19 மாதங்கள் கோமாவில் இருந்த நடிகையர் திலகம் சாவித்திரி… கடைசி கால சோகம்!

By Bala Siva

Published:

திரை உலகில் நடிகையர் திலகம் என்ற பட்டம் பெற்ற நடிகை சாவித்திரி மாதிரி உச்சத்தில் இருந்தவர்கள் யாரும் இல்லை. அதே போல் வீழ்ந்தவர்களும் யாரும் இல்லை என்று சொல்லலாம்

சாவித்திரி ஒரு காலத்தில் தனக்கு ஒரு பீடா வாங்குவதற்காக அவருடைய தியாகராய நகர் வீட்டிலிருந்து அண்ணா சாலைக்கு தனது பிளைன்மூத் காரை அனுப்பி வைப்பாராம். ஆனால் கடைசி காலத்தில் அவர் சொந்த கார் இல்லாமல் மருத்துவமனையில் 19 மாதங்கள் கோமாவில் இருந்து அதன் பின் காலமானார்.

நடிகை சாவித்திரி பாதாள பைரவி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் பல படங்களில் நாயகியாக நடித்தார். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்எஸ்ஆர் உள்பட உள்பட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். தென்னிந்திய திரை உலகில் அவர் மிகப்பெரிய சாதனை செய்துள்ளார்.

இந்தியா-சீனா போரை மையமாக கொண்ட ‘ரத்தத்திலகம்’ திரைப்படம்.. சிவாஜி-சாவித்திரி அற்புதமான நடிப்பு..!

savithiri

தெலுங்கில் மட்டும் 138 படங்கள் நடித்த அவர் தமிழில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஒரு சில கன்னட படங்கள் மற்றும் இந்தி மலையாள படங்கள் என மொத்தம் 252 படங்களில் நடித்த சாவித்திரி தனது 46 வயதிலேயே காலமானது திரை உலகின் துரதிஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

சாவித்திரிக்கு இறங்குமுகம் என்பது பிராப்தம் என்ற படத்தை தயாரித்து இயக்கியதில் இருந்து ஆரம்பமானது என்று சொல்லலாம். 1971 ஆம் ஆண்டு இந்த படத்தை அவரே தயாரித்து இயக்கினார். சிவாஜி கணேசன், சாவித்திரி நடித்த இந்த படம் பூர்வ ஜென்ம கதை அம்சம் கொண்டது. இந்த படத்தை தயாரித்து இயக்கிய போது நீ இந்த படத்தில் நடிக்காதே, வேறு ஒரு நடிகையை நடிக்க வை என்று ஜெமினி கணேசன் அறிவுரை கூறினார்.

ஏனெனில் அப்போது சாவித்திரி மிகவும் குண்டாக இருந்தார், ஆனால் ஜெமினி கணேசன் பேச்சை அவர் கேட்கவில்லை. திரையில் சாவித்திரியை பார்த்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் இந்த படத்தின் திரைக்கதையும் மனதில் ஒட்டவில்லை, எனவே இந்த படம் படுதோல்வி அடைந்தது

இதன் பிறகு தான் சாவித்திரிக்கு பல பிரச்சினைகள் ஆரம்பித்தன. பட தயாரிப்பின் போது உதவி செய்கிறோம் என்று கூறிய தோழிகள் அனைவருமே காணாமல் போனார்கள். திடீரென வீட்டில் உள்ள நகைகள் திருடு போயின. பட தயாரிப்புக்காக வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.

1956 ஆம் ஆண்டு வாடகை வீட்டில் இருந்து தனது வாழ்க்கையை ஆரம்பித்த சாவித்திரி மிகக்குறுகிய காலத்திலேயே தி.நகரில் ஒரு கனவு மாளிகையை கட்டினார். ஆனால் கடைசி காலத்தில் கடன் தொல்லை காரணமாக அந்த மாளிகையை விற்றுவிட்டு அதன் அருகிலேயே ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்தார்

1970 ஆம் ஆண்டுகளில் அவர் உடல் நலமில்லாமல் இருந்தபோது சிகிச்சைக்கு கூட அவரிடம் பணம் இல்லை. இந்த நிலையில் ஒரு முன்னணி தயாரிப்பாளரிடம் அவர் பத்தாயிரம் ரூபாய் கடன் கேட்டார். அதே தயாரிப்பாளர் சில ஆண்டுகளுக்கு முன்னர் சாவித்திரியிடம் ஐந்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அந்த கடனை அவர் திருப்பிக் கொடுக்கவே இல்லை. ஆனால் சாவித்திரி தனது மருத்துவ செலவுக்காக பத்தாயிரம் ரூபாய் கேட்டபோது அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

பேசிக்கவே மாட்டார்கள்….. சரோஜா தேவிக்காக போன சாவித்ரி….. ஆச்சர்யமாக பார்த்த திரைவட்டாரம்…..!!

savithiri2

நடிகை சாவித்திரி தனது இறுதி காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்தார். நீரிழிவு நோய் அதிகமாக இருந்ததை அடுத்து அவர் தான் இருக்கும்போதே தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்து 16 வயதிலேயே தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.

சாவித்திரிக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கலைச்செல்வம் என்ற பட்டத்தை கொடுக்க முடிவு செய்தது. இந்த விழாவுக்கு சாவித்திரி வரமாட்டார் என்று தான் நினைத்தார்கள். ஆனால் சாவித்திரி இந்த விழாவில் கலந்துகொண்டு என்னுடைய நஷ்டத்துக்கு நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை, நான் அடைந்த நஷ்டத்திற்கும் கஷ்டங்களுக்கும் நானே தான் காரணம். தயவுசெய்து என்னை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு திரையுலகினர் சுதாரித்து வாழ்ந்து கொள்ளுங்கள், இந்த உலகத்தில் யாரையும் எளிதில் நம்பாதீர்கள், அப்படி நம்புவதாக இருந்தால் 100 முறை யோசிங்கள், சொந்த படம் யாரும் எடுக்காதீர்கள் என்று அறிவுரை கூறினார்.

சாவித்திரி பெங்களூரில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது திடீரென தான் தங்கி இருந்த ஓட்டலில் மயங்கி விழுந்து விட்டார். உடனே ஹோட்டல் நிர்வாகத்தினர் பெங்களூரில் இருந்து சரோஜாதேவிக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனே அப்போதைய கர்நாடக முதலமைச்சராக இருந்த குண்டுராவ் அவர்களை தொடர்பு கொண்டு சாவித்திரிக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தார். முதலமைச்சர் குண்டு ராவ் சாவித்திரிக்காக ஒரு தனி விமானத்தை ஏற்பாடு செய்து சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி செய்தார்.

savithiri1

சாவித்திரிக்கு – சரோஜாதேவிக்கும் இடையே இப்படி ஒரு போட்டியா… என்ன நடந்தது தெரியுமா?

அப்போதுதான் சாவித்திரி கோமாவுக்கு சென்று விட்டார். கிட்டத்தட்ட 19 மாதங்கள் கோமாவில் இருந்த சாவித்திரி, 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி காலமானார். தனது மனைவியின் உடலை தன்னுடைய வீட்டிற்கு எடுத்து வந்து ஜெமினி கணேசன் இறுதி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தார். திரை உலகில் ஏராளமானவர்களை வாழ வைத்த சாவித்திரியை கடைசி காலத்தில் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை என்பதுதான் பெரும் சோகம்.