Puriyatha Puthir: கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய முதல் திரைப்படம் புரியாத புதிர். அதற்கு முன் பல இயக்குனர்களிடம் உதவியாளராக குறிப்பாக ராமராஜன், விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் கே.எஸ் ரவிக்குமார். இன்று முன்னணி இயக்குனராக இருக்கும் அவரின் முதல் படமாக சஸ்பென்ஸ் திரில்லர் அமைந்தது.
1989 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான டார்க்கா என்ற படத்தை மையமாக வைத்து தான் 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புரியாத புதிர் படம் வெளியானது. இந்த படத்தில் ரகுமான், ரகுவரன், சரத்குமார், ரேகா, ஆனந்த் பாபு, சிதரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஆர்.பி.சவுத்ரி, ஆர்.மோகன் ஆகியோர் இணைந்து தயாரித்த இந்த படம் வெற்றி படமாக அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் ரகுவரன் கொடுத்த அபார நடிப்பு என்றும் கூறலாம். இப்படத்தில் மனைவியை கொடூரமாக டார்ச்சர் செய்யும் ஒரு சைக்கோ கதாபாத்திரம் தான் ரகுவரனுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
அதில் ஒரு காட்சியில் வரும் ஐ நோ ஐ நோ என்ற ஒற்றை டயலாக்கை தொடர்ந்து பேசியது இன்று வரை மறக்க முடியாத விசயமாக இருந்தது. இந்த காட்சி குறித்து கே எஸ் ரவிக்குமார் அவர்கள் ரகுவரனிடம் கூறிய போது ஐ நோ என்ற ஒரு டயலாக்கை பல முறை வித்தியாசமாக சொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
ரஜினிக்கே டஃப் கொடுத்த ரகுவரன்.. ரசிகர்கள் ரசித்த வில்லன்.. வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா…?
அப்போது ரகுவரன் அது எப்படி முடியும் என்றும் கேஎஸ் ரவிக்குமாரை நடித்துக் காட்டுமாறு கேட்டுள்ளார். அப்போது கே எஸ் ரவிக்குமார் சுமார் 60க்கும் மேற்பட்ட முறை ஐ நோ ஐ நோ என வித்தியாசமாக நடித்துக் காட்டியுள்ளார்.
மேலும் தான் கூறிய எண்ணிக்கையை விட அதிகமாக ரகுவரன் ஐ நோ என்று சொல்ல வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அப்படித்தான் புரியாத புதிர் படத்தின் ஐ நோ காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு காட்சியில் ரகுவரனின் நடிப்பு அபாரமாக வெளிப்பட்டது.
எஸ்.ஏ ராஜ்குமார் இசையமைத்த இந்த படத்தின் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தான் இயக்கும் படங்களில் எல்லாம் கே எஸ் ரவிக்குமார் ஒரு காட்சியிலாவது வந்து விடுவார். அதன்படி இந்த படத்தில் முதல் காட்சியிலேயே ரகுமானை ஜெயிலில் இருந்து காப்பாற்றும் காட்சியில் வருவார்.