தமிழ் திரை உலகில் சில இயக்குனர்கள் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கி இருப்பார்கள். ஆனால் அவர்கள் பல ஆண்டுகளுக்கு திரையுலகில் பேசப்படும் அளவுக்கு தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தி இருப்பார்கள். அந்த வகையில் உள்ள ஒரு இயக்குனர்தான் ‘உதிரிப்பூக்கள்’ உள்ளிட்ட காலத்தால் அழியாத காவியங்களை இயக்கிய இயக்குனர் மகேந்திரன்.
இவர் மொத்தமே 12 படங்கள்தான் இயக்கி உள்ளார். ஆனால் ஒரு சில படங்களுக்கு கதை வசனமும் திரைக்கதையும் எழுதி உள்ளார். விஜய்யின் தெறி உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
அஜித் – சிவாஜி நடிக்க இருந்த படம்.. துரோகம் செய்ய விரும்பாததால் இயக்க மறுத்த இயக்குனர்..!
மகேந்திரன் இயக்கத்தில் உருவான படங்களில் அதிகம் பேசப்படும் படம் என்றால் ‘முள்ளும் மலரும்’ படம்தான். பாசமலர் படத்திற்கு பின் மனதை நெகிழ செய்யும் அண்ணன், தங்கை கதையம்சம் கொண்ட படம் இது. ரஜினியை அதுவரை ஸ்டைலான ஒரு நடிகராக, சூப்பர் ஸ்டாராகவே பார்த்து வந்த ரசிகர்கள் முதல் முதலாக அவரால் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபித்த படம் தான் முள்ளும் மலரும்.
முள்ளும் மலரும் படத்தின் காளி என்ற கேரக்டர் மிகச்சிறந்த வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக ‘கெட்ட பெயர் சார் இந்த காளி’ என்ற வசனம் தமிழ் திரையுலகம் இருக்கும் வரை இருந்து கொண்டே இருக்கும். ஒரு தன்மானம் உள்ள கிராமத்து இளைஞனின் உள்ளப்பிழம்பின் வெளிப்பாடாகவே அந்த வசனம் இருக்கும். இந்த காளி கேரக்டரில்தான் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
அதேபோல் உதிரிப்பூக்கள் என்ற படம் இன்று வரை திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். மிகச்சிறந்த திரைக்கதை, குறைந்த கதாபாத்திரங்கள், அந்த கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம், வில்லன் கதாபாத்திரத்தைகூட அந்த கதாபாத்திரத்தின் வடிவில் நியாயப்படுத்தும் அம்சம் என அந்த படமே ஒரு காவியம் மாதிரி இருக்கும்.
அதேபோல் நெஞ்சத்தைக் கிள்ளாதே, மெட்டி ஆகிய படங்கள் மிகச்சிறந்த படங்களாக உருவாக்கப்பட்டிருந்தது. மகேந்திரன் இயக்கத்தில் உருவான படங்களில் பூட்டாத பூட்டுகள் என்ற ஒரு படம் மட்டுமே மிகவும் சுமாரான படம்.
அதேபோல் அவரது இயக்கத்தில் உருவான ஜானி படம் ஒரு மாறுபட்ட பொழுதுபோக்கு படமாக இருக்கும். அதே நேரத்தில் ஒரு மெல்லிய வித்தியாசமான காதலையும் இடை இடையிடையே புகுத்தி இருப்பார்.
பாரதிராஜா படத்தின் ஹீரோ.. கமல், ரஜினி, குஷ்புடன் நடித்து தொழிலதிபரான நடிகர்..!
மகேந்திரன் படம் என்றாலே இசைஞானி மிகவும் சிறப்பாக இசையமைத்து கொடுப்பார் என்று கூறுவது உண்டு. மகேந்திரன் இயக்கிய் 12 படங்களில் 10 படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்துள்ளார். இளையராஜா இசையில் அவரது படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. அதற்கு ஜானி படத்தின் பாடல்களை ஒரு உதாரணமாக கூறலாம்.
மகேந்திரனின் தனித்துவமான அம்சம் என்னவென்றால் அவர் உருவாக்கும் கேரக்டர்களைதான் கூற வேண்டும். குறிப்பாக உதிரிப்பூக்கள் படத்தில் இடம்பெற்ற விஜயன் கேரக்டர் இதுவரை எந்த சினிமாவிலும் இதற்கு முன்பும், பிறகும் பார்த்ததில்லை. அதேபோல் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் மாலா என்னும் கேரக்டர் மிகவும் புதுமையானது.
மகேந்திரன் படங்களில் பெண்களின் கேரக்டர் மிகவும் வலிமையாக அமைக்கப்பட்டிருக்கும். ஆண் ஆதிக்கத்தில் உள்ள குடும்பத்தில் கூட பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் வகையிலும் அதே நேரத்தில் பெண்கள் படும் பாடுகளை அவர் ஆணி அடித்தார்போல் மனதில் பதியும் வகையில் கூறி இருப்பார்.
வரிசையாக 6 வெற்றி படங்கள்.. இளையராஜாவை பகைத்ததால் தொடர் தோல்வியால் துவண்ட தயாரிப்பாளர்!
மொத்தத்தில் சில படங்கள் மட்டுமே இயக்கினார் என்றாலும் அந்த படங்கள் அனைத்துமே தமிழ் சினிமா உள்ளவரை பேச வைக்கும் படங்களாக எடுத்ததுதான் மகேந்திரனின் சிறப்பாகும்.