வட இந்தியாவில் ஹேமாமாலினி மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற நிலையில் தென்னகத்து ஹேமமாலினி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை தான் பத்மப்பிரியா. எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அதேபோல் கன்னடத்தில் ராஜ்குமார் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பத்மப்ரியா சிறு வயதிலேயே நடனம் நாட்டியம் நடிப்பு ஆகியவற்றில் மிகுந்த ஆர்வமாக இருந்தார். சிறுவயதிலேயே கலையில் ஆர்வம் இருந்ததை கண்ட பத்மப்ரியாவின் பெற்றோர்கள் சென்னை சென்றால் அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று அவருக்காகவே சென்னைக்கு குடியேறினார்.
சென்னை தி.நகரில் உள்ள ஒரு பள்ளியில் பத்மப்ரியா படித்துக் கொண்டிருக்கும் போதே நடனம் நாட்டியம் உள்ளிட்ட கலைகளை முறையாக கற்றுக் கொண்டார். இந்த நிலையில் தான் சென்னையில் பத்மபிரியாவின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கு இயக்குனர் ஒருவர் பத்மப்ரியாவின் அழகு மற்றும் நாட்டிய கலையை பார்த்து தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்தார்.
உதவி ஒளிப்பதிவாளராக இருந்தவர் திடீரென நடிகையான அதிசயம்..‘நெஞ்சத்தை கிள்ளாதே’ வெற்றிக்கதை..!
அடப்பில்லலா தந்திரி என்ற அந்த படம் கடந்த 1974 ஆம் ஆண்டு வெளியானது. அதுவரை அவரது பெயர் பத்ம லோஷினி என்று இருந்த நிலையில் அந்த இயக்குனர் தான் அவரை பத்மபிரியா என்று மாற்றினார். இந்த படம் பெரிய அளவில் போகவில்லை என்றாலும் அதன் பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைத்தது.
தமிழில் தேங்காய் சீனிவாசன் நடித்த கார் ஓட்டி கண்ணன் என்ற திரைப்படத்தில் அவர் கமலா என்ற கேரக்டரில் அறிமுகமானார். இந்த படமும் சுமாராகவே போனது. அதன் பிறகு அவர் முத்துராமன் நடித்த தியாக உள்ளம் என்ற படத்தில் நடித்தார். அப்போதும் அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. ஆனால் சிவாஜி கணேசனுடன் அவர் நடித்த வைர நெஞ்சம் என்ற படம் அவருக்கு புகழும் பெயரையும் பெற்று கொடுத்தது.
இந்த படத்தில் கீதா என்ற கேரக்டரில் அவர் வாழ்ந்திருப்பதாக பலர் விமர்சனம் செய்தனர். இதனை அடுத்து முத்துராமனுடன் வாழ்ந்து காட்டுகிறேன், உண்மையே உன் விலை என்ன ஆகிய படங்களிலும் சிவகுமாருடன் சொர்க்கம் நரகம், பெருமைக்குரியவள் ஆகிய படங்களிலும் நடித்தார். ஜெய்சங்கர் உடன் அவர் நடித்த அன்று சிந்திய ரத்தம் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படம் பல திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி பத்மப்ரியாவுக்கு ரசிகர்கள் குவிந்தனர்.
எம்ஜிஆர் நடித்த திரைப்படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனில் அவர் இளவரசி பாமினி என்ற கேரக்டரில் நடித்தார். அந்த படம் அவருடைய நடிப்பை குறிப்பிடும் வகையில் இருந்தது. அதன் பிறகு ரஜினிகாந்த்தில் நடித்த ஆயிரம் ஜென்மங்கள் என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். பின்னர் வருவான் வடிவேலன், குப்பத்து ராஜா சிவாஜியுடன் மோகன புன்னகை ஆகிய படங்களில் நடித்தார்.
மோகன புன்னகை திரைப்படம் 1981 ஆம் ஆண்டு திரைக்கு வந்த நிலையில் அவர் 1983 ஆம் ஆண்டு சீனிவாசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன ஒரே வருடத்தில் இருவரும் பிரிந்து சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டனர்.
திருமணத்திற்கு பின்னர் நடிப்பதிலும் அவருக்கு விருப்பமில்லை. அதன் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து எம்ஜிஆர் நடித்து பாதியில் விட்டுப் போன நல்லதை நாடு கேட்கும் என்ற திரைப்படத்தில் அந்த படத்தின் இயக்குனர் நடிக்க வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் அவர் மறுத்துவிட்டார். எனவே அவர் நடித்த பழைய காட்சிகளுடன் படம் வெளியானது.
இதனை அடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்திக், ரகுவரன், தேவயானி, ரேவதி நடித்த தொட்டாசிணுங்கி என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் தான் நடிகை தேவயானி அறிமுகமானார். இந்த படத்திற்கு பின்னர் அவருக்கு அம்மா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்த போதிலும் அவர் நடிக்கவில்லை. நடிகை பத்மப்ரியா ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவான காதலன் திரைப்படத்தில் பிரபுதேவாவின் அம்மாவாகவும் எஸ்பிபி மனைவியாகவும் நடித்திருந்தார்.
ஆனால் அவர் நடித்த பல காட்சிகள் எடிட்டிங்கில் வெட்டப்பட்டது. படத்தை பார்த்த பத்மப்ரியா ஷங்கரை நேரில் பார்த்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியதாகவும், படம் நீளம் காரணமாக வேறு காட்சிகளை வெட்ட முடியவில்லை என்றும் அதனால் தான் உங்கள் காட்சிகளை வெட்டினேன் என்று ஷங்கர் சமாதானம் செய்ததாகவும் கூறப்பட்டது. அதனால் தான் அதன் பிறகு அம்மா வேடத்தில் நடிக்க வந்த பல வாய்ப்புகளை தட்டிக்கழித்துள்ளார்.
வில்லன் நடிகரை திருமணம் செய்த காமெடி நடிகை லலிதா குமாரி.. விவாகரத்து பின்னும் தைரியமான முடிவு..!
1997 ஆம் ஆண்டு நடிகை பத்மப்ரியா இதய பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து 1997 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். பத்மப்ரியாவுக்கு வசுமதி என்ற ஒரே மகள் உள்ளார். இவர் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்தும், வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை என்பதால் இங்கிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார் .