தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே நிர்வாகத்தில் எந்தவித தொய்வும் இருக்கக் கூடாது என்பதில் முதலமைச்சர் விஜய் மிகவும் கறாராக இருந்து வருகிறார். மக்கள் மத்தியில் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு அமைச்சர்களின் செயல்பாடுகள்தான் மிக முக்கியக் காரணம் என்பதை அவர் நன்றாகவே உணர்ந்திருக்கிறார். இதன்காரணமாக, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் அமைச்சர்கள் அனைவரும் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், மக்கள் நலத் திட்டங்கள் எவ்வித தாமதமுமின்றி அடித்தட்டு மக்களைச் சென்றடைய வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்.
நிர்வாகத் திறமை மட்டுமன்றி, அமைச்சர்களின் பொதுவெளிப் பேச்சுகளும் அரசின் நற்பெயரைத் தீர்மானிக்கும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக உள்ளார். எனவே, பொதுமேடைகளிலும் ஊடகங்கள் முன்னிலையிலும் பேசும்போது வார்த்தைகளில் மிகுந்த நிதானம் தேவை என்றும், தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி அரசுக்குக் கெட்ட பெயரைத் தேடித் தரக்கூடாது என்றும் அவர் ஆரம்பத்திலேயே அமைச்சர்களுக்குக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். அமைச்சர்களின் தனிப்பட்ட பேச்சுகள் ஒட்டுமொத்த ஆட்சியின் மீதான பார்வையை மாற்றிவிடக் கூடாது என்பதில் அவர் மிக கவனமாகச் செயல்பட்டு வருகிறார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போதைய அரசியல் மற்றும் நிர்வாகச் சூழலைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் விஜய் மிகத் தீவிரமான புதிய தடை உத்தரவு ஒன்றை அமைச்சர்களுக்குப் பிறப்பித்துள்ளார். அதன்படி, அடுத்த 6 மாதங்களுக்கு அமைச்சர்கள் யாரும் தினசரி செலவுகள் மற்றும் வழக்கமான அலுவல் கோப்புகளைத் தவிர, வேறு எந்தப் புதிய திட்டக் கோப்புகளிலும் கையெழுத்து போடக்கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உத்தரவு தவெக அமைச்சரவையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திடீர் தடை உத்தரவுக்குப் பின்னணியில் மிக முக்கியமான காரணம் ஒன்று இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு அரசு ஒப்பந்தங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட பழைய ஒப்பந்ததாரர்கள் பலர், இப்போது புதிதாக அமைந்துள்ள தவெக அரசையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள அமைச்சர்களைத் தொடர்ந்து அணுகி வருவதாகத் தெரிகிறது. அமைச்சர்கள் யாரும் முதலமைச்சரின் கவனத்திற்குத் தெரியாமல், அவசரப்பட்டு புதிய ஒப்பந்தங்களை வழங்கிவிடக் கூடாது என்பதில் முதலமைச்சர் விஜய் மிகவும் உறுதியாக இருக்கிறாராம்.
பழைய முறைகேடான ஒப்பந்ததாரர்களுக்கு மீண்டும் ஏதாவது புதிய ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டால், அது இந்த புதிய அரசுக்குத் தேவையற்ற பெருத்த தலைவலியை ஏற்படுத்திவிடும் என்று முதலமைச்சர் கருதுகிறார். மேலும், ஊழலற்ற தூய்மையான நிர்வாகம் தருவோம் என்று மக்கள் மத்தியில் அரசுக்கு இருக்கும் நற்பெயரைக் கெடுத்து, எதிர்க்கட்சிகளுக்கு ஆயுதமாக மாறிவிடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்படியொரு தடை உத்தரவை முதலமைச்சர் பிறப்பித்திருப்பதாக அரசியல் விமரிசகர்கள் பார்க்கின்றனர்.
தற்போது தமிழக அரசியலில் நிலவி வரும் எதிர்க்கட்சிகளின் குதிரை பேர அரசியல் அச்சுறுத்தல்கள் ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் மாநில நிர்வாகத்தைத் தூய்மையாகவும் பவர்ஃபுல்லாகவும் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் முதலமைச்சருக்கு உள்ளது. இந்த இருமுனை சவால்களையும் சமாளிக்கும் வகையில், மிகவும் ஆழமாக யோசித்து முதலமைச்சர் விஜய் இந்த அதிரடி அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், இது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கூட்டும் என்றும் தவெக தரப்பில் நம்பப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
