சினிமாவில் சேர ஓட்டலில் டேபிள் துடைத்தவர்.. நடிகர் குள்ளமணியின் அறியாத பக்கங்கள்..!!

By Bala Siva

Published:

தமிழ் திரை உலகில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென்றால் உயரமாக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும் என்று எழுதப்படாத விதி இருந்த நிலையில் உயரம் குறைவாக, சுமாரான அழகுடன் இருந்த குள்ளமணி பல படங்களில் நடித்து சாதனை செய்தார். காமெடி வேடங்களை ஏற்று அவர் ரசிகர்களை சிரிக்க வைத்த நிலையில் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்துக் கொண்டார்.

நடிகர் குள்ளமணி புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் வறுமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர், பள்ளியில் படிக்கும் போதே கலையின் மீது ஆர்வம் காட்டினார். பள்ளியில் படிக்கும் போது அவர் பாய்ஸ் நாடக குழுவில் இணைந்து சிறு சிறு நாடக கேரக்டர்களின் நடித்து வந்தார். அவருக்கு வளர்ச்சி குறைவாக இருந்ததால் அவருக்கேற்ற வேடத்தை நாடக குழுவினர் கொடுத்தனர்.

அவர் ஒரு சில நாடகங்களில் நடித்த நிலையில் சினிமா ஆசையுடன் தனது 15வது வயதில் சென்னை வந்தார். சென்னையில் உள்ள பல ஸ்டூடியோக்களுக்கு சென்று வாய்ப்புகள் கேட்ட நிலையில் அவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. இதனை அடுத்து கையில் இருந்த காசு கரைந்து போனதை அடுத்து சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் டேபிள் துடைக்கும் வேலை பார்க்க ஆரம்பித்தார்.

அவர போல நடிகர் இங்க யாரும் இல்ல… எம்ஜிஆர் கிட்டயே சிவாஜியை புகழ்ந்த வாலி… என்ன சொன்னார் தெரியுமா..?

kullamani1

அப்போதுதான் அந்த ஓட்டலுக்கு வந்த எழுத்தாளர் தூயவன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் தனது ஆசையை கூறிய போது இப்போதைக்கு உனக்கு சினிமா வேண்டாம். ஆனால் உன்னை சினிமாக்காரர் ஒருவரது வீட்டில் வேலைக்கு சேர்த்து விடுகிறேன், அங்கிருந்து கொண்டே சினிமாவுக்கு முயற்சி செய் என்று கூறினார்.

எழுத்தாளர் தூயவன் தனது நண்பரான ஜெய்சங்கர் வீட்டில் குள்ளமணியை வேலைக்கு சேர்த்துவிட்டார். ஜெய்சங்கர் மற்றும் அவரது அம்மா ஆகியோர்களிடம் நற்பெயரை பெற்ற குள்ளமணிக்கு அவ்வப்போது சினிமா ஆசையும் எழுந்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில் தான் ஜெய்சங்கருடன் அவ்வப்போது படப்பிடிப்புக்கு செல்லும் குள்ளமணி அவரிடம் தனது ஆசையை கூறினார். அவருடைய ஆசையை கேட்டு ஆச்சரியப்பட்ட ஜெய்சங்கர் சரியான நேரம் வரும்போது உனக்கு வாய்ப்பு தருகிறேன் என்று கூறியிருந்தார்.

அப்போதுதான் 1972 ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடித்த நவாப் நாற்காலி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்க குள்ளமணியை ஜெய்சங்கர் பரிந்துரை செய்தார். அதுதான் அவரது முதல் படம். இந்த படம் வெளியாகி அவருக்கு ஓரளவு பெயர் கிடைத்தாலும் அதன் பிறகு அடுத்த படம் கிடைப்பதற்கு அவருக்கு 10 வருடங்கள் ஆனது.

நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் இத்தனை படங்கள் இயக்கி உள்ளாரா? அதில் ஒன்று கமல் படம்..!

அவர் இந்த இடைவெளியில் சில நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். இதனை அடுத்து சிவாஜி கணேசன் நடித்த வசந்தத்தில் ஒரு நாள் என்ற திரைப்படத்தில் நடித்த குள்ளமணி அதன் பிறகு பாக்யராஜின் இன்று போய் நாளை வா, விஜயகாந்தின் வெற்றி, நானே ராஜா நானே மந்திரி,  அம்மன் கோயில் கிழக்காலே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

கரகாட்டக்காரன் படத்தில் அவருடைய காமெடி இன்றும் ரசிக்கும் வகையில் இருக்கும். கவுண்டமணியின் கார் அருகே வந்து பழைய ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் என்று குள்ளமணி கூறுவதும், கவுண்டமணி அவரை அடிக்கும் காட்சியும் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

kullamani2

அவரது காமெடியான நடிப்பு ரசிகர்களை கவர்ந்த நிலையில் அவருக்கு வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தது. கமலஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருக்கும். குள்ள வேடத்தில் நடித்த கமலுக்கு நண்பராக அவர் நடித்திருப்பார். அதேபோல் ரஜினியுடன் பணக்காரன் படத்தில் இணைந்து நடித்தார்.

இந்த நிலையில் தான் ஆபாவாணன் இயக்கத்தில் ராம்கி நடித்த இணைந்த கைகள் என்ற திரைப்படத்தில் வில்லனுக்கு அடியாளாக நடித்திருப்பார். அவர் ராம்கி உடன் சேர்ந்து நடித்த ஸ்டண்ட் காட்சி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருக்கு பலவிதமான வேடங்கள் கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொண்டு அவர் பல படங்களில் நடித்தார்.

1984 ஆம் ஆண்டு தனது அத்தை மகளை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உண்டு. சென்னையில் அவர் வசித்த வீட்டில் ஜெய்சங்கரின் அம்மா புகைப்படத்தை மாட்டி அதற்கு மாலை போட்டு வணங்கி வந்தாராம். தான் இந்த அளவுக்கு சென்னையில் பிரபலமாக இருக்கிறேன் என்றால் அதற்கு ஜெய்சங்கரின் அம்மா தான் காரணம் என்று அவர் எனக்கு இன்னொரு அம்மா என்றும் தன்னை பார்க்க வீட்டுக்கு வருபவர்களிடம் அவர் கூறுவாராம் .

திரைப்படங்களில் நடித்து ஓரளவுக்கு வசதியாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் உடல் நல கோளாறு காரணமாக மருத்துவத்திற்காக அவர் ஏராளமாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவ செலவிற்கு பணம் இல்லை என்ற நிலையில் தான் அன்றைய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் அவருக்கு உதவி செய்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி காலமானார்.

முன்னணி நடிகர்கள் இணைந்த ஒரே படம்….. ஹிட் அடிக்காமல் போனதே…..!!

சினிமாவில் சேர்த்து வைத்த மொத்த பணத்தையும் கடைசி காலத்தில் அவர் மருத்துவ செலவுக்காகவே செலவழித்து விட்டு பின்னர் வறுமையில் வாடியதாக கூறப்பட்டது. குள்ளமணியின் மறைவிற்குப் பிறகு அவரது மனைவி மற்றும் மகள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். அங்கேயே அவர்கள் செட்டில் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. குள்ளமணி மறைந்தாலும் அவரது நடிப்பு இன்னும் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்து இருக்கும்.