இந்தியக் கூட்டாட்சி தத்துவத்தில் மாநிலங்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தவும், பிராந்திய அளவிலான பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காணவும் மண்டல குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக, தென் மாநிலங்களின் உரிமைகள், நதிநீர் பங்கீடு, எல்லைப் பிரச்சனைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைத்து விவாதிக்கும் மிக முக்கியமான தளமாக தென் மண்டலக் குழு விளங்கி வருகிறது. இந்தத் தென் மண்டலக் குழுவின் முழுமையான கூட்டத்தை நடத்துவது எந்தவொரு மாநிலத்திற்கும் பெருமைக்குரிய விஷயமாகும். அந்த வகையில், வரலாற்று சிறப்புமிக்க இந்த கூட்டம் தமிழ்நாட்டில் இதுவரை மூன்று முறை மட்டுமே பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ள நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு நான்காவது முறையாக மீண்டும் தமிழக மண்ணில் அரங்கேறுகிறது.
தமிழ்நாட்டில் முதன்முறையாக இந்த தென் மண்டல குழு கூட்டம் 1967-ஆம் ஆண்டு நடைபெற்றது. இது இக்குழுவின் 5-வது கூட்டமாகும். பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற அந்த வரலாற்று சிறப்புமிக்க காலகட்டத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது அரசியல் ரீதியாக மிகப்பெரிய முக்கியத்துவத்தை பெற்றது. மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவத்தின் குரலாக ஒலித்த அண்ணா அவர்கள் இந்த கூட்டத்தை தலைமையேற்று நடத்தியது, தேசிய அளவில் தமிழ்நாட்டின் ஆளுமையை நிலைநிறுத்தியது. மொழி உரிமை, மாநிலங்களுக்கான அதிகார பகிர்வு போன்ற முக்கிய கோரிக்கைகள் இந்திய அரசியலில் வலுவாக விவாதிக்கப்பட்ட அந்த நேரத்தில், இந்த கூட்டம் தென் மாநிலங்களிடையே ஒரு புதிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது.
அதன்பிறகு சுமார் பதினொரு ஆண்டுகள் கழித்து, 1978-ஆம் ஆண்டு தென் மண்டல குழுவின் 16-வது கூட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மக்கள் நலத் திட்டங்களுக்கும், மாநில உரிமைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்த அவர், இந்தக் கூட்டத்தின் மூலம் அண்டை மாநிலங்களுடனான உறவை மேம்படுத்துவதில் தனி கவனம் செலுத்தினார். தேசிய அளவில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசு இந்தக் கூட்டத்தை மிகச் சிறப்பாக நடத்தி, தென் மாநிலங்களின் தேவைகளை மத்திய அரசின் கவனத்திற்கு வலுவாகக் கொண்டு சென்றது.
அதனைத் தொடர்ந்து, பதினான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 1992-ஆம் ஆண்டு தென் மண்டலக் குழுவின் 21-வது கூட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்றது. அந்த சமயத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இரும்புப் பெண்மணி, புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள் பதவி வகித்தார். இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கலுக்கு உள்ளான அந்தப் புதிய காலகட்டத்தில், மாநிலங்களின் பொருளாதார உரிமைகள் மற்றும் நதிநீர் பங்கீடு பிரச்சனைகள் தீவிரமாக இருந்த சூழலில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத ஜெயலலிதா அவர்களின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் நடைபெற்ற இந்தக் கூட்டம், தென் மாநிலங்களின் உரிமை சார்ந்த விவாதங்களில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்பட்டது.
தற்போது, 1992-ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் 34 ஆண்டுகள் கழித்து, 2026-ஆம் ஆண்டில் தென் மண்டலக் குழுவின் 31-வது முழுமையான கூட்டத்தை நடத்தும் அரிய வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு மீண்டும் கிடைத்துள்ளது. பல தசாப்தங்களுக்குப் பிறகு, தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில் இந்தக் கூட்டம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. ஜி.எஸ்.டி நிதிப் பகிர்வு, பேரிடர் மேலாண்மை, மற்றும் புதிய தொழில் முதலீடுகள் என தற்போதைய நவீன காலகட்டத்திற்கு ஏற்ப தென் மாநிலங்கள் எதிர்கொள்ளும் புதிய சவால்கள் மற்றும் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு வலிமையான தளமாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்தக் கூட்டம் அமையப் போகிறது.
பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா என தமிழகத்தின் மாபெரும் அரசியல் ஆளுமைகள் மட்டுமே இதுவரை இந்த தென் மண்டலக் குழு கூட்டத்தை தமிழ்நாட்டில் நடத்தியுள்ளனர். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வரிசையில், தற்போது முதலமைச்சர் தளபதி விஜய் இணைந்துள்ளார் என்பது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. மாநில உரிமைகளைக் காக்கவும், தென் மாநிலங்களுக்கிடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்கி கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தவும் இந்த 31-வது தென் மண்டலக் குழு கூட்டம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
