எம்ஜிஆர் படத்துக்கு டியூன் போட மறுத்த எம்எஸ்வி. அப்புறம் நடந்தது என்ன?

By Sankar Velu

Published:

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் போன்ற அடைமொழிகளால் போற்றப்பட்டவர் தான் இவர். சினிமாவில் உள்ள அத்தனை விஷயங்களையும் நுணுக்கமாகத் தெரிந்து வைத்துள்ளவர் எம்ஜிஆர். அதனால்தான் தான் நடிக்கும் படங்களில் ரசிகர்களுக்குப் பிடிக்குற மாதிரி திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளை அமைக்கச் செய்வார்.

குறிப்பாக பாடல்களில் அதிகக் கவனம் செலுத்துவார். பெரும்பாலான பாடல்கள் எம்ஜிஆர் படங்களில் சூப்பர்ஹிட்டாக இருப்பதற்குக் காரணமும் இதுதான். அந்த வகையில் இசை மேதை எம்எஸ்.வி.யையே சோதித்து விட்டார் எம்ஜிஆர். அது என்ன சம்பவம்னு பார்ப்போமா…

எம்ஜிஆருடைய பல படங்களில் வில்லனாக நடித்த அசோகனுக்காக எம்ஜிஆர் நடித்துக் கொடுத்த படம் நேற்று இன்று நாளை. இந்தப் படத்திற்காக எம்எஸ்வி. இசை அமைத்தார். இந்தப் படத்துக்காக அருமையான டியூன்களை எல்லாம் போட்டுக் கொடுத்தார். அதைக் கொண்டு போய் அசோகன் எம்ஜிஆரிடம் கொடுக்க, அவரோ ஒரு பாட்டு கூட நல்லாவே இல்லைன்னு சொல்லி விட்டாராம்.

அடுத்த 10 நாளில் 40 முதல் 50 பாடல்கள் வரை புதிதாக இசை அமைப்பாராம் எம்எஸ்வி. அதை எடுத்துக்கொண்டு போய் எம்ஜிஆரிடம் அசோகன் கொடுப்பாராம். அதுவும் சரியில்லை என எம்ஜிஆர் சொல்லிவிட்டாராம். உடனே அசோகனும் எம்எஸ்வியிடம் சொல்லி இருக்கிறார். திரும்ப 30 டியூன் போட்டுக் கொடுக்கணுமாம் சின்னவர் (எம்ஜிஆர்) கேட்டாருன்னு சொல்கிறார்.

Asokan
Asokan

‘இனிமே உங்க படத்துக்கு டியூன் போடுறதா இல்லை’ன்னு சொல்லிவிட்டாராம். உடனே இந்த விஷயம் எம்ஜிஆரின் காதுகளுக்கு எட்டவே, நேராக எம்எஸ்வி.யிடம் வந்தாராம் எம்ஜிஆர். அவரைப் பார்த்து அவர் சொன்னது ஆச்சரியத்தை வரவழைத்தது. அவர் சொன்னது இதுதான். ‘விசு நீ போட்ட டியூன் எல்லாமே நல்லா பிரமாதமா இருந்தது.

இந்தப் பாடல்கள் எல்லாமே ஓகேன்னு சொன்னா அடுத்து அவர் சூட்டிங் ஆரம்பிச்சிடுவாரு. அப்படி ஆரம்பிச்சதுமே நான் படத்துல நடிக்க முடியாது. கால்ஷீட் இல்லையே. இருந்தால் தானே நடிச்சிக் கொடுக்க முடியும். டியூன் நல்லாலன்னு சொன்னதுக்கு இதுதான் காரணம். நீ போட்டதுல பல டியூன் நல்லா இருந்தது.

அதை என்னுடைய படங்கள்ல பயன்படுத்துறதா நான் முடிவே பண்ணிட்டேன்’ என்று எம்ஜிஆர் சொன்னதும் ஆச்சரியம் தாங்காமல் பார்த்தாராம் எம்எஸ்வி. இப்படிப் படப்பிடிப்புத் தேதிகளை ஒத்திப் போடுவதற்கு எம்ஜிஆர் பல நாடகங்களை ஆடுவாராம். அதில ஒன்று தான் இந்த நாடகம் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.