அஜித் நடித்த ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் முதலில் ஷாலினியை ஒப்பந்தம் செய்ய படக்குழுவினர் முயன்ற போது அவர் தனக்கு நடிக்க விருப்பமில்லை எனக் கூறியதாகவும், அதன் பிறகு அஜித்தே கேட்டுக் கொண்டபோதிலும் அவர் நடிக்க முடியாது என்று கூறியதாகவும் தெரிகிறது. அதன் பிறகு தான் அவர் ஒரு கட்டத்தில் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் அஜித்திற்கும் ஷாலினிக்கும் காதல் ஏற்பட்டது.
குழந்தை நட்சத்திரம் முதல் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ஷாலினி. அதன் பிறகு அவர் தமிழில் காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
முதல் படமே சூப்பர் ஹிட்டானதை அடுத்து அவருக்கு பல திரையுலக வாய்ப்புகள் குவிந்து வந்தது. ஆனால் அவருக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது என்ற காரணத்தால் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே சில மலையாள படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்ததால் அந்த படங்களை மட்டும் முடித்துவிட்டு அவர் முழுமையாக படிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்தார்.
இந்த நிலையில் தான் சரண் இயக்கத்தில் ‘அமர்க்களம்’ என்ற திரைப்படம் உருவானது. இந்த படத்தில் ஷாலினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று சரண் முடிவு செய்து ஷாலினியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் நான் ஏற்கனவே கமிட்டான படங்களை முடித்துவிட்டு படிக்கப் போகிறேன் என்றும் தன்னால் இனிமேலும் நடிக்க முடியாது என்றும் அவர் கூறிவிட்டார். இந்த நிலையில் தான் அஜித்திடம் சரண் கூறியபோது நான் வேண்டுமானால் பேசி பார்க்கிறேன் என்று கூறினார்.
அப்போது அவர் ஷாலினியிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களுடன் நடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் எனக்காக இந்த ஒரே ஒரு படத்தில் மட்டும் நடியுங்கள் என்று கூறியுள்ளார். எனக்காக என்ற அந்த ஒரு வார்த்தையின் காரணமாகத்தான் அந்த ஒரு படத்தில் மட்டும் நடிக்க ஷாலினி ஒப்புக்கொண்டார்.
இதனை அடுத்து அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே சரணிடம் அஜித் இந்த படத்தை விட்டுவிட்டு எடுக்க வேண்டாம், மொத்தமாக 50 நாள் கால் ஷீட் தருகிறேன், முடித்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார். எதற்காக என்று கேட்டபோது நான் ஒருவேளை ஷாலினியை காதலித்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. அதனால்தான் சீக்கிரம் இந்த படத்தை முடித்துவிட்டு விலகலாம் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அப்போது பக்கத்தில் நின்றிருந்த ஷாலினி வெட்கத்தினால் சிரித்ததை அடுத்து ஷாலினி மனதிலும் அஜித் மீது காதல் உள்ளது என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து தான் இருவரும் ஒருவரை ஒருவர் பேசி காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர் என்பதும் ஷாலினியின் வீட்டிலும் அஜித் பேசி பிறகு திருமணத்தை உறுதி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஜித் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஷாலினியை தனக்கு சிறு வயதிலேயே தெரியும் என்றும் ஷாலினியை தான் சிறு வயதிலேயே பார்த்து ரசித்ததாகவும் கூறியுள்ளார்.
மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது தன்னுடைய கடை அருகில் உள்ள ஒரு ஓட்டலில்தான் ஷாலினி குழந்தை நட்சத்திரமாக நடித்த சங்கர் குரு படத்தின் படப்பிடிப்பு நடந்தது என்றும் அந்த படப்பிடிப்பை பார்க்க தான் திருட்டுத்தனமாக சென்றதாகவும், அப்போதே தனக்கு ஷாலினியை பிடிக்கும் என்று கூறினார்.
ஆனால் அதே நேரத்தில் எதிர்காலத்தில் ஷாலினி தான் தனக்கு மனைவியாக வருவார் என்று தான் எதிர்பார்க்கவே இல்லை என்றும் ஒரு குழந்தை நட்சத்திரமாக அவரை ரசித்தேன் அவ்வளவுதான் என்று கூறினார். இதை நான் பலமுறை ஷாலினியிடமே கூறியிருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
அறிமுகமானது ஒரு பாடல் நடனத்தில்.. அதன்பின் நடிகையாக மாறிய தேவயானி..!
மேலும் தன்னுடைய படங்கள் குறித்து ஷாலினி மட்டுமே மிகச் சரியாக விமர்சனம் செய்வார் என்றும் தன்னுடைய நண்பர்கள் கூட தன் முகத்திற்கு எதிரே படத்தை நெகட்டிவ்வாக விமர்சனம் செய்ய மாட்டார்கள், ஆனால் ஷாலினி படம் நன்றாக இல்லை என்றால் நன்றாக இல்லை என்று என்னிடமே கூறி விடுவார் என்றும் அந்த அளவுக்கு அவர் ஓபனாக பேசுவார் என்று அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.