தனுஷ் இயக்கும் படத்தில் மகன் யாத்ரா கொடுத்த சூப்பர் என்ட்ரி.. அதுவும் இப்படி ஒரு ரூட்லயா..

Published:

தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த நடிகர் என பெயர் எடுத்தவர் தான் தனுஷ். ஆரம்பத்தில் இவரது தந்தை இயக்கத்தில் உருவான படங்களில் நடிப்பில் தனுஷ் திணறினாலும் பின்னர் ஒவ்வொரு படத்திலும் தன்னை மெல்ல மெல்ல அப்டேட் செய்து கொண்டே இருந்தார். இதனைத் தொடர்ந்து, தனுஷ் திரைப்படங்களில் அவரது நடிப்பும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த, இன்று சர்வதேச அரங்கில் கூட முக்கியமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.

ஆடுகளம், அசுரன், வடசென்னை, கர்ணன், பொல்லாதவன், புதுப்பேட்டை, மரியான், மயக்கம் என்ன என தனுஷ் நடித்த பல்வேறு திரைப்படங்கள் நடிப்பு ரீதியாக பெரிய அளவில் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அவரது நடிப்பை இந்திய பிரபலங்கள் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் பிரபலங்களும் உற்று கவனித்ததால் பாலிவுட் திரைப்படங்களில் நடித்த தனுஷ், மெல்ல மெல்ல ஹாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்திருந்தார்.

அவெஞ்சர்ஸ் இயக்குனர் ரூசோ பிரதர்ஸ் இயக்கிய படத்தில் நடித்திருந்த தனுஷ், மீண்டும் அவர்களின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆரம்பத்தில் இவர் ஒல்லியாக இருந்ததால் இவரெல்லாம் ஒரு நடிகரா என விமர்சனம் செய்தனர். ஆனால் அதே உடம்பை வைத்துக்கொண்டு நடிப்பில் பல பரிமாணங்களை காட்டி ரசிகர்களை கவர்ந்து வரும் தனுஷ், சமீபத்தில் ராயன் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார்.

இவரது இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படமான பவர் பாண்டி பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்த சூழலில் ராயினும் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்திருந்தது. ஏற்கனவே நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல முகம் கொண்ட தனுஷ், இரண்டு திரைப்படங்களை இயக்கியிருந்த சூழலில் அடுத்ததாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படம் தற்போதுள்ள இளம் தலைமுறைகள் இடையே இருக்கும் காதலை பற்றி பேசுவதாகவும் படத்தின் போஸ்டர்கள் மூலம் தெரிய வருகிறது. இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் சூழலில், இதன் முதல் சிங்கிளான Golden Sparrow பாடல் 30 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது.

நடிகை பிரியங்கா மோகன் இந்த பாடலில் கேமியோ ஒன்றை செய்துள்ளார். போஸ்டர்கள் கலர்ஃபுல்லாக இருக்கும் சூழலில், பாடல்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. அப்படி இருக்கையில் இந்த பாடலை எழுதியுள்ளது யார் என்பது குறித்த தகவல் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. Golden Sparrow பாடல் தொடர்பாக எஸ் ஜே சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கோல்டன் ஸ்பேரோ பாடலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பிரியங்கா மோகனிடம் இருந்து அபாரமான நடனத்தை தனுஷ் வெளிப்படுத்தி உள்ளார். அவரது ஸ்டெப் அனைத்தும் மிக எளிமையாக, ஸ்டைலிஷாகவும் இருந்தது. அவர் பாடல் முழுக்க பட்டையைக் கிளப்பியுள்ளார்.

அதே போல இந்த கோல்டன் ஸ்பேரோ பாடலையும் தனுஷின் மகன் யாத்ரா தனுஷ் எழுதியுள்ளார். அற்புதமான பையன்” என எஸ். ஜே. சூர்யா குறிப்பிட்டுள்ளார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடலை யார் எழுதியது என்ற தகவலை படக்குழுவினர் வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் அதனை தனுஷ் மகன் எழுதியுள்ளதும் தற்போது தெரிய வந்துள்ளது.

மேலும் உங்களுக்காக...