பிக் பாஸ் 8: உங்க காதல் கதை எல்லாருக்கும் தெரியுமே.. அருண் வாயை ஆஃப் செய்த சாச்சனா.. போன சீசன் போட்டியாளர் தான் போலயே..

By Ajith V

Published:

Arun Prasath and Sachana : பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் வாரத்தில் கொஞ்சம் டல்லாக சென்றாலும் இரண்டாவது வாரத்தில் டாப் கியர் எடுத்திருக்கிறது என்று சொல்லலாம். அனைத்து போட்டியாளர்களுமே தங்களின் திறனை அறிந்து மெல்ல மெல்ல பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் விளையாட்டையும் ஆரம்பித்துள்ளனர். இத்தனை நாட்கள் மிக அமைதியாகவும், சரியாக விளையாடாமலும் இருந்ததால் அதிலிருந்த தவறுகளை எல்லாம் விஜய் சேதுபதி வந்ததுக்கு பின்னர் அனைவரும் புரிந்து கொண்டனர்.

இனிவரும் நாட்களில் போட்டியை போட்டியாக எடுத்து விளையாடவும் அனைவரும் தயாராக உள்ளதாக தெரிகிறது. மேலும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியில் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கிங்ஸ் மற்றும் குயின் டிவி என்ற பெயரில் டாஸ்க்குகளும் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொருவரும் தங்களது முழுத்திறனை வெளிப்படுத்தி விளையாடி வரும் நிலையில் சமீபத்தில் வேறு சில டாஸ்க் எல்லாம் கொடுக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே நான்கு பெண் போட்டியாளர்களில் ஒருவரை நாமினேஷனில் இருந்து ஃப்ரீ செய்வதற்கான வாய்ப்பும் அந்த அணிக்கு கொடுக்கப்பட்டது. இதில் மற்ற ஐந்து பெண்களும் சேர்ந்து யாரை நாமினேஷன் பட்டியலில் இருந்து மாற்றுவார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஒரு பக்கம் இப்படி டாஸ்க், போட்டி என பரபரப்பாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சில போட்டியாளர்கள் ஒன்றாக அமர்ந்து பல சுவாரஸ்யமான விஷயங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் சவுந்தர்யா, விஷால் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களது காதல் கதையை பகிர தொடங்கினர். அந்த வகையில் சீரியல் நடிகரான அருண் தனது காதல் கதை சொல்ல தொடங்கிய போது சாச்சனா சொன்ன விஷயமும் ரசிகர்களின் கருத்தும் அதிக வைரலாகி வருகிறது. விஷால் தனது காதல் கதையை சொல்லி முடித்ததும் பேசும் அருண், “ஒருத்தர் சொன்னார் என்பதற்காக அனைவரும் தங்கள் காதல் கதையை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என கூறுகிறார்.

இதனைக் கேட்டதும்,”நீங்க ஏதும் சொல்ல வேண்டாம். உங்கள் கதை எல்லாருக்கும் தெரியும்” என சாச்சனா கூறுகிறார். இதிலிருந்து சமாளித்துக் கொண்டு பேசும் அருண், மற்ற போட்டியாளர்களிடம் தங்களின் காதல் கதையை சொல்லும்படியும் கூறுகிறார். ஏற்கனவே சீரியல் நடிகையும், கடந்த பிக் பாஸ் சீசனின் வெற்றியாளருமான அர்ச்சனாவை அருண் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இதனைத் தான் சாச்சனா தெரியும் என்று கூறியிருப்பார் என்றும், பலரும் பல விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.