40 ஆண்டுகால திரை வாழ்க்கை, 7 ஆண்டுகள் ரகசிய காதல் என ராஜமாதா ரம்யா கிருஷ்ணனின் குறித்த பல தகவல்கள்!

Published:

கதாநாயகி, தெய்வ பக்தி மிக்க அம்மன், கவர்ச்சி கன்னி, வில்லி, ஒரு பாடலுக்கு ஆடக்கூடிய நடிகையாக என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து கலக்கியுள்ளவர் தான் ரம்யா கிருஷ்ணன். சுமார் 40 வருடங்களாக முன்னணி நடிகையாக சினிமாவில் ஜொலித்துக் கொண்டே இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இவர் சென்னையில் வசித்து வரும் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட ஒரு பிராமண குடும்பத்தில் 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் திரு கிருஷ்ணன்-மாயா தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். பழம்பெரும் நடிகரும் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியருமான திரு சோ ராமசாமியின் சொந்த தங்கை மகள் தான் இந்த ரம்யா கிருஷ்ணன்.

இவர் சிறு வயது முதலே பரதநாட்டியம்,குச்சிப்புடி என பல விதமான நடன கலைகளை கற்று ஏராளமான மேடைகளில் அரங்கேற்றமும் செய்தார். இவரது பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் செய்தித்தாள்களில் வந்ததால் பாரதிராஜா போன்ற பல இயக்குனர்களின் கதாநாயகி தேர்வுகளில் கலந்து கொண்டார்.

ரம்யா கிருஷ்ணன் முதன்முதலாக ஃபிலிம் கோட் நிறுவனம் தயாரித்து சித்ராலயா கோபு இயக்கிய வெள்ளை மனசு என்ற படத்திற்கு ஹீரோயினாக 13 வயது சின்ன பெண்ணாக நடித்துள்ளார். அப்போது அவர் 8 ஆம் வகுப்பு படித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் பிறகு படிக்காதவன், பேர் சொல்லும் பிள்ளை, காதல் ஓய்வதில்லை போன்ற பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். நடிக்க வந்து 8 ஆண்டுகள் ஆகியும் பெரிய வெற்றிகள் எதுவும் கிடைக்காமல் சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்த நேரத்தில் தான் இவரை கவர்ச்சி பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட அழைத்தனர்.

சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட நடிகர் விஜயகாந்தின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் என்ற படத்தில் ஆட்டமா தேரோட்டமா என்னும் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி புகழ்பெற்றார்.

1995 ஆம் ஆண்டு வெளிவந்த அம்மன் என்ற படத்தில் நிஜ அம்மனாகவே தோன்றி தனது சினிமா ரசிகர்களுக்கு தெய்வீக காட்சி கொடுத்தார். 1999 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா என்ற படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் அவருக்கு வில்லியாக துணிச்சல் மிக்க பெண்ணாக தனது கம்பீரமான குரலோடு நீலாம்பரியாக மிரட்டி புகழின் உச்சிக்கு சென்றார்.

படையப்பா படத்தால் தென்னிந்தியாவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஜப்பான் சிங்கப்பூர், லண்டன் மற்றும் பாரிஸ் போன்ற பல நாடுகளிலும் இவருக்கு அங்கீகாரமும், புகழும் கிடைத்தது. படையப்பா படத்திற்காக 1999 ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதையும் பிலிம் பேர் விருதையும் வென்றார்.

1990-களில் தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திரு கிருஷ்ணவம்சி இயக்கத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயம், சந்திரலேகா போன்ற படங்களில் கதாநாயகியாக ரம்யா கிருஷ்ணன் நடித்தார். ரம்யா கிருஷ்ணனின் இரண்டு படங்களை இயக்கிய கிருஷ்ணவம்சையின் மேல் காதல் ஏற்பட்டதோடு ரம்யா கிருஷ்ணனின் குறும்புத்தனமான பேச்சும் திறமையான நடிப்பும் கிருஷ்ண வம்சையை மிகவும் கவர்ந்துள்ளது. இப்படி ஆரம்பித்த இவர்களது காதல் பயணம் யாருக்கும் தெரியாமல் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் வரை தொடர்ந்துள்ளது. ஏழு ஆண்டு காதலுக்கு பிறகு 2003 ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் நாள் ரம்யா கிருஷ்ணன் கிருஷ்ண வம்சி திருமணம் சிறப்பாக நடைபெற்றது இந்த தம்பதிகளுக்கு ரித்விக் என்கிற ஒரு மகனும் உள்ளார்.

முதல் சந்திப்பில் காதலில் விழுந்த ரஜினி! லதா – ரஜினிகாந்த் காதல் கதை குறித்து பல தகவல்கள்!

சமீபத்தில் ரம்யா கிருஷ்ணன் அவரது கணவரை விவாகரத்து செய்துவிட்டார் என்றும், இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் பல விதமான வதந்திகள் வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேட்டி ஒன்றை வெளியிட்டார்.

அதில் நானும் எனது கணவரும் நல்ல தம்பதிகளாகவே வாழ்ந்து வருகிறோம். இப்போது நானும் என் கணவரும் மரத்தைச் சுற்றி டூயட் பாடி டான்ஸ் ஆடும் வயதில் இல்லை எங்கள் இருவருக்கும் எதிர்கால கடமைகள் இருக்கின்றன அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் இருவருக்கிடையே நல்ல புரிதல் இருக்கிறது என வெளிப்படையாக உறுதிப்படுத்தினார்.

 

மேலும் உங்களுக்காக...