ஏ.வி.எம் ஸ்டுடியோவில் மெய்யப்ப செட்டியாரையே நுழைய விடாத பானுமதி.. இறுதியில் நடந்த டுவிஸ்ட்

Published:

பல பிரம்மாண்ட படங்களைத் தயாரித்தவரும், இந்திய சினிமா உலகின் முன்னோடியுமாகத் திகழ்ந்தவர் ஏ.வி. மெய்யப்பசெட்டியார்.  இன்றும் சென்னையின் அடையாளமாக விளங்கும் முக்கிய இடங்களில் ஏ.வி.எம் ஸ்டுடியோவும் ஒன்று. பல ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் தயாரான படங்கள் பல பிளாக் பஸ்டர்களைக் கொண்டாடியுள்ளன.

அவ்வளவு ராசியான ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அந்த நிறுவனத்தின் உரிமையாளரையே இரண்டு மாதமாக நடிகை ஒருவர் உள்ளே விடாமல் செய்தார் என்றால் திகைப்பாக இருக்கிறதா? கண்டிப்புக்கும், சற்று முன்கோபத்திற்கும் பெயர் போன பழம்பெரும் நடிகை பானுமதிதான் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரை சில காலங்களுக்கு ஸ்டுடியோவில் நுழைய விடாமல் செய்தார்.

ஏ.வி.எம் தயாரித்த அன்னை படத்தில், பிரதான வேடத்தில் நடிக்க பானுமதியை விட்டால் ஆளில்லை என்ற நிலை நேரிட்டது. ஆனால் பானுமதியோ, பழைய மனக்கசப்புகளால் ஏவிம் தயாரிப்பு படங்களில் நடிப்பதில்லை என்ற மனநிலையிலிருந்தார். ஏ.வி. மெய்யப்ப செட்டியாரோ, பானுமதி இப்படத்தில் நடித்தாக வேண்டுமென்று கூறி, அவரை ஒப்பந்தம் செய்துவருமாறு தன் மகன்களை அனுப்பினார்.

அமெரிக்காவையே அதிர வைத்த நாக்க முக்க பாடல்… இசைக்கு மொழி அவசியமில்லை என நிரூபித்த விஜய் ஆண்டனி

பானுமதி முதலில் மறுத்தாலும், தன் கதாபாத்திரம் பிடித்ததாலும், தயாரிப்பு தரப்பினரின் நேர்த்தியான அணுகுமுறையாலும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனாலும், ஏவிஎம் ஸ்டுடியோவில் வந்து தான் நடிக்கமாட்டேனென்றும், வேறு ஸ்டுடியோ அல்லது வெளிப்புற இடங்களில் படம்பிடித்தால் நடிப்பதாகவும் கூறினார்.

தயாரிப்பு தரப்பினர், அது சாத்தியமற்றதென்று தம்நிலையைக் கூற, பானுமதியோ, அப்படியானால், தான் ஏவிஎம் ஸ்டுடியோ வந்தே படம் நடிப்பதாகவும், தான் நடிக்கும் காட்சிகள் படமாகி முடிவடையும் காலம் வரை, ஏ.வி.மெய்யப்ப செட்டியார், ஸ்டுடியோவிற்குள்ளேயே வரக்கூடாதென்றும் நிபந்தனை விதித்தார்.

தயாரிப்பு தரப்பினர், அதிர்ந்துபோய், ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம் கூற, அவரோ சாதாரணமாக இதைக் கருதி, பானுமதி நடித்தால் போதுமென்றும், தான் அதுவரை ஸ்டுடியோவிற்கு வராமல், வீட்டிலிருந்தபடியே இதர படவேலைகளைக் கவனிப்பதாகவும் கூலாக கூறினார். எனவே, அன்னை படம் சிறப்பாக உருவாக்கப்பட்டது. படப்பிடிப்பு நடந்த இருமாதங்களும் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் ஸ்டுடியோ பக்கமே வரவில்லை.
இருப்பினும் படம் அமோக வெற்றிபெற்றது;

அன்னை படத்தில் பானுமதி நடிப்பைப் புகழாதவர்கள் இல்லை. இறுதியாக பட வெற்றி விழாவின்போது, பானுமதி தன் செயலுக்கு வருந்தி, ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் கால்களில் பணிந்து வணங்கினார். ரசிகர்கள், அதை மரியாதையின் அடையாளமாகவே கருதினர். தயாரிப்பு நிறுவனத்தினருக்கே உண்மை நிலவரம் தெரிந்திருந்தது.

மேலும் உங்களுக்காக...