கடலுக்கு வீணா போற தண்ணிய வேடிக்கை பாக்குறது பழைய கணக்கு… அதை மறிச்சு தடுத்து, விவசாயி தாகம் தீர்க்குறது தான் இந்த தளபதியோட புது கணக்கு! 13 மாவட்டம், 27 தடுப்பணை… ஆட்டம் ஆரம்பம்! மழை வந்தா வெள்ளம், வெயில் வந்தா வறட்சின்னு புலம்புன காலம் மலையேறிடுச்சு! இனி வெள்ளம் வந்தா அடையாறுல தடுப்பு சுவர், வறட்சி வந்தா 1,628 இடங்கள்ல நிலத்தடி நீர் செறிவூட்டல்! இது வெறும் அரசாணை இல்ல… அதிரடி செயல் திட்டம்!
பருவமழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் வெள்ளநீரை சேமிக்கவும், தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு ஒரு முக்கிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் 27 புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அவர், இதற்காக 206.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த தடுப்பணைகளில் ஒன்று கரூர் மாவட்டம் மேலப்பாளையம் கிராமம் அருகே உள்ள அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் என அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்தார். மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரை தேக்கி வைத்து, விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நிலத்தடி நீரைச் செறிவூட்டும் நோக்கிலும், ஆற்றுப் படுகைகளில் மண்ணரிப்பை தடுக்கும் நோக்கிலும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 31.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு படுகை அணைகள் கட்டப்பட உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
நீர்நிலைகளை பாதுகாக்கும் மற்றொரு நடவடிக்கையாக, 1,628 செயற்கை நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகள் மாநிலம் முழுவதும் 35 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்காக 28.9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் மழைநீரை கடத்தாமல் நேரடியாக பூமிக்குள் செலுத்தி, வறட்சிக் காலங்களில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க முடியும். மேலும், தற்போதைய பாசன கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 30 மாவட்டங்களில் 695.42 கோடி ரூபாய் செலவில் நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களைப் பழுதுபார்த்து, புதுப்பிக்கும் 96 பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
பேரிடர் மேலாண்மை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னை அடையாறு ஆற்றின் கரையோரங்களில் வெள்ளத் தடுப்புச் சுவர்கள் கட்டும் பணிக்கும் அரசு முன்னுரிமை அளித்துள்ளது. 19 மாவட்டங்களில் பேரிடர் மேலாண்மைக்காக மேற்கொள்ளப்படும் 49 திட்டங்களின் ஒரு பகுதியாக, 218.29 கோடி ரூபாய் மதிப்பில் இந்தப் பணிகள் நடைபெறவுள்ளன. குறிப்பாக, அடையாறு ஆற்றின் குறுக்கே ஜாபர்கான்பேட்டை அருகே 25 கோடி ரூபாய் செலவில் இந்தத் தடுப்புச் சுவர் கட்டப்படவுள்ளது.
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும், அணையில நீர் இருப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 46 புதிய அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிட்டார். அதன்படி, கிராமப்புறங்களில் நீர் வளத்தையும் பாசனத் திறனையும் மேம்படுத்தும் வகையில் 10,000 புதிய குளங்கள் 650 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.
கிராமப்புறங்களில் உள்ள 7,500 கி.மீ. நீளமுள்ள வரத்துக் கால்வாய்கள் மற்றும் பாசனக் கால்வாய்களைச் சீரமைக்கும் பணிகளுடன், புதிய தடுப்பணைகள் மற்றும் கரைகள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். மாநிலம் முழுவதும் உள்ள 3,000 குக்கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 300 கோடி ரூபாயும், திருநங்கைகளின் பொருளாதார மேம்பாட்டிற்கான விரிவான திட்டங்களைச் செயல்படுத்த 3.17 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் அனைத்தும் விவசாயத்தை மேம்படுத்தவும், நீர்வளத்தைப் பாதுகாக்கவும் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
