ஓவர் ஆக்டிங் செஞ்சாலும் கலங்க வைக்கும் நடிப்பு.. தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் கல்யாண் குமார் சாதிச்சது எப்படி?..

Published:

தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகர்களில் ஒருவர் கல்யாண் குமார். இவர் பெரும்பாலும் ஓவர் ஆக்டிங் செய்வார் என்று விமர்சனம் செய்யப்பட்டாலும் ரசிகர்களை உருக வைக்கும் அளவுக்கு சோகக் காட்சிகளில் தத்ரூபமாக நடிப்பார்.

நடிகர் கல்யாண் குமார் பெங்களூரை சேர்ந்தவர் என்றாலும் அவர் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான். இவரது பெற்றோர் இவரை டாக்டராக்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால் அவர் திரைப்படங்களில் நடிப்பதை தான் விரும்பினார். இதனை அடுத்து அவர் பெங்களூரில் இருந்து சென்னை வந்து வாய்ப்புக்காக பல நிறுவனங்களில் ஏறி இறங்கினார்.

ஆனால் அவருக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது ’நட்சத்திரா’ என்ற கன்னட திரைப்படத்தில் தான். இந்த படத்தில் அவர் நாயகனாக நடித்த நிலையில் அந்த படம் சுமாரான வெற்றி பெற்றது. அதன் பிறகு கிட்டத்தட்ட 10 படங்கள் கன்னடத்தில் நடித்தார்.

இந்த நிலையில் தான் ’கடவுளின் குழந்தை’ என்ற தமிழ் திரைப்படத்தில் கல்யாண் குமார் அறிமுகமானார். இந்த படம் ஒரு அமெரிக்க படத்தின் ரீமேக் ஆகும். இதனையடுத்து தாயில்லா பிள்ளை படத்தில் நடித்த நிலையில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் தான் ’நெஞ்சில் ஒரு ஆலயம்’.

இந்த படத்தில் முத்துராமன் மற்றும் தேவிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் முத்துராமனுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டராக கல்யாண்குமார் தத்ரூபமாக நடித்திருப்பார். தனது முன்னாள் காதலியின் கணவரை காப்பாற்ற வேண்டும் என்ற நெருக்கடியான நிலையில் அவருடைய நடிப்பு சிறப்பாகவும் இந்த படத்தில் அமைந்திருந்தது.

‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ படத்தின் வெற்றிதான் அவருக்கு தமிழ் திரை உலகில் ஏராளமான வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது. பாசம், அழகு நிலா, தென்றல் வீசும், நீங்காத நினைவு, கடவுளை கண்டேன், மணி ஓசை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

நடிகர் கல்யாண் குமாருக்கு தமிழ் திரை உலகில் மீண்டும் ஒரு திருப்புமுனையை கொடுத்த படம் என்றால் அது ’நெஞ்சம் மறப்பதில்லை’. பூர்வ ஜென்ம கதையம்சம் கொண்ட இந்த படத்தில் கல்யாண் குமார் மற்றும் தேவிகா ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்கள். அதன் பிறகு யாருக்கு சொந்தம், தாயின் கருணை உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் கன்னட திரைப்படத்தில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கினார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் புதுயுகம், சர்க்கரை பந்தல் போன்ற படங்களில் நடித்தார். இருப்பினும் ரீஎண்ட்ரியில் அவருக்கு பெரும் புகழை பெற்றுக் கொடுத்த படம் என்றால் அது பாக்யராஜ் இயக்கத்தில் உருவான ராசுக்குட்டி படம் தான். இந்த படத்தில் பாக்யராஜின் அப்பாவாக அற்புதமாக நடித்திருப்பார். இதன் பிறகு அஜித் நடித்த அமராவதி, விக்ரமன் இயக்கிய கோகுலம், அர்ஜுன் நடித்த ஜெய்ஹிந்த் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

நடிகர் கல்யாண் குமார்  கன்னட நடிகை ரேவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பரத் கல்யாண் என்ற மகன் இருக்கிறார். அவரும் தொலைக்காட்சிகளில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி அவர் ’இமைக்கா நொடிகள்’ உள்பட ஒரு சில படங்களில் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

நடிகர் கல்யாண் குமார் கடந்த 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவர் மறைந்தாலும் அவர் நடித்த படங்கள் என்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத நினைவுகளில் இருக்கும்.

மேலும் உங்களுக்காக...