எம்.ஜி.ஆரின் இந்தப் படம் இத்தனை சாதனைகளுக்குச் சொந்தமானதா.. திரையில் மக்கள் திலகம் நடத்திய மேஜிக்

அரசியலிலும் சரி.. நடிப்பிலும் சரி.. பொது வாழ்விலும் சரி.. எம்.ஜி.ஆர் என்ற பிம்பத்தினை இன்று வரை நாம் கொண்டாடி வருகிறோம். அவர் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டால் கணக்கே இராது. நடிகராக இருந்து எம்.ஜி.ஆர் செய்த பல சாதனைகளை இன்றுவரை யாராலும் உடைக்க முடியவில்லை. அந்தவகையில் எம்.ஜி.ஆரின் ஒரு படம் பல சாதனைகளுக்குச் சொந்தமாக விளங்கியது. அந்தப் படம் தான் அலிபாபாவும் 40 திருடர்களும்.

1954ஆம் ஆண்டு இந்தியில் வெளியான அலிபாபா அவுர் 40 சோர் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் பழம்பெரும் இயக்குநர் சுந்தரத்தை ஈர்க்க, அவர் இதனைத் தமிழில் தயாரிக்க முடிவு செய்தார். அதன்படி எம்.ஜி.ஆர்., பானுமதி நடிப்பில் அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற பெயரில் 1956ல் வெளியாகி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது.

அதில் ஒளிப்பதிவு, பிரமாண்டமான செட்டுகள் , விறுவிறு திரைக்கதை அட்டகாசமான பாடல்கள் ,ஆக்‌ஷன் காட்சிகள் நடன அமைப்பு மற்றும் ஆடை வடிவமைப்பு என பட்டியலிட்டு கொண்டே போகலாம் . வாசனின் சந்திரலேகா, அந்த நாள், மலைக்கள்ளன் ஆகிய படங்களுக்குப்பிறகு தமிழ் சினிமாவில் தொழில் நுட்பத்தில் மிகச்சிறப்பாக உருவான படம் “அலிபாபாவும் 40 திருடர்களும்” என்றால் அது மிகையாகாது.

அப்படத்தின் ஒரு காட்சியில் குதிரையில் 40 திருடர்கள் குகை நோக்கி வரும் காட்சியில் காமிராவின் கட்டமைவும் நகர்வு என்பது அது வரையில் தமிழ் சினிமாவில் நிகழாத பிரம்மாண்டம். சுப்பாராவ் எனும் ஒளிப்பதிவு மேதையின் திறமை அதில் பளிச்சிட்டது. அது போல இப்படத்தின் இன்னொரு மேதை கலை இயக்குனர். ஏ.ஜே.டொமினிக். ஒவ்வொரு முறை குகை திறக்க பயன் படுத்தப்பட்ட தொழில்நுட்பமும் செயல் படுத்திய விதமும் அபாரம். இன்று வரையும் அப்படி ஒரு மிரட்சியை யாரும் தமிழ் சினிமாவில் உருவாக்கவில்லை எனலாம்.

இதுமட்டுமன்றி அலிபாபா மற்றும் காசிம் வீடுகள், மார்ஜியானா நடனமாடும் விடுதி, கடைத்தெரு, அதில் இருக்கும் நடைபாலம் போன்றவை கதை நடக்கும் அரேபிய உலகத்துக்கே அழைத்து சென்றது என்றால் மிகையில்லை.

தந்தையுடன் ஸ்கூட்டரில் சென்ற தளபதி விஜய்க்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. SAC-க்கு பழம்பெரும் நடிகர் செஞ்ச அந்த உதவி

மேலும் இன்றும் ஹிட் பாடல்களாக விளங்கும் ‘அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்’ ,‘மாசிலா உண்மைக் காதலே’, ‘சின்னஞ்சிறு சிட்டே என் சீனா கற்கண்டே.. ‘உல்லாச உலகம் எனக்கே சொந்தம்’ பாடலும், ‘அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி’’,.எனப் படத்தில் வந்த அனைத்து பாடல்களும் பெரிதாக கொண்டாடப்பட்டது. இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி இந்த பாடல்களை பெரும்பாலம் இந்தி மூலப்படத்தை தழுவியே மெட்டமைத்திருந்தார்.

இப்படத்தின் துவக்கத்தில் வரும் ‘சலாம் பாபு சலாம் பாபு என்னைப் பாருங்க’ என்ற பாடலுக்கு நடனம் ஆடிய பெண் தான் பிற்பாடு இந்திக்குப் போய் வஹிதா ரஹ்மான் எனும் புகழ்பெற்ற நடிகையாகக் கொடிகட்டிப் பறந்தார். அந்த சலாம் பாபுவுக்கு பிறகு கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தின் மூலம் கமலுக்கு அம்மாவாக தமிழுக்குத் திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படத்துக்கு வசனம் எழுதியவர் முரசொலி மாறன் என்றும், ஏ.எல்.நாராயணன் என்றும் இரு வேறு தகவல்கள் உண்டு.

1956-ல் தைத் திருநாளில் வெளியான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படம் தமிழகமெங்கும் சக்கைப் போடு போட்டது. படம் பல வகையில் சாதனை நிகழ்த்தினாலும் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முழு நீள வண்ணப்படம் என்ற அழிக்க முடியாத, உடைக்க முடியாத பெருமையையும் தக்க வைத்துக்கொண்டது என்பதும் உண்மை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews