பொதுவாக கணவன் மனைவி விவாகரத்து பெற்றுவிட்டால் இருவருக்கும் இடையே எந்த விதமான தொடர்பும் இருக்காது அல்லது இருவருக்கும் பிரச்சனைகள் வரும் என்பது போன்றுதான் தமிழ் திரைப்படங்களின் கதைகள் அமைந்திருக்கும். ஆனால் முதன்முதலாக வித்தியாசமாக விவாகரத்துக்கான கணவன் மனைவி இடையே மீண்டும் காதல் தோன்றுவது எப்படி என்ற திரைக்கதையை அமைத்து வெற்றி பெற்ற படம்தான் மௌன கீதங்கள்.
பாக்யராஜ் என்றாலே திரைக்கதை மன்னன் என்று கூறுவதை இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்து இருப்பார். வழக்கமான கணவன் மனைவிக்கு இடையே வரும் சந்தேகம் என்ற நோய்தான் இந்த படத்தின் கதை. பாக்யராஜ் மற்றும் சரிதா ஆகிய இருவரும் தம்பதிகளாக இருப்பார்கள். இவர்களுக்கு ஒரு மகன் இருப்பார். இந்த நிலையில்தான் திடீரென பாக்யராஜுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக தெரியவரும். இதனால் சரிதா ஆவேசம் அடைந்து விவாகரத்து பெற முடிவு செய்வார்.
மணிவண்ணன் – பாக்யராஜ் இடையே கத்திச்சண்டை.. புதுமையான விளம்பரத்தால் சூப்பர்ஹிட் ஆன படம்..!
தான் தவறு செய்து விட்டேன், இனிமேல் தவறு செய்யமாட்டேன், தன்னை ஏற்றுக்கொள் என்று பாக்யராஜ் கெஞ்சுவார். ஆனால் சரிதா பிடிவாதமாக அவரை விட்டு பிரிய முடிவு செய்வார். விவாகரத்தும் கிடைத்துவிடும்.
அதன் பிறகு நடக்கும் சின்ன சின்ன சம்பவங்கள், அந்த சம்பவங்கள் சரிதாவின் மனதை மாற்றும். ஒரு கட்டத்தில் சரிதாவை உடன் வேலை பார்க்கும் அலுவலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் சந்தேகப்படுவார்கள். ஆனால் பாக்யராஜ் மட்டும் ‘சுகுணா ஒரு நெருப்பு மாதிரி அவளை யாராவது தொட்டால் அவளும் எரிந்து விடுவாள், அவளை தொட வந்தவனையும் எரித்துவிடுவார்’ என்று கூறுவார்.
அந்த சம்பவம்தான் சரிதாவின் மனதை மாற்றும், அதன் பிறகு நடக்கும் சில சம்பவங்கள், தனக்கு ஒரு நல்ல கணவர் தான் அமைந்திருக்கிறார், ஆனால் சந்தர்ப்பவசத்தால் சிறு தவறு செய்து விட்டார் என்று எண்ணி மனம் திருந்துவார். ஆனால் கிளைமாக்ஸில் திடீர் என்ற ஒரு திருப்பம் வரும், யாரும் எதிர்பாராத அந்த திருப்பம் தான் பாக்யராஜின் சூப்பர் திரைக்கதையாக அமையும்.
ஒரே கதையை இயக்கிய பாரதிராஜா, பாக்யராஜ்… இரண்டும் வெற்றி பெற்ற ஆச்சரியம்..!
இந்த படம் கடந்த 1981ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது. பாக்யராஜ், சரிதா, மாஸ்டர் சுரேஷ் என்ற மூன்றே முக்கிய கேரக்டர்கள் தான் இந்த படம் முழுவதும் வரும். பாக்யராஜின் ஒரு சில படங்களுக்கு இசையமைத்த கங்கை அமரன் தான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். அச்சு அசல் இளையராஜா இசை போலவே பாடல்கள் அனைத்தும் சூப்பராக வந்திருக்கும். குறிப்பாக ‘மூக்குத்தி பூமேலே’, ‘டாடி டாடி’, ‘மாசமோ மார்கழி மாசம்’ ஆகிய பாடல்கள் இன்றளவும் பிரபலமாக உள்ளது.
இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி 25 வாரங்களுக்கு மேல் ஓடி வசூலில் சாதனை செய்தது. தமிழகம் மட்டுமின்றி மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படம் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட்டானது.
ஒரே தீபாவளியில் ரிலீஸ் ஆன சிவாஜி, கமல், ரஜினி படங்கள்.. ஆனால் ஜெயித்தது பாக்யராஜ் தான்..!
ஒரு சாதாரண கணவன், மனைவி சண்டை, விவாகரத்து பிரச்சனை தான் கதை என்றாலும் அதை சொன்ன விதம் தான் இந்த படத்தின் சிறப்பம்சம். படம் தொடங்கும் போது பாக்யராஜூம், சரிதாவும் பிரிந்தது போல் காண்பித்து, அதன் பிறகு பிளாஷ்பேக்கில் அவர்களுக்கிடையே உள்ள பிரச்சனையை காண்பித்து நிகழ்காலத்தில் மீண்டும் ஏற்படும் பிரச்சனைகளை காண்பித்து, கடைசியில் ஒரு புள்ளியில் இணைத்து கிளைமாக்ஸ் காட்சியை பாக்யராஜ் கொண்டு வந்திருப்பார்.