கள்ளிக்காட்டு இதிகாசம், தண்ணீர் தேசம், மூன்றாம் உலகப்போர், கருவாச்சி காவியம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.