தமிழ் சினிமா நடிகர் ஒருவர் ஓவியத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்பதும், எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை தொடங்கிய போது அக்கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை வரைந்து கொடுத்ததும் ஒரு காமெடி நடிகர் என்றால் நம்ப முடிகிறதா. ஆம் அவர்தான் நடிகர் பாண்டு.
நடிகர் பாண்டு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் பிறந்தவர். தமிழ் திரை உலகில் அவர் பல படங்களில் காமெடியனாக நடித்திருந்தாலும் அவரது உண்மையான திறமை ஓவியம் வரைவது தான்.
இவர் பேர் சொல்வதும் பெருமை கொள்வதும் சினிமாவுக்கே அழகு.. நடிகர் திலகத்தின் அசத்தலான ஆறு படங்கள்
நடிகர் பாண்டு சென்னை ஓவிய கல்லூரியில் படித்தார். தென்னிந்தியாவில் ஓவியத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிய ஒரே நபர் இவர் தான். சிறந்த ஓவியரான இவர் எழுத்துக்களை வடிவமைக்கும் கலைஞராக இருந்தார். இவரது மகன்கள் கேப்பிட்டல் லெட்டர்ஸ் என்ற லோகோ டிசைனிங் நிறுவனத்தை இன்றும் நடத்தி வருகின்றனர்.
எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்தபோது அதிமுக கொடியையும் கட்சியின் சின்னமான இரட்டை இலையை வரைந்து கொடுத்தவர் இவர்தான் என்பதும் இதற்காக அப்போதே அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை திடீரென தொடங்க முடிவு செய்த போது ஒரு மணி நேரத்தில் அவருக்கு கட்சி கொடியை வடிவமைத்து எம்ஜிஆரையே ஆச்சரியப்பட வைத்தார். மேலும் பாண்டுவின் மனைவியும் ஒரு மிகச் சிறந்த ஓவியர். பல பத்திரிக்கைகளுக்கு ஓவியம் வரைந்து கொடுத்துள்ளார்.
ஊமை விழிகள் திகில் பாட்டி.. கருணை உள்ளம் கொண்ட அம்மா நடிகை எஸ்.ஆர்.ஜானகி..!
நடிகர் பாண்டு எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு போஸ்டர் டிசைன் வடிவமைத்தும் கொடுத்திருக்கிறார். குறிப்பாக எம்ஜிஆரின் மிகச்சிறந்த வெற்றி படமான உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு போஸ்டர் வடிவமைத்தது இவர்தான்.
மேலும் சன் டிவி, சங்கர நேத்ராலயா உள்பட பல நிறுவனங்களுக்கு இவர் தான் லோகோ அமைத்துக் கொடுத்துள்ளார். 250க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு இவரது நிறுவனம் தான் லோகோ அமைத்துக் கொடுத்தது.
இவரது சகோதரர் இடிச்சபுளி செல்வராஜ் என்பவரும் ஒரு நகைச்சுவை நடிகர். இடிச்சபுளி செல்வராஜ் எம்ஜிஆரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியபோது தான் பாண்டு எம்ஜிஆருக்கு அறிமுகமானார். எம்.ஜி.ஆரின் அறிமுகம் காரணமாக அவருடைய சில படங்களில் பாண்டு நடித்தார்.
கடந்த 1970 ஆம் ஆண்டு மாணவன் என்ற திரைப்படத்தில் தான் நடிகர் பாண்டு அறிமுகமானார். அதன் பிறகு சுஜாதா கதை வசனத்தில் உருவான கரை எல்லாம் செண்பகப்பூ உள்பட பல படங்களில் நடித்தார். என்னுயிர் கண்ணம்மா, பணக்காரன், நல்ல காலம் பொறந்தாச்சு, நடிகன், சின்னத்தம்பி, தாலாட்டு கேக்குதம்மா உள்ளிட்ட ஏராளமான படங்களில் இவர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அஜித் நடித்த காதல் கோட்டை திரைப்படத்தில் இவரது காமெடி அசத்தலாக இருக்கும். கடந்த 2018 ஆம் ஆண்டு பஞ்சு மிட்டாய் மற்றும் இட்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்த நிலையில் அதன் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு நாடு முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் காலமானார்.