விளம்பரமே இல்லாமல் வந்து இந்திய சினிமாவையே புரட்டிப் போட்ட படம்.. ரஜினி முதல் அஜீத் வரை நடித்து ஹிட் ஆன ரகசியம்

Published:

ஒரு படத்திற்கு விளம்பரம் என்பது மிக மிக அவசியம். எவ்வளவு பெரிய உச்ச நடிகர்கள் நடித்தாலும், நல்ல கதை இருந்தாலும் சரியான விளம்பரம் இல்லையென்றால் அப்படம் தோல்வி அடைந்து விடும். ஆனால் சரியான முறையில் விளம்பரமே இல்லாமல் ஆரம்பத்தில் மொக்கை வாங்கிய ஒருபடம் மீண்டும் இணைக்கப்பட்ட ஒரே ஒரு பாடலால் மீண்டும் இந்திய சினிமாவின் வரலாற்றையே புரட்டிப் போட்டு உச்சம் தொட்டது. அந்தப் படம்தான் ‘டான்‘. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான டான் படம் தென்னிந்த மொழிகள் அத்தனையிலும் ரீமேக் செய்யப்பட்டு சூப்பர் ஹிட் ஆனது.

1980-ல் ரஜினி நடிப்பில் டான் படம் பில்லா என உருவாகியது. பின் 2007-ல் அஜீத் நடிப்பில் மெருகூட்டப்பட்டு சக்கைப் போடு போட்டது பில்லா. இத்திரைப்படம் இந்தியில் உருவான சுவாரஸ்ய வரலாறு இதான்.

பில்லாவின் அசல் வடிவமான ‘Don’ என்கிற இந்தித் திரைப்படம் 1978-ல் வெளியானது. சலீம்-ஜாவேத் என்கிற இரட்டையர்கள், தலைப்பு இன்னமும் வைக்கப்படாத ஒரு திரைக்கதையை எழுதி முடித்து வைத்துக்கொண்டு தயாரிப்பாளரைத் தேடி அலைந்தார்கள். ஆனால் இந்தியில் உள்ள எந்தவொரு முன்னணி நடிகரும் தயாரிப்பாளரும் இதில் ஆர்வம் காட்டவில்லை.

எம்.என். நம்பியாரை ஆஹா.. ஓஹோவென புகழ்ந்து வந்த கடிதம்.. வில்லாதி வில்லன் கொடுத்த ஃதக் லைப் ரிப்ளே

பலராலும் நிராகரிக்கப்பட்ட திரைக்கதையாக அது இருந்தது. ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான நாரிமன் இரானி உருவாகிக்கொண்டிருந்த ஒரு திரைப்படத்தில் அமிதாப்பச்சன், ஜீனத் அமன், பிரான் ஆகியோர் அப்போது நடித்துக்கொண்டிருந்தார்கள். இந்தச் சமயத்தில்தான், ஒரு டானை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட, எவராலும் ஏற்கப்படாத சலீம் – ஜாவேதின் திரைக்கதை இவர்களின் பார்வைக்கு வந்தது. இரானியின் உதவியாளரான சந்திரா பரோட் அதில் சில மாற்றங்களைச் செய்து இயக்கினார். சுமார் மூன்றரை வருட உழைப்பிற்குப் பின்னால் 12.05.1978 அன்று ‘டான்’ அதிக விளம்பரம் இன்றி வெளியானது.

ஆனால், தொடக்கத்தில் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. சந்திரா பரோட் தன் குருநாதராக கருதும் மனோஜ் குமாரிடம் ஆலோசனை கேட்டார். அவருடைய ஆலோசனையின் பெயரில் ஒரு பாடல் இதில் புதிதாக இணைக்கப்பட்டது. இதே திரைப்படத்தின் இசையமைப்பாளர்கள் கல்யாண்ஜி – ஆனந்த்ஜியால் முன்னர் உருவாக்கப்பட்டு நடிகர் தேவ் ஆனந்தால் நிராகரிக்கப்பட்ட பாடல் அது. ஆனால் அந்தப் பாடல்தான் ‘டானின்’ மகத்தான வெற்றிக்கு ஒருவகையில் காரணமாக இருந்தது எனலாம்.

பாரதியார் வேடத்திற்கு முகவரி கொடுத்த பழம்பெரும் நடிகர்… இப்படி ஒரு நடிகரை கொண்டாடத் தவறிய தமிழ் சினிமா!

‘Khaike Pan Banaraswala’ என்கிற அந்தப் பாடல் (தமிழில் – வெத்தலையைப் போட்டேண்டி’) மக்களிடையே பிரபலம் அடைந்து அதுவே படத்திற்கு வாய்மொழி விளம்பரமாக அமைந்து பார்வையாளர்கள் பெருகுவதற்குக் காரணமாக இருந்தது. சுமார் 70 லட்சத்தில் உருவாக்கப்பட்ட ‘டான்’ ஏழு கோடியை வாரிக் குவித்தது. அதாவது பத்து மடங்கு லாபம்.

இதில் ஒரு துரதிர்ஷ்டமான விஷயம் என்னவெனில், எந்தத் தயாரிப்பாளரின் கஷ்டத்தைப் போக்குவதற்காக இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டதோ, அவர் படம் வெளியாவதற்கு முன்பே ஒரு படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தில் இறந்து போனார். என்றாலும் அவரின் குடும்பத்தினர் கடனிலிருந்து மீண்டு வருவதற்கு ‘டானின்’ வெற்றி உதவியது.

நிராகரிக்கப்பட்ட திரைக்கதை, நிராகரிக்கப்பட்ட பாடல் ஆகியவை ஒரு மகத்தான வெற்றித் திரைப்படத்திற்குக் காரணமாக அமைந்தது என்பதில் சில ஆதாரமான பாடங்கள் உள்ளன. ‘டான்’ தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என்று இதர தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

‘டான்’ திரைப்படத்தை இந்திய சினிமாவிலேயே ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படம் எனலாம். அதுவரை சினிமா ஹீரோக்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் நல்லவர்களாக, கெட்ட பழக்கம் இல்லாதவர்களாக, ஊருக்கும் குடும்பத்திற்கும் தியாகம் செய்பவர்களாக இருப்பார்கள்.

ஆனால், ஒரு ஹீரோ கடத்தல் மன்னனாகவும் பயங்கர கொலைகாரனாகவும் இருப்பது போல் எழுதப்பட்ட திரைக்கதையானது வெற்றியடைந்ததால், வருங்காலத்தில் பல ஹீரோக்கள் அப்படியான பாத்திரங்களை தயக்கமின்றி ஏற்பதற்கு ‘டான்’ திரைப்படம் ஒரு முன்னோடி காரணமாக அமைந்தது.

மேலும் உங்களுக்காக...