தமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சம் இல்லை என்ற வகையில் பல காமெடி நடிகர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை சிரிக்க வைத்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் உசிலைமணி.
நடிகர் உசிலைமணி திருநெல்வேலி மாவட்டத்தில் 1934 ஆம் ஆண்டு பிறந்தார். அவரை நன்றாக படிக்க வைத்து ஒரு நல்ல வேலையில் அமர்த்த வேண்டும் என்பதுதான் அவரது பெற்றோர்களின் ஆசை. ஆனால் அவர் சிறு வயதிலேயே படிக்காமல் இரண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றினார்.
அவர போல நடிகர் இங்க யாரும் இல்ல… எம்ஜிஆர் கிட்டயே சிவாஜியை புகழ்ந்த வாலி… என்ன சொன்னார் தெரியுமா..?
அவர் நாடகங்களில் ஆர்வம் கொண்டு பல நாடகங்களை பார்த்தார். இந்த நிலையில் உசிலைமணி வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்பதற்காக அவரது அண்ணன் நடத்திய ஓட்டலில் நிர்வாகத்தை கவனிக்க உசிலம்பட்டிக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய அண்ணனுடன் உசிலம்பட்டி சென்ற உசிலைமணி அங்கு சில காலம் ஓட்டல் நிர்வாகத்தை பார்த்தார்.
அப்போது ஒய்வு நேரங்களில் நண்பர்களுடன் நாடகம் மற்றும் சினிமா பார்த்த அவர் ஒரு கட்டத்தில் தனக்கு சினிமாவில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது அதனால் சென்னை செல்கிறேன் என்றும் அவருடைய அண்ணனிடம் இருந்து விடை பெற்று சென்றார்.
சென்னை வந்தவுடன் சில நண்பர்களுடன் இணைந்து அவர் நாடகங்களில் நடித்தார். அவ்வாறு அவருக்கு அறிமுகமான ஒரு நண்பர்தான் நடிகர் தயிர்வடை தேசிகன். இருவரும் இணைந்து ஹாலிவுட்டில் உள்ள லாரல் ஹார்டி போல் சில நகைச்சுவை நாடகங்களை நடத்தினர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை வாசித்த நடிகர்.. கோலிவுட்டில் கோலோச்சிய பூர்ணம் விஸ்வநாதன்..!
அப்போதுதான் ஒரு கட்டத்தில் அவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல் என்ற திரைப்படத்தில் டிஎஸ் பாலையா குரூப்பில் உள்ள ஒரு கேரக்டரில் நடித்தார். முதல் படத்திலேயே அவருக்கு ஓரளவுக்கு பெயர் சொல்லும் வகையில் கேரக்டர் அமைந்ததால் அதன் பின்னர் அவருக்கு ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது.
பெற்றால் தான் பிள்ளையா, செல்வம், மகாகவி காளிதாஸ், வாலிப விருந்து, காவல்காரன், கணவன், ஒளி விளக்கு, ரகசிய போலீஸ் 115 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். உசிலைமணியின் உடல் பருமனை பலர் கேலி செய்த நிலையில் அந்த உடல் பருமனையே பாசிட்டிவ்வாக மாற்றி அவர் நகைச்சுவை செய்தார்.
நகைச்சுவை நடிகர்களில் முதல் முதலாக உடல் மொழியை வைத்து நகைச்சுவை செய்தவர் உசிலைமணிதான். திரைப்படங்களில் மட்டுமின்றி ஒருசில விளம்பர படங்களிலும் உசிலைமணி நடித்தார். காபி நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் பேஷ் பேஷ், காபி ரொம்ப நன்னாயிருக்கு என்று அவர் பேசிய வசனம் ஏராளமானோரை கவர்ந்தது.
நடிகர் உசிலைமணி கடந்த 1991 ஆம் ஆண்டு எஸ்வி சேகர் நடித்த பொண்டாட்டி பொண்டாட்டி தான் என்ற திரைப்படத்தில் தான் கடைசியாக நடித்தார். இதனை அடுத்து 1993 ஆம் ஆண்டு அவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரது இரண்டு கால்களையும் எடுக்க வேண்டிய நிலை வந்தது.
அதன் பிறகு அவர் தொடர்ச்சியாக தான் சம்பாதித்த பணத்தை மருத்துவத்திற்காகவே செலவழித்தார். 1996 ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி தனது 62வது வயதில் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நூற்றுக்கணக்கான படங்களில் உசிலைமணி நடித்துள்ளார். உசிலைமணி மறைந்தாலும் அவரது நடிப்பு இன்னும் ரசிகர்கள் மனதில் என்றென்றும் நிலைத்து இருக்கும்.