பிரச்சாரத்தில் ரஜினியை விமர்சித்த மனோரமா.. ரஜினி செய்த செயலால் உள்ளம் மகிழ்ந்த ஆச்சி..!

By John A

Published:

தமிழ் சினிமாவில் ஐந்து தலைமுறை நடிகர்களுடனும், ஐந்து முதல்வர்களுடனும் நடித்து சாதனை படைத்தவர் ஆச்சி மனோரமா. ரஜினியுடன் இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அம்மா, தோழி என இரு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் 1996 தேர்தலில் ரஜினி வாய்ஸ் யாருக்கு என்ற சூழ்நிலையில், ஆளும் கட்சி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை அந்த ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது என்று ரஜினி கூறியதாகச் சொல்லப்பட்டது.

உடனே ஜெயலலிதாவின் தோழியான மனோரமா அவருக்கு ஆதரவாக களம் இறங்கினார். பலரும் எச்சரித்தார்கள். ஆனால் அவரோ களம் இறங்கி ரஜினியை கடுமையாக விமர்சித்தார். இளைஞர்கள் மனதைக் கெடுத்தவர் ரஜினி என்றார். ரஜினி ஸ்டைலாக சிகரெட் பிடித்தால் அதைப் பார்க்கும் இளைஞனும் அப்படியே பிடிக்க ஆரம்பிக்கிறான் என்றார்.

இது ரஜினி ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை அளித்தது. ஆனால் ரஜினி தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. எதிர்பார்த்தது போலவே ஆளும் கட்சி தோல்வி அடைந்தது. மார்கெட்டை இழந்தார் மனோரமா.

அதன்பின் சில மாதங்களுக்குப் பின் அருணாசலம் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அந்தப்படத்தில் மனோரமாவுக்காக கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. ரஜினி தான் உருவாக்கவே சொன்னாராம். இதையும் படத்தின் டைரக்டர் சுந்தர்.சி.யே சொன்னார். 8 மாதங்கள் கழிந்தன. அருணாசலம் படம் சக்கை போடு போட்டது. மனோரமாவுக்கு இந்தப் படம் ரெண்டாவது இன்னிங்சைக் கொடுத்தது.

விளம்பரமே இல்லாமல் வந்து இந்திய சினிமாவையே புரட்டிப் போட்ட படம்.. ரஜினி முதல் அஜீத் வரை நடித்து ஹிட் ஆன ரகசியம்

வருடங்கள் உருண்டோடியது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2008 ஜனவரியில் ஆச்சியின் 50 வருட கலைச்சேவையைப் பாராட்டி விழா நடத்தப்பட்டது. ஒரே மேடையில் கலைஞர், ரஜினி, மனோரமா இருந்தனர். எல்லோரும் ரஜினியின் பேச்சை எதிர்பார்க்க அவர் மேடையில், “பில்லா படப்பிடிப்பு நடந்தது. அது சென்னை அருகில் உள்ள ஒரு குப்பம். சுத்தி நின்னு பலரும் வேடிக்கை பார்த்தாங்க. நாட்டுக்குள்ள என்னைப் பத்திக் கேட்டுப்பாருங்க… பாட்டுக்கு நான் டான்ஸ் ஆடினேன். அப்போ ஒருத்தர் பரவாயில்லையே… பைத்தியம் நல்லா ஆடுதேன்னு சொன்னார். எனக்கு ரொம்ப அப்செட்டாச்சு. படப்பிடிப்பே ஒரு மாதிரி ஆகிடுச்சு.

உடனே, மனோரமா வேகமா அந்த நபர் கிட்ட போய் சட்டையைப் பிடிச்சு சத்தம் போட்டாங்க. அவரை வெளியேத்துனா தான் நான் நடிப்பேன்னு சொன்னாங்க. அதன்பிறகு அவர் வெளியேறியதும் சூட்டிங் நடந்தது. என் மேல அவ்ளோ அன்பு காட்டினவங்க அந்த ஆச்சி. அவங்க இனி எத்தனை ஆயிரம் முறை அடிச்சாலும் தாங்கிக்குவேன்னு” என்று கூறினார் ரஜினி. அப்போது ஆச்சி மனோரமாவின் கண்கள் குளமாகியது.

மேலும் உங்களுக்காக...