அமெரிக்காவில் பிறந்த ஒருவர் அங்கே திரைப்படவியல் படித்து, பின்பு இந்தியா வந்து சிகரம் தொட்ட 3 திரை ஜாம்பவான்களை அறிமுகப்படுத்தினார் என்றால் வியப்பாக உள்ளதா? எல்லீஸ் டங்கன் என்னும் இயக்குநர் தான் அவர். இந்தப் பெயரே தமிழ் சினிமாவில் அறியப்படாத புதுப் பெயராக உள்ளதா?
பிரபல இந்தியத் திரைப்பட இயக்குநர் டாண்டன் அமெரிக்காவில் திரைப்படவியல் படிக்கம் போது ஏற்பட்ட பழக்கத்தால் தன்னுடன் பயின்ற டங்கனை இந்தியாவிற்கு அழைத்து வந்தார். பின் டாண்டன் இந்தியா வந்து முதன் முதலாக கொல்கத்தாவில் நந்தனார் என்ற படத்தினை இயக்க அவருக்கு உதவியாக சில காட்சிகளையும் இயக்கியிருந்தார் எல்லீஸ் டங்கன்.
அதன்பின் மருதாசலம் செட்டியார் தனது அடுத்த படத்தை இயக்க டாண்டனிடம் கேட்க, அவரோ தன் நண்பர் டங்கனை அவரிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவ்வாறு எல்லீஸ் டங்கன் இயக்கிய முதல் படம்தான் 1936-ல் வெளியான சதிலீலாவதி. அதுவரை மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரை இப்படத்தில் அறிமுகப்படுத்தி ஒரு காட்சியில் நடிக்க வைத்தார் டங்கன்.
எம்.ஜி.ஆரின் இந்தப் படம் இத்தனை சாதனைகளுக்குச் சொந்தமானதா.. திரையில் மக்கள் திலகம் நடத்திய மேஜிக்
அதன்பின் எம்.ஜி.ஆர் மக்கள் மனதில் புகழ்பெற்ற ஹீரோவாக மாறியது தனி வரலாறு. அதன்பின் டங்கன் மீரா, அம்பிகாபதி, பொன்முடி, மந்திரி குமாரி ஆகிய படங்களை இயக்கினார். இதனிடையே 1950-ல் வெளியான ‘பொன்முடி’ படத்தில் நெருக்கமான காதல் காட்சிகளை எடுத்து கடும் விமர்சனத்துக்குள்ளானார். அமெரிக்க கலாசாரத்தை இந்திய மக்கள் மனதில் விதைக்கிறார் என்றெல்லாம் பத்திரிகையாளர்களின் பாய்ச்சலுக்கு ஆளானார் டங்கன்.
மேலும் அதே ஆண்டில் குண்டலகேசி காப்பியத்தைத் தழுவி, கலைஞர் கருணாநிதியின் திரைக்கதையில், எம்.ஜி.ஆரின் வாள் சண்டையுடன் வெளியான ‘மந்திரி குமாரி’ வசூலில் சக்கைபோடு போட்டு வரலாறு படைத்தது. இதுதான் டங்கன் தமிழில் இயக்கிய கடைசி படம். இதற்குப் பிறகு, மீண்டும் அமெரிக்காவிலுள்ள வர்ஜினியா நகருக்குக் குடிபெயர்ந்த டங்கன், அடுத்த 30 ஆண்டுகள் ஆங்கில டாக்குமென் டரி படங்களை எடுத்து வந்தார்.
முதன் முதலாக சதிலீலாவதி படத்திற்காக படத்தின் மேக்கிங் வீடியோவை உருவாக்கி அதை ஒரு குறும்படமாக வெளியிட்ட பெருமை இவரையே சாரும். மேலும் காமெடி மற்றும் குணச்சித்திரங்களில் கொடிகட்டிப் பறந்த டி.எஸ். பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகிய திரை ஜாம்பவான்களை தனது படத்தின் மூலமாக அறிமுகப்படுத்தியவரும் இவேரயாவார்.